நொபுரு கரோஷிமா - இந்தப் பெயரை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். யாரென்று தெரய வந்த பின் வெட்கத்தால் வெம்முகிறேன். இம்மாதம் 26-ல் இறந்து போயிருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
ஜப்பானியர். 24 ஏப்ரல் 1933-ல் பிறந்திருக்கிறார். வரலாற்றுத் துறைப் பேராசிரியராக்ப் பணியாற்றிருக்கிறார். இவருடைய ஆய்வுகள் தென்னிந்தியாவைச் சார்ந்து அதிலும் தமிழக வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். நானும் அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தேன். எல்லாம் நம் வரலாறே. தெற்காசிய வரலாற்றாசிரியர் என்று அவர் குறிப்பிடப்பட்டாலும், பண்டைய தமிழக வரலாறு சார்ந்தே அமைந்திருக்கிறது அவருடைய ஆய்வுகள். வரலாறு எப்போதும் கடந்த காலத்தின் தரவுகளின் மூலம், எதிர்காலத்தைக் கண்டடைய முயல்வதின்றி வேறில்லை. எனவே வரலாற்றினை அரசியலுக்காக படிக்காமல், சரிவரச் செய்வோர் எப்போதும் சமரசமில்லாத ஆட்களாகவே இருப்பர். எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் சிலர் அப்படி இருந்துள்ளனர். கல்லூரியில் ‘Religious Docotorine’ எடுத்த பாதிரியார் தம்புராஜ் அப்படிப் பட்டவர்களில் ஒருவர். திருச்சபையின் வரலாற்றைத் தெளிவுறச் சொன்னவர். அப்படிப் பார்க்கையில், நொபுரு கரோஷிமா இன்றைய நம் அரசியல்வாதிகள் சொல்லும் வரலாற்றைக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார் போலும், தன் தரவுகளால். தீவிரமான மாற்றுப் பார்வை ஒன்றை வைத்திருந்திருக்கிறார். எவரும் மறுத்தது போல் தெரியவில்லை. ஆனால், மௌனமாக, காரணமின்றி நிராகரிக்கப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
நான் சொல்லப் போகின்றனவற்றை நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம். ஏன், மேலதிகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நானும் அங்கிருந்தே தெரிந்து கொண்டேன். ஆனாலும், என் தெளிவுக்காக பின்வருமாறு தொகுத்துக் கொள்கிறேன்.
- உலகத் தமிழாராய்ச்சிக் நிறுவனம்(IATR - உ.த.நி) பல தமிழ் அறிஞர் பெருமக்களின் பெருமுயற்சியால் 1964-ல் நியூ டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் அமர்வு 1966-ல் கோலாலம்பூரில் நடந்திருக்கிறது.
- உ.த.நி. தொடக்கத்தில், முக்கிய ஆளாக இருந்தவர், தனிநாயகம் அடிகளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பாதிரி.
- 1967-ல் தி.மு.க. தேர்தலில் வென்று அண்ணாத்துரையின் தலைமையில் ஆட்சிப் பீடம் ஏறுகின்றது. 1968-ல் சென்னை(மதராஸ்)யில் நடப்பதாக முன்னமே திட்டமிடப்பட்டிருந்த உ.த.நி.ன் அடுத்த அமர்வு, ஆட்சி மாற்றத்தால், அரசியல் சாயம் சற்றே பூசப்பட்டு விடுகிறது. ஆனால், அதன் வீச்சு வெறுமனே அரசியலாக மட்டும் இல்லை என்பது மட்டும் தெளிவு.
- அதன் அடுத்தடுத்த அமர்வுகளும் அவ்வாறே. 1981-ல் மதுரை(அ.இ.அ.தி.மு.க - எம்.ஜி.ராமச்சந்திரன்), வரும் தேர்தலுக்கான விளம்பரமாக, ‘பாரு என் வெயிட்ட’ என்பது போலவே நடந்திருக்கிறது. 1985-ல் கோலாலம்பூர்(அ.இ.அ.தி.மு.க-எம்.ஜி.ராமச்சந்திரன்) - அதே வேலை.
- ஏழாவது அமர்வு, 1989-ல் மொரீஷியஸில் நடந்திருக்கிறது. நொபுரு கரோஷிமா, இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த அமர்வில் அவர் உ.த.நி.ன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
- எட்டாவது அமர்வு, 1995(அ.இ.அ.தி.மு.க - ஜெயலலிதா)-ல் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது. உ.த.நி. ஒருங்கிணைத்திருக்கிறது, நொபுரு கரோஷிமாவின் தலைமையில். அரசியல் நிகழ்வுகளையும், அமைப்பின் நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க முயன்றதாகச் சொல்லியிருக்கிறார். நமக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று?
- ஒன்பதாவது அமர்வு, ஜூலை, 2010(தி.மு.க.- கருணாநிதி)-ல் கோயம்புத்தூரில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசின் சார்பில், நொபுரு கரோஷிமாவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப் படுகிறது. அதற்கு பதிலாக, மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். அவை,
- நான்கு மாதங்கள் என்பது வெகு குறைவு. இன்னும் ஒரு ஆறு மாதங்கள் சேர்த்துக் கொண்டு, 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் ஏற்பாடு செய்வது சிறந்தது.
- அரசியல் நிகழ்வுகளும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது.
- 1995-ல் நடந்த எட்டாவது அமர்வில் முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் வெளியிடத் தயாராக 2005 முதல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய, அதாவது 2010-ன் தமிழக அரசு, வெளியிடுவதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுக் கொண்டிருந்த போதும்.
நொபுரு கரோஷிமாவின் முதல் கோர்க்கையைத் தவிர மற்றவை ஏற்கப்பட்டன. காரணம் நமக்குத் தெரியாதா என்ன? 2011-ல் தேர்தல். ஏற்கனவே இலங்கைப் பிரச்சினையில் மூக்கடி பட்டாயிற்று. அந்த வலிக்கு, இவ்விழாவினைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முயன்றிருப்பார்கள் போல.
நிற்க.
நொபுரு கரோஷிமா, தமிழுக்கான ஆராய்ச்சியில் புதுப்போக்குகளை திறந்து விட்டிருக்கிறார். நான் இன்னும் படித்து அவரை அறியவில்லை. அவர் தலைமைப் பொறுப்பேற்றது முதல், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். மதுரை அமர்வை, தன் அடுத்த தேர்தலுக்கான பலம் காட்டும் போட்டியாகவே எண்ணி நிகழ்த்தியிருக்கிறார். கருணாநிதியும் அஞ்ஞனம், ஆட்சி முடிவதற்குள், தான் முன்னின்று, அவ்விழாவினை தன் வாழ்வில் ஒருமுறை நிகழ்த்த ஆசைப்பட்டு நிகழ்த்தியிருக்கிறார். கருணாநிதி, விழாவுக்கு முன், தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொன்னார். அதையே சொல்லி லியோனி புகழ்ந்ததையும் காணும் பேறு பெற்றவர்கள், நாம்.
நொபுரு கரோஷிமா, 2010-ல் தான் பதவி விலகியிருக்கிறார். காரணம் என்னவென்று சொல்லத்தான் வேண்டுமோ? மனம் வெறுத்து, இயன்றதைச் செய்வோம் என்று இருந்தவர், போதும்டா சாமி என்று போயிருக்கிறார். இன்னொரு மனம் வருந்தச் செய்யும் செய்தி, அவருடைய நூல்களில் ஒன்று கூட இன்று வரை மொழிபெயர்க்கப் படவில்லை.
ஒரு மொழிக்கு, அதன் நிலவியல், பண்பாடு, அரசியல், மற்றும் கருத்துத் தளம் சார்ந்து ஆய்வுகள் அமையப் பெற வேண்டும். ஏனெனில், ஆய்வுகள் மறுப்பாய்வுகளை உண்டாக்கும். ஆய்வுகளும் - மறுப்பாய்வுகளும், உரையாடல் மூலம் கருத்தை உண்டாக்கும். அது, நாம் இனி செல்ல வேண்டிய பாதையைத் தெளிவுறக் காட்டும். அதுசரி, பெரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரின் ஆய்வு நூல்களே இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் போது, மறுப்பாய்வு எப்போது? உரையாடல் எப்போது?
என் எளிய வினாக்கள் சில. நொபுரு கரோஷிமாவின் மரணச் செய்தி, ஏன் என்னைப் போன்ற சாமானியனைச் சென்றடையவில்லை? நாளேடுகள் செய்திகள் வெளியிட்டிருக்கலாம். சாமானிய நாளேடுகளாக அறியப்படும், தினத்தந்தி போன்றவற்றில் இதன் வீச்சு அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை? எதற்கெடுத்தாலும் கூட்டம் போடும்/நடைபயணம் மேற்கொள்ளும்/அறிக்கை விடும்/கடிதம் எழுதும், நம் நலத்தை நம்மை விட அதிகம் விரும்பும், நம் அரசியல்வாதிகள் எங்கே? அல்லது, இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதை நாம் நிறுத்திக் கொண்டுவிட்டோமா? ஆர்வமில்லையோ?
என் பயங்கள் சில.
தமிழ், இதே வீச்சோடு எம் தமிழ் நிலத்தில் வாழுமா? இல்லை, தமிழின் எதிர்காலம், தமிழகம் அல்லாத, தமிழர் வாழும் நாடு / பகுதியா? அரசியல் கலக்காத தமிழ் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், அரசியலால் தமிழ் அழுக்கடையாமல் / மங்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்படவில்லை என்று சொல்வதற்கான முகாந்திரம் இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது. இருக்கலாம். தமிழ் தவிர்த்து, ஆங்கிலம் மட்டும் உரையாடல் மொழியாக இருக்கும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க துடிக்கும், எம் இனம் தேடுவது எதை? இரண்டாம் மொழியாகக் கூட, தாய்மொழியை எடுக்காமல் பிற மொழியை தேர்வு செய்யும் கூட்டம் சொல்ல வருவது என்ன? மொழியும் ஒரு அடையாளம் என்பதை மறந்துவிட்டோமா?
நிற்க.
பின்னகரவில்லை நாம். அதே நேரம், நாம் முன்னோக்கியும் நகரவில்லை. ஓடும் வரை தான் நீரும், மொழியும் சுத்தமாக இருக்கும். தேங்கினால்? சகதி. பின் சதுப்பு. சதுப்பிலிருந்து காலை எடுப்பது அவ்வளவு எளிதில்லை. அவ்வப்போது யோசித்துப் பார்ப்போம். தேங்கிவிட்டோமா நாம்?
நொபுரு கரோஷிமாக்கு அஞ்சலி. ஆங்கிலத்தில் அவர் பேட்டி ஒன்று உள்ளது. அது சொல்லட்டும் அவர் வாழ்நாள் கருத்தை. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
உதவிய இணைப்புகள்:
- http://www.jeyamohan.in/81216
- https://en.wikipedia.org/wiki/Noboru_Karashima
- http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=180&Itemid=253
- http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
- http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

No comments:
Post a Comment