எனக்கென, ஒவ்வொரு ஊருக்கும், தனிப்பட்ட மணமும் சுவையும் உண்டு. ஈரநெடி அற்ற மணமும், புளிப்பின் காய்ந்த சுவையும் திண்டுக்கல்லுக்கு. பழவாடையும் பேச்சின் சுவையும் மதுரைக்கு. சுகந்த மணமும் மண் வாசனையும் திருச்சிக்கு. சென்னைக்கு? எவ்வளவு நீ…………..ண்ட சிந்தைக்குப் பின்னும் என்னால் வகைப்படுத்த முடியவில்லை.
எல்லாவற்றிலும் ஒரு கலவையும் அதனால் உண்டான தனித்துவமும் கொண்ட அற்புதமான ஊர், சென்னை. இதில் என்னை பெரிதும் கவர்ந்தது, தேநீர்க் கடை. ‘மாஸ்டர், ஒரு டீ’ என்ற சத்தம் என் கைகளுக்கு தேநீரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். மற்ற ஊர்களில் உள்ளூர்க்காரனானாலும் டோக்கன் வாங்காமல், நமக்கான டீக்கு உத்திரவாதமில்லை.
சென்னையில், ஒரு சத்தத்தில் எனக்கான டீயை முன்பதிவு செய்யலாம். அடுத்த இரண்டு நிமிடங்களில் டீ என் கையில் இருக்கும். அதற்கு பெரும்பாலும் சிகிரெட்டே தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. வடைகள் வைக்கப் பட்டிருந்தாலும் சமோசாக்களே பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கின்றன. அதற்கான சட்னி பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. அதன் ஆதார சுவையை அனைவரும் சுவைக்க விரும்புகின்றனர் போலும். அதற்கும் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. நாளிதழ்களை ஒரு ஜான் அளவுக்கு கிழித்து கத்தையாக வைக்கப்பட்டிருக்கும், பிஸ்கட் பாட்டில்களுக்கு இடையிலோ அல்லது வளைக்கப்பட்ட சைக்கிள் சக்கரக் கம்பியில் கோர்க்கப்பட்டோ.
சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பணம் கொடுப்பது இங்கு வழக்கம். அதுவே என்னை ஆரம்பத்தில் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதுபோக, நான் சொல்வதே கணக்கு. இரண்டு சமோசா, ஒரு டீ, ஒரு கிங்ஸ் என்பன போன்ற சொற்கள், இங்கு கிராமத்துச் சொலவடைகள் போலப் புழங்கும். உரத்த சிரிப்பொலிகள் எந்நேரமும் அங்கு யாரோ ஒருவரால் எழுப்பப் பட்டுக் கொண்டே இருக்கும். மக்கள் கூடும் இடங்கள் என்றாலே அப்படித் தானே. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் டீ மாஸ்டர்களாக இருந்து நான் இதுவரை பார்த்ததில்லை. ஸ்டைல் என்ற சொல்லுக்கான பொருளை மிக அழகாக தங்களுக்கானதாய் இவர்கள் மாற்றிக் கொண்டார்கள் போல. சீனி போட்டு முதலில் கண்ணாடிட் டம்ளர்களை அடுக்கி வைப்பர். பின் பாலை ஊற்றுவார்கள். அதன்மேல் டீத்தூள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரை சரியான அளவில் கலப்பர். அது, தழுவிக்கொள்ளும் காதலர்கள் போல, ஒன்றோடொன்று கலந்து கடைசியில் ஒன்றாக மாறி, டீயாக உருவமெடுத்து நிற்கும். மேலே நுரை நிற்காததெல்லாம் ஒரு டீயா?. நுரைதான் டீக்கு கிரீடம். மாஸ்டர் அதற்காக இரண்டு மூன்று முறை ஆற்றி பக்கத்திலிருக்கும் ஒரு ஜானுக்கும் குறைவான திண்டில், கையால் ஒரு சுழற்று சுழற்றிவிடுவார். பம்பரம் போல அதுவும் திண்டிலிருந்து வழுவாமல்(இதுவும் வழுவமைதியா?) மூன்று சுற்று சுற்றி நிற்கும். பரிசாரகன் ஒருவன் இருப்பான். அவனைத் தீண்டி அது நம்மை வந்து சேரும். பெரும்பாலும் அவன் சின்னப் பையனாக இருப்பான். அவன் அடுத்த டீ மாஸ்டர் ஆவதற்காக அவ்வேலையைச் செய்து கொண்டிருப்பான்.
சமோசாக்கள் வான்கோழியின் முட்டைக்கு மூக்கு முளைத்து போல, பெருத்த அடிப்பாகம் கொண்டிருக்கிறது. எனக்கு, வெகுநாள் வரை முக்கோணமாக இல்லாத அதை சமோசா என்றழைக்கவே ஒரு மாதிரி இருந்தது. ஊட்டி, கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளையாவிட்டால் இந்த சமோசாவிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த ஒரு அம்சமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சென்னையில் ஐம்பது அடிக்கு ஒன்றிரண்டு டீக்கடை இருக்கும். சென்னையின் வீதிகள் எல்லாம் டீக்கடைகள் என்ற சரடால் கோர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றும். அது ஒரு சமூகக் கூடம். ஒரு டீக்கடையில் ஒருநாள் அமர்ந்தால் போதும், மொத்தத் தமிழ் நாட்டின் வட்டார வழக்கையும் கேட்டுவிடலாம். அவ்வகையில் அது தமிழ்நாட்டின் முகம்.

No comments:
Post a Comment