புதிதாக என் அலுவலகத்தில் ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். ராஜஸ்தான்காரன். மனித வளத்துறையைச் சார்ந்த பெண் ஒருத்தி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவள். எனவே அவளுக்கு பெறுகின்ற வேலை தொடர்பான ஆட்கள் எல்லாம் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவனுடன் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டேன். அவனும் அவன் நண்பனும் ஒன்றாகத் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அவன் தமிழ்க்காரன். பேசிக்கொண்டிருக்கும் போது , ‘நம் அலுவலகத்தில் நிறையப் பேர் ஹிந்திக்காரர்கள்தான் ஆனாலும் ஏன் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை’ என்றான் ஆங்கிலத்தில். நான் சீண்டப்பட்டதாய் உணர்ந்தேன். சரட்டென எழுந்த ஒரு நியாமான வன்மம், அவனை ஏதாவது கேட்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது.
‘நீ எந்த ஊர்’, என்றேன்.
‘ராஜஸ்தான்’, என்றான்.
‘உன் மொழி எது?’
‘ஹிந்தி’ என்றான் பிரகாசமாக.
‘உண்மையிலேயே ஹிந்திதானா? பிராந்திய மொழி இல்லையா? இருக்கவேண்டுமே?’.
‘ஓ… அதுவா…’, என்று ஒரு இழுவை இழுத்தபின், ‘ராஜஸ்தானி’ என்றான்.
‘பிறகு ஏன் ஹிந்தி என்றாய்?’
‘இரண்டு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.’
‘பிறகு ஏன் ராஜஸ்தானி என்று ஒரு தனி மொழி வைத்திருக்கிறீர்கள்?’
‘இல்ல… பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றும் இல்லை.’, என்றான் பீதியுடன். மலங்க மலங்க விழித்த அவன் கண்கள் என் வெற்றியை உறுதி செய்தது.
‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஏன்னா, கிட்டத்தட்ட தமிழும் மலையாளமும் ஒன்றுதான். ஆனால் எந்த மலையாளியும் உன் மொழி என்ன என்று கேட்டால் தமிழ் என்று சொல்ல மாட்டான். மலையாளம் என்று தான் சொல்வான். அதுதான் சரியும் உண்மையும்.’.
இதற்கு அவன் எந்த மறுப்பும் சொல்லமாட்டான் என, அவன் விழிகள் எனக்கு முன்னமே சமிக்ஞை காட்டிவிட்டன. மிக வேகமாக ஏற்றுக் கொண்டதாய் தலையை அசைத்தான். எனக்கு ஒரு மாபெரும் திருப்தி. அதன்பின் அவனுடன் ஒரே காரில் ஒரு மீட்டிங்கிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது என்னோடு பேசும் போது அவன் மிக மிக கவனமாய் பேசினான். அதை நான் உணர்ந்தாலும், சகஜமாகவே பேசி வந்தேன்.
எக்காரணத்துக்காகவும் எவனொருவனும் தன் தாய்மொழியை மாற்றிச் சொல்லலாகாது. ஆனாலும், தன் தாய்மொழியைப் பற்றி உயர்வான எண்ணம் இல்லாதவனுக்கு, வேறு எந்த மொழியின் மீதும் மதிப்போ, அதன் பெருமிதங்களை அறிவது குறித்தோ எந்த பிரக்ஞையும் இருக்க வாய்ப்பு வெகு குறைவு. ஆனால், என்னை தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுத்துத் திமிறும் ஒருவனாகவே அவன் என்னைப் பார்த்தான். அவனைப் போல் என் தாய்மொழி என்ன என்று கேட்டால் ஹிந்தி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தானா? அல்லது நான், அப்படி அவன் நினைத்ததாக எண்ணிக் கொண்டேனா? இரண்டிலும் உண்மை இருக்கிறது.
இன்னொரு சம்பவம். மதுரைக்கு என் அப்பாயியின் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தேன். சென்னையில் மழை வலுக்கத் தொடங்கிய நாளன்று. டிசம்பர் ஒன்று. சென்னை - மதுரை அரசுப் பேருந்து. மழையாகையால் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை. முன்னிருக்கைகளில் சில பதுவைப் பெண்களும், சில அங்கிள்களும். வழக்கமாக நான் பின்னிருக்கைகளில் தான் அமர்வேன். எந்த இருக்கையில் அமரலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் சென்று பார்த்தால், சற்று முன்னர் போடப்பட்டிருந்த வாந்தியில் செம்மண்ணை அள்ளிப் போட்டுக் கழுவி விட்டதன் வடு இருந்தது. எனவே, எனக்கு அங்கே அமர ஒப்பவில்லை. மூன்று இருக்கைகள் தள்ளி வந்தமர்ந்தேன். எனக்கு முன் 5-6 வடஇந்திய இளைஞர்கள். பொருள் வேண்டி இடம்பெயரும் சமுத்திரம் ஒன்றின் சில துளிகள் அவர்கள். அப்போது எனக்கு திடீரென்று அவர்கள் மேல் பேரிரக்கம் வந்தது. எனக்கு இது பொன்ற பயணப் பொழுதகள் இளகிய மனம் படைத்தவனாகிப் போகிறேன். பேச மறுத்துப் போய், என் மனத்தின் ஈரப் பகுதிகளில் மோப்பம் பிடித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறேன். அப்படியான பொழுதுகளை பெரும் ஆசையுடன் எதிர் பார்க்கிறேன். ஆனால், அதன்பின் என்னைப் பீடிக்கப் போகும் வெறுமை குறித்தும் பயம் கொள்கிறேன். அதனால் தானோ என்னவோ, இதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ஒருசேர ஏக்கத்தோடும் வெறுப்போடும் எதிர்பார்க்கிறேன்.
புத்தகம் ஒன்றை எடுத்துப் போயிருந்தேன். ஜெயமோகனின் ‘நினைவின் நதியில் - சுந்தர ராமசாமி’. படித்துக் கொண்டிருந்தேன். வடஇந்தியர்கள் தான் எப்போதும் பான்பராக் மென்று கொண்டு இருப்பார்களே. என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவன், மழை பெய்து கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தான். எனக்கு நேரம் ஆக ஆக கோபம் ஏறிக் கொண்டே இருந்தது. வழக்கமாக பயணங்களில் நான் தான் பக்கத்திலிருப்போரை வெறுப்பேற்றுவேன், தூங்கி விழுந்து. இது புதிதாக இருந்தது. ஒருமுறை அவன் ஜன்னலைத் திறந்து எச்சிலைத் துப்பிய போது, ஒரு துளி திரவம் என் கைகளில் வந்து பட்டது. அது எச்சலா, தண்ணீரா என்றெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. எழுந்து அவன் முதுகில் பலத்த அறை ஒன்றை வைத்தேன். பெரும் சத்தம். என்னை விட பெரிய உடலும் வலுவும் கொண்டிருந்த அவன், என்னை நோக்கி அதிர்ச்சயும் கருணையை எதிர்பார்க்கும் கண்களையும் என்னிடம் காட்டினான். ‘கியா பய்யா?’ என்றான், மெல்லிய குரலில். ‘எச்சி துப்பறதா இருந்தா வெளிய போய் துப்புடா’ என்று கத்தினேன். அக்கத்தல் வெறுப்பில் உச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன். திடீரென்று ஒரு பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அவன் திருப்பி அடித்தால்? அதை வெளிக்காட்டாமல் இருக்க, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னேன். அவனுக்கு முதலில் புரியவில்லை. பின் அவர்களோடு இருந்த தமிழ்க்காரன் ஒருவன், அவனை சைகையால் விளக்க, அவன் லேசாக நகர்ந்து அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.
சில கணங்களுக்குப் பின் யோசித்துப் பார்த்தேன். அவன் ஏன் அவன் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு வந்தான்? அவன் ஊரில் மிக மதிக்கத்தக்க ஒருவனாக இருப்பானோ? அப்படி என்றால் இந்த அவமானத்தை அவன் எங்ஙனம் எடுத்துக் கொள்வான்? சொந்த ஊரில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அவமானப்படத் தேவையில்லையே என்று நினைத்திருப்பானோ?
இன்னும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன், அவன் நிலையில் நானும் என் நிலையில் அவனும் இருந்தால் என்ன ஆகும் என்று. நான் எதுவும் செய்திருக்க மாட்டேன். அவனைப் போலவே அமைதியாய் நகர்ந்து சென்றிருப்பேன். ஆனால், என்னால் திருப்பி என்ன என்று கூட கேட்க முடியவில்லையே என்று, என் இயலாமையை எண்ணி நொந்திருப்பேன். கண்கள் கட்டாயம் சில துளிகளையாவது சிந்தியிருக்கும்.
ஏன் அப்படி ஒரு கோபம் கொண்டேன் என்று எனக்கே, என் மேல் கடுப்பு. அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒன்று, நம் ஈகோவைக் கொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. மூன்று இருக்கைகள் தள்ளித் தான் அமர்ந்திருந்தான். கடைசிவரை அவன் கண்களைக் கூட சந்திக்க முடியவில்லை. குற்றவுணர்வுள்ள எனக்கே இப்படி என்றால், அடிபட்ட அவன் எப்படி இருந்திருப்பான்.
மேற்கண்ட இரு சந்தர்ப்பங்களிலும், என் பிழை மிக மிக வெளிப்படையானது. என் தரப்பை இன்னும் என் மென்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். சொல்லப் போனால் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். இந்நேரம் அவர்கள் இருவருக்கும் நம் சூழலைப் பற்றி என்னால் ஒரு எதிர்மறையான உண்டாகியிருக்கும். இது உண்மையோ இல்லையோ? ஆனால், என்னால் அவர்கள் சங்கடப் பட்டிருப்பார்கள். இனி நான் எப்போதும் இப்படித் தவறியேனும் செய்வதில்லை.

