Pages

Monday, 22 December 2025

அன்னை

அவள் நடந்து சில கணம் கண்டிருக்கிறேன்.
கனத்த உடல்.
அகலச் சிரித்தால் மட்டுமே தெரியும் கருப்புப் பல் ஒன்று.
வெள்ளை நிறம்.
முகமதில் இரண்டங்குல இடைவெளியில் சிற்சில மச்சங்கள்.
கடும் சொற்கள்,
கருணை சுரக்கும் முலைகளென
அவள் அன்னையே தான்.
சம இருக்கையில் தான் நான் எப்போதும் அமர வைக்கப்பட்டிருக்கிறேன்.
காபி கொடுக்கப்படாமல் நான் அனுப்பப்பட்டதேயில்லை.

ஆங்கிலம் எனக்குச் சுத்தமாய்த் தெரியாதபோது ஆங்கிலத்திலும்,
பின் அரைகுறையாய் பழகியதும் அவள் தன் உடைந்த தமிழிலும் அளவளாவ முயன்றாள்.
இழுத்துச் சாத்திய கதவுக்குள்ளிருந்து அவளிடம் பேசிக் கொண்டேன்.  அவளதை அறிந்தாலும் காட்டிக் கொண்டதில்லை.  அதனாலேயே அவள் அன்னை.  என் அன்னை எனச் சொல்லமாட்டேன்.  ஏனெனில் அன்னை, அன்னை மட்டுமே.  உலகு புரக்கும் கருணை சுமக்கும் பெருங்கொங்கை கொண்ட அன்னை...

ஆம்... ஆம்... ஆம்... என எக்காளம் ஒலிக்கிறது.  எனக்குக் கேட்கிறது.  எங்கும் எதிரொலிக்கட்டும்.

Saturday, 29 August 2020

குற்றப் பரம்பரை - உணர்ச்சிக் குவியல்

வேயன்னா, அங்கம்மா, கூழானி, வையத்துரை, வில்லாயுதம், திருவேட்டை, சிகப்பி, துருவன், வஜ்ராயினி, ஹசார் தினார், முனி, சேது, வில்லியம்ஸ், விக்டர், விசக்குட்டை, பச்சமுத்து, ஆசாரி இப்படி பெருநாழி, கொம்பூதி, மற்றும் பெரும்பச்சேரி மக்களோடே கடந்த இரண்டு மூன்று நாட்கள் வாழ்ந்தேன். 

குற்றப்பரம்பரை.  கிட்டத்தட்ட என் ஊரின் வழக்கில் நான் படிக்கும் முதல் நாவல்.  இதற்கு முன் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ வாசித்திருக்கிறேன்.  ஆனால் அது இயல்பாக இல்லாமல், கொஞ்சம் வைரமுத்துவின் ‘முத்திரைகள்’ உண்டு.  அதுதான் நான் முதன்முதலாய் வாசித்த புதினமும் கூட.  குற்றப்பரம்பரை – வாராந்திர பத்திரிக்கைக்கு எழுதப்பட்டதாலோ என்னவோ, அது ஒவ்வோரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாய் அமைந்தது. 

வேயன்னா – இறுக்கமான மனம் கொண்ட, என் தந்தை மற்றும் தாத்தன் தலைமுறையின் முகம்.  குடிகாத்தலே அறமென துணிந்த மனங் கொண்டவர்.  ஆசிரியர் வேல. ராமமூர்த்தி நடித்த படம் பார்த்ததாலோ என்னவோ, வேயன்னாவாக அவர் முகமே என்னில் புதைந்து போனது.  வேட்டையாடப்படும் இனக்குழுவின் தலைவனுக்கான கூர்மையும், மனவுறுதியுமான ஆள்.  வையத்துரையின் கால் பற்றியது, சேதுவைத் தவறவிட்டது முதல், களவுக்குச் செல்வதில்லை என சத்தியஞ்செய்யும் இடம் வரை என்று எல்லா இடத்திலும் தலைவனுக்கான அளவுகோலில் இம்மிபிசகாமல் நிற்கிறார்.   காவல்த்துறையிடமிருந்து கலகம் செய்து தொடர்ந்து தொழிலை நடத்தினால், குலமழியுமென ‘தொலைநோக்குப்’ பார்வையால் கண்டதால்தான் அவர் சத்தியஞ் செய்தாரேயன்றி, வெறும் பாசத்தால் மட்டுமே இதைச் செய்தவரில்லை.   அப்படியாயின் சம்பங்கி ஆற்றை அடையும் முன், சேதுவை இவர் தொலைய விட்டிருக்க மாட்டர்.  உடன் சென்று மாண்டிருப்பார். கடைசிவரை அவர் ஒடுக்கப்படும் குழுவின், மனிதனின் முரட்டுத் தலைவனாகவே இருந்தார்.  எழுதிவைக்கும் கோட்பாடில்லை அவருக்கு, சொல் போதும். 

தான் கொம்பூதிக்காரனில்லையென, பசியால் செத்துக் கொண்டிருக்கும் கொம்பூதிக் கூட்டத்திற்கு தானியங்களைக் கொள்ளை கொண்டு வரும் வேயத்துரை முன், பெரிதாய் மறுக்காமல் இருக்கிறார்.  அந்த இயலாமையின் போது நொறுங்கி நிற்பதன்றி வேறு வழியில்லை வேயன்னாவுக்கு.  தன் கூட்டம் வாழ வேண்டும் என்பதே நோக்கம். அதுவே தலைவனின் அறம். 

கூழானி – குலத்தின் ஆதிக் கிழவி.  இன்பதுன்பங்களை கண்டுணரும், உச்சகட்ட விழிப்பில் வாழ்ந்த விலங்கின் மனம் கொண்டவள்.  ஒருவகையில் இவளும் ஒரு வேயன்னா. 

வையத்துரை – வேயன்னாவின் கூட்டத்திற்கான தளபதி.  ஏதோ ஒரு பந்தம் போல ஒட்டிக் கொண்டவன்.  நாடா நட்பு போல.  இவன்பொருட்டு வேயன்னாவின் தீண்டாமை வெறுப்பு வந்திருக்கவேண்டும்.  துருவன் –  கர்ணனாய் மாறுவதற்கு வையத்துரைதான் காரணம்.  இவனிடம்  கொம்பூதி  வைத்திருக்கும் நன்றிக்கடன் தான் பெரும்பச்சேரிக்காரனுக்காய் வேயன்னாவைத் தூண்டி, பெருநாழியைப் பகைக்கச் செய்தது.  ஒருபோதும் வைத்துரை பெரிய நாயகனாக நிற்கவில்லை, இவனின்றி இங்கு எதுவும் நிகழாது என்பதை மட்டும் நமக்கு உணர்த்தப்படுகிறது. 

விக்டர் – பேரன்பு கொண்ட மனிதன்.  இதைத்தவிர என்னிடம் இவரைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.  அனைத்தையும் புரிந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்துக்  கொண்டிருப்பது என்பது, கூரான பிளேடுகளை வாயில் வைத்துக் கொண்டு தீவிர இலக்கிய உரையாடலில் இருப்பதைப் போன்றது.

பச்சமுத்து – பெருங்கருணையைப் போல பேராசையும், பெருந்துரோகமும் அதே மதிப்பைப் பெருபவையே.  எதையும் விலையாகக் கோருபவை என, தூய விலங்காக வாழும் வியாபார ஞானி.

——————————————————————————————————————

ஜெயமோகன் கட்டுரைகளில் படித்த ஞாபகம், ‘இலக்கியம் நிகர் வாழ்க்கை’ என.  அப்படியாயின் இது நிகர் வாழ்க்கையே.  எங்கும் பிரச்சாரமில்லை.  குலக்கும்மியில்லை.  திருட்டு பற்றிய குற்றவுணர்ச்சியில்லை என்பதே, திருட்டுப் பொருளை கடவுளிடம் படைத்துண்ணும் போதே உணரமுடிகிறது.  காடு தாண்டி வந்த வேட்டைச் சமூகம்,  கொள்ளையடிப்பது என்பது தன் குழு வாழுவதற்கான அறமென அதைக் கண்டெடுத்தது என எழுந்து நிற்கிறது.  ‘அய்யோ.. அடுத்தவன் பொருள்’ என யாரும் நினைப்பதாகக் கூட இல்லை.  அந்தப் பொருட்களின் மதிப்பும் எவ்வளவு பெரிது என அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ‘வாழவேண்டும்’ என்பது மட்டுமே விதிக்கப்பட்டதாய், ஒதுக்கப்பட்ட முரடர்களின் வழி வேறேதுமில்லை போலும். 

‘வெளியே போ’ எனச் சொல்லப்படும் போது, அது எப்படி இருக்கும் என்பது பெரும்பச்சேரிக்காரனாய் இருந்தால் மட்டுமில்லை, கொம்பூதிக்காரனாக இருந்தாலும் தெரியும் என்பது துருவனை மீட்டு வரும் நிகழ்வில் தெரியும்.  நாடோடியன்றி வேறு யாருக்கும் பெரியமனம் வாய்ப்பதில்லை.  எனவே கொம்பூதிக்கு வாய்த்தது.  மலங்கலந்த கிணறைக் கண்ட பின், நெளியும் பழியுணர்ச்சிதான் எத்தனை தூய்மையானது.  ஆசாரியின் மனைவி காப்பாற்றப்படுவதை விட, இது தூய்மையானது.  சந்தையில் வெட்டப்படும் பெருநாழியின் ஒவ்வொருவர் கையும், காலும் அங்கங்களும் எவ்வளவு பெருமைமிகு பிழையீடுகள்.  அதே அளவு கீழ்மையானது, தவளையின் தத்தலில் படரும் மலம்.  ஆனால், இரண்டும் பழியுணர்ச்சிதான்.

மனிதனின் அத்தனை மேன்மைகளும் கீழ்மைகளுமாக காட்சிகள் தோறும் விரிந்த வண்ணம் இருக்கின்றன.  அதனாலேயே இது எனக்கு ஒரு நிகர் வாழ்க்கை.  பழியுணர்ச்சிதான் எத்தனை புனிதமானது?  அதுவன்றோ உரிமை கோருகின்றது.  அதுவன்றோ உரிமை மறுக்கப்படுபவன் பக்கம் பேசச் சொல்கிறது.  அதுவன்றோ மனிதம் பெருக்கெடுக்க வைக்கிறது?  ஆ… பழியுணர்ச்சிதான் எத்தனை கீழானது?  அதுவன்றோ அவமானத்தை எண்ணி, சக மனிதனை அழிக்கத் தூண்டுகிறது.  அதுவன்றோ அகங்காரத்தினால் விளைகிறது. அன்பும் கருணையும் தான் எத்தனை அழகானது.  வேயன்னா, தன் கூட்டத்தின் பால் கொண்ட அன்பு, சேதுவை விட்டு வரச் சம்மதித்தது.  அதுவே சேதுவிடம் சத்தயமும் செய்ய வைத்தது.  அதுவே வில்லியம்ஸையும் விக்டரையும் கொம்பூதி மக்களை நோக்கித் தள்ளியது.  பீயால் வீடு முழுதும் வீச்சமெடுக்க வைத்தபின்னும், நேரில் வந்து தன் மனத்தாங்கலைச் சொல்லிச் செல்ல வைத்தது.  அதுவே துருவனைத் தோளிற் சுமந்து வந்தது.  அதுவே சேதுவை சத்தியம் வாங்கச் செய்தது.  ஓ.. அன்பும் கருணையும் தான் எவ்வளவு அருவருப்பானது.  வில்லியம்ஸ் மனிதனிடம் கொண்ட அன்புதான், சேதுவை அவன் தாய் தந்தையிடம் இருந்து பிரித்தது.  வையத்துரையின் அன்பு சத்தியம் மீறி தானியம் திருட வைத்தது. 

இப்படியாய் நிறைந்திருக்கும் மனித உணர்வுகளோடு, இருந்ததாலேயே இது நிகர் வாழ்க்கையானது.  மொழியால் நான் உள்ளிழுக்கப்பட்டேன்.  தொய்யவிடாத உணர்வுகளின் கொந்தளிப்புகோடு இருந்ததால், அதில் எளிதாய் வாழப்பணிந்தேன்.  வாசிக்கப்பட வேண்டிய நாவலை, இவ்வளவு நாள் தள்ளி வாசித்தாலும், வாசித்துவிட்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

பி.கு : பெருநாழிக்காரர்களைச் சித்தரித்திருந்த விதம் எனக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.  முடமான பெருநாழி.  மனதில் முடமான பெருநாழியென என்னுள் பதிந்து போனது.  ஆச்சரியத்தின் காரணம், ஆசிரியர் பெருநாழிக்காரர்.  எழுதிய காலத்தில், கொஞ்சநாளேனும் தலைமறைவாய் இருந்திருப்பார்

Tuesday, 4 October 2016

எல்லை கடத்தல்

காவேரிப் பிரச்சினைக்குப் பின்னால், நான் பெங்களூரை விட்டு வெளியே செல்லவில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம்.  அதற்கு முன் ஒரு மாதமாக வீட்டில் அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்லிவந்தேன்.  எனவே நான் வீட்டிற்கு அல்லது தமிழ்நாட்டிற்குச் சென்று இரண்டு மாதங்களாகிவிட்டன.   குறைந்தபட்சம் சேலம் வரையாவது சென்று வருவது, பெங்களூர் வந்தபின் வழக்கமாகிவிட்டது.   தனித்திருத்தல் என்பது இவ்வளவு சுமை என்பதால் நிகழ்ந்த மாற்றம் இது.  பள்ளிமுதல் கல்லூரி, இப்போது வேலைக்குச் செல்லும் போதும் அறையில் குறைந்தது மூன்று பேருடனாவது இருந்து, நான் இன்னும் விடுதியில் கூட்டமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்து வருகிறேன்.  போகட்டும்.

பெங்களூர் வந்ததிலிருந்து செய்திகள் எனப்படுவது ஃபேஸ்புக்கில் வருவதுதான், புரளிகள் மற்றும் லைக்குகளுக்காக செறிவூட்டப்பட்ட செய்திகளும்தான்.  இவை கிட்டத்தட்ட புனைவுகளுக்கே சவால் விடக் கூடியவை.  எனவே அவற்றை ஒரு பொருட்டாக இப்போதெல்லாம் கவனிப்பதில்லை.  மேலோட்டமாக மேய்வதோடு சரி.  இதனால் 'கர்நாடகா-தமிழ்நாட்டு எல்லையில் பதட்டம்', 'மணப்பெண் நடந்து வந்து மணம்புரிந்தார்' இதையெல்லாம் செறிவூட்டப்பட்ட செய்திகள் என்று விடுத்திருந்தேன்.  நம் ஆட்களுக்கு இப்போதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் மேல் பெரும் காதல் வந்துவிட்டது போலும்.  அதிலும் 'உயர்வுநவிற்சி' அணியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமாக, பெங்களூர் - சேலம், சேலம் - திண்டுக்கல் என்று முன்பதிவு செய்யாமல் செல்வது எனக்கு விருப்பமானது.  சென்னையிலிருந்து என் ஊருக்குச் செல்வதைப் போலல்லாமல் இங்கு எப்படியாவது பேருந்தைப் பிடித்துவிடலாம்.  அதுவுமில்லாமல் முன்பதிவு செய்தால் பயணச் செலவும் இருமடங்குக்கு மேல்.  முன்பதிவு செய்யாமல் சென்றால் 286 ரூபாயில் என் வீட்டைச் சென்றடைய முடியும்.  தனியார் பேருந்துகளில் முன்பதிவுக் கட்டணத்தைப் பார்த்தால், குறைந்த பட்சக் கட்டணம் 650 ரூபாய்.  இது குளிரூட்டப்படாத, பின்னால் இழுத்துவிட்டுக் கொள்ளும் இருக்கை கொண்ட பேருந்தில்.  படுக்கை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.  அரசுப் பேருந்தில் நான் முன்பதிவு செய்ய முயலுவதில்லை.  ஏனெனில் எந்த முன்னறிவுப்புகளையும் பெறுவது அவ்வளவு எளிதில்லை.  தனியார் பேருந்துகளில் தனியாக பேருந்து நடத்துநர் எண்ணைக் கொடுத்திருப்பார்கள்.  எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமை இரவு நான் கிளம்ப வேண்டும்.  காலை அலுவலகம் வந்தேன்.
என் அலுவலகத்திற்கு கணசமான நபர்கள் ஓசூரிலிந்து வருகின்றனர்.  'சும்மா கேட்டுத்தான் பார்ப்போமே' என்று அவர்களிடம் கேட்டால், செய்திகளில் வருவது போல், இன்னும் பேருந்துகள் இருமாநிலங்களுக்கும் இடையில் இயல்பான நிலையில் இயக்கப்படவில்லை.  எல்லை வரை இரு மாநிலப் பேருந்துகளும் வந்து தத்தம் எல்லையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர் என்று அவர்கள் சொன்னதும், எனக்கு அப்படிச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் வந்தது.  ஆனால், நான் அடுத்தநாள் காலையிலேயே என் அம்மாவை 10-11 மணிக்குள்ளாக மதுரைக்கு சிகிச்சை ஒன்றுக்காக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.  தனியார் பேருந்து வலைத்தளத்தில் 'பைசா'வை நோட்டம் விட்டேன்.  650 ரூபாய்க்கு பெங்களூர் - திண்டுக்கல் பேருந்து சிக்கியது.  ஒரே ஒரு இருக்கை மட்டுமே மீதமிருந்தது.  முன்பதிவிட்டுவிட்டேன்.  இரவு 9:30 க்கு பேருந்து.

குறித்த நேரத்திற்கு, மடிவாலாவில் இருக்கும் அந்த பேருந்தின் அலுவலகத்திற்குச் சென்றால், பேருந்து தயாராக இருந்தது.  திருப்தியுடன் ஏறி அமர்ந்தேன்.  உள்ளே ஆறேழு பேர் தான் இருந்தோம்.  என் இருக்கையில் அமர முற்பட்டபோது,  'டேய், அலோசியஸ் டேய்' என்று மைனர் செயின் போட்ட, கருத்த வட்ட முகம் கொண்ட ஒருவன் என்னை அழைத்தான், கடைசி இருக்கைக்கு முந்தின இருக்கையிலிருந்து.   யாரென்று தெரியாமல், அருகில் சென்றேன்.  கிட்டத்தில் பார்க்கும் போது தான் அவன் என்னோடு இளங்கலையில் படித்தவன், அர்ஜூன் (எ) அருண்பாண்டியன் என்று கண்டேன்.  கிட்டத்தட்ட ஐந்நாண்டுகளுக்குப் பின் சந்திக்கிறோம்.  இரவு முழுவதும் கதை பேசிக்கொண்டே சென்றோம். 

வெள்ளிக்கிழமைகளில் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும்.  இன்று அப்படி இல்லை.  எல்லையை அடைந்ததும், எல்லோரும் வெளியே எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள்.  நானும் தமிழன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.  எட்டிப் பார்த்தால், கர்நாடக எல்லையில் கர்நாடகப் பேருந்துகளும், தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாட்டுப் பேருந்துகளும் நின்றிருந்தன.  மக்கள் இரு எல்லைகளிலிருந்தும் நடந்து வந்து கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.  அப்போதே முடிவு செய்திருந்தேன்.  திரும்பி வரும்போது இப்படித்தான் வந்தாக வேண்டும் என்று.  இடையில் தேநீருக்காக பேருந்து நின்றது.  அப்போது கவனித்தேன், அங்கு நின்றிருந்த பேருந்துகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள் கர்நாடகாவிலிருந்து வந்தவை.  ஆனால், ஒரே ஒரு பேருந்து மட்டுமே KA என்று இருந்தது.  மீதமுள்ள அத்தனை பேருந்துகளும் வேறு மாநிலத்தின் பெயர்ப்பலகைகளையே கொண்டிருந்தன, பாண்டிச்சேரி, கேரளா என்று.  நான் வந்த பேருந்து கேரளப் பதிவெண்.  CD என்று கூட ஒன்று பார்த்தேன்.  இது எந்த மாநிலம் என்று யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தவும். 

வீட்டற்குச் சென்று, ஞாயிறு மாலை சேலம் பேருந்த ஏற வந்திருந்தேன்.  பெங்களூரில் இருந்த என் அண்ணன் வீட்டிற்கு, என் சித்தி கோழிக்குழம்பு வைத்து என்னிடம் கொடுத்து விட்டிருந்தனர்.  அதையும் எடுத்துக் கொண்டு, சேலம் வந்தேன்.  நள்ளிரவு 12 மணிக்கும் நிறைய பேருந்துகள் ஓசூருக்கு ஓடிக் கொண்டிருந்தன.  பெங்களூர் பலகையிட்ட பேருந்துகளும் ஓசூர் வரைதான் செல்லும் என்று நடத்துநரால் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  அப்படி ஒரு பேருந்தில் ஏறி, அதிகாலை 3:30 மணியளவில் ஓசூர் வந்தடைந்தேன்.

என்னைப் போல, அங்கே கிட்டத்தட்ட 300 பேர் அங்கிருந்து எல்லையை அடைய பேருந்துக்காக காத்திருந்தனர்.  நானும் ஐக்கியமானேன்.  அங்கிருந்த டேக்ஸியில் 150 ரூபாய் கேட்டார்கள் தலை ஒன்றுக்கு, பெங்களூர் வரை.  கொள்ளை விலை.  நான் அமைதியாக நகர்ந்து வந்து கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்று கொண்டேன்.  முதலில் இரு பேருந்துகள் வந்தன.  பிலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் போல மொத்தப் பேரும் ஓடினர்.  நானும், ஜோடியாக வந்திருந்த இளைஞர்களும், இன்னும் சிலரும் மட்டும் ஓடாமல் காத்திருந்தோம்.  பின் இன்னும் ஒரு பேருந்து வந்ததும், கூட்டம் வற்றியிருந்தது.  அடுத்த பேருந்தில் நானும் ஏறி இடம் பிடித்து அமர்ந்துவிட்டேன்.  நடத்துநர் சீட்டுக் கேட்டு வந்து கொண்டிருந்தார்.  எவ்வளவு என்று விசாரித்ததில் 16 ரூபாய் என்று சொன்னார்.  சமர்த்தான பிள்ளையாக சில்லரை கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டேன்.  எனக்குப் பின்னிருக்கையில் பெரியவர் ஒருவர் 'எட்டு ரூபாய் தானப்பா?' என்றார்.  'இல்லீங்கய்யா... 16 ரூபாய்... அதான் வாங்க எங்களுக்கு சட்டம்' என்றார், நடத்துநர்.  அவர் வழக்கமாக வந்து செல்பவர் போலிருக்கிறது.  'என்னதாய்யா... நடக்குது.. எட்டு ரூவா டிக்கெட்ட பதினாரு ரூவான்னு குடுக்குறாங்க... கொள்ள.. கொள்ள... எல்லா கொள்ள '  இன்னும் என்ன என்னவோ சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்.  நான் என் தலையைத் திருப்பாமல், என் மொத்த கவனமும் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தேன்.  பிறகு தான் இன்னொன்றையும் கவனித்தேன்.  எங்களின் அருகில் இருந்த அத்தனை இளைஞர் கூட்டம் அப்படித்தான் இருந்தது.  தலையைத் திருப்பவில்லையே தவிர, எல்லோரின் கவனமும் அவர் பேச்சில் இருந்தது.  அது முகங்களில் தெரிந்தது.  இதுதான் இன்று பெருநகரில் பணிபுரியும் இளவயதினர் பெரும்பலோனோரின் எண்ணம்.  நான் கூட நடத்துநரிடம் இதைப் பற்றிப் பேசலாமா என்று நினைத்தேன்.  யாராவது தொடங்கினால், எல்லோரும் கூடுவர் என்ற நம்பிக்கை.  கடைசிவரை இப்படியே கற்பனையிலேயே நிறுத்தம் வந்துவிட்டது.


எல்லை வந்தது.  இறங்கினேன்.  இருநூறு முதல் முந்நூறு மீட்டர் தொலைவில் தான் கர்நாடகப் பேருந்துகள் நின்றிருந்தன.  இடையில் எல்லையாக குறிக்க, 'வரவேற்பு, நன்றி' சொற்கள் பொறித்த வளைவு.  பெயர் தான் வளைவு, செவ்வக வடிவில் இருக்கும்.  நான் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.  'எல்லையைக் கடக்கப் போகிறேன்' என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.  அப்படிச் சொல்லுவதே ஒரு மெல்லிய கிளர்ச்சியை உண்டாக்கியது.  எல்லையை மீறுவதுதான் எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பையும் ஒரு விதமான திகிலையும் அளிக்கக் கூடியது.  இரு எல்லைகளிலும் இரு மாநிலக் காவலர்களும் நின்றிருந்தனர்.  தூக்கம் அப்பிய, ஆர்வமற்ற, சலிப்பு நிரம்பிய முகங்கள் அவை.  மின் விளக்குகளால் அப்பகுதி முழுக்க ஒளி படர்ந்திருந்தது.  இதற்கு முன் நான் இப்பகுதியைக் கடக்கும் போது எனக்கு எதுவும் தோன்றியதில்லை.  இப்போது இந்த காவேரிப் பிரச்சினையில் இப்படியான பதட்டம் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பின் இந்தச் சூழலில் நடப்பதை எண்ணி நானே சாகசம் செய்வதைப் போன்ற கற்பிதம் செய்து கொண்டேன்.

நடக்கும் போது, ஏதாவது பிரச்சினை வந்தால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.  ஒருநாளுக்குத் தேவையான உணவாக, கையில் இருக்கும் கோழிக்கறியைத் தின்று கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன்.  அங்கு நடந்த ஒரு உரையாடலைக் கவனித்தேன்.  இரு இளைஞர்களை டிக்கெட் பரிசோதகர் திட்டிக் கொண்டிருந்தார்.  அவர்கள் ஏதும் பேசவில்லை.  'இத்தன பேரு பேசாம டிக்கெட் வாங்கிட்டு போறேங்க.  ஒங்களுக்கு என்ன சார்?  பதினாறு ரூவானா பதினாறு ரூவாதான்.  அவர் போடுறது தான் டிக்கெட்.  நாங்க போடுறதுதான் ஃபைன்.  முன்னூரு ரூவா எடுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த இரு பையன்களும் டிக்கெட் எடுக்காமல் வந்திருக்கலாம்.  அல்லது  ஏன் இவ்வளவு விலை என்று நடத்துநரிடம் வினவியிருக்கலாம், அதனால் நடத்துநர் சண்டை பிடித்துக் கொண்டே கடைசி நிறுத்தம் வரை வந்திருக்கலாம்.  எது எப்படியானாலும் கொஞ்சம் பொறுப்போடு அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.  சென்னையில் இரவு நேரப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.  அதுபோலத் தான் இதுவும் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் அவர் அதை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

தமிழ்நாட்டு எல்லைக்குள் கர்நாடக தனியார் பேருந்துகள் பெங்களூரு செல்ல, சாமிபாடல் உரக்க ஒலிக்க நின்றிருந்தன.  எல்லாப் பேருந்துகளும் படியில் பிதுங்கும் அளவுக்கு நிறைந்திருந்தன.  கடைசிப் பேருந்தில் நிற்பதற்கு இடம் இருந்தது.  ஓடி ஏறிக்கொண்டேன்.  விலை என்ன என்று கேட்டவில்லை என்பது மேலே ஏறிய பின் தான் உறைத்தது.  வேறு வழியுமில்லை.  இன்னும் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகம் தான் ஆகும்.  நான் ஏறியது தான் அப்போது கடைசிப் பேருந்து, இதைவிட்டால் அடுத்த பேருந்து எப்போதென்று தெரியாது.  மடிவாலாவுக்கு எவ்வளவு என்று கேட்டபோது, அவன் 50 ரூபாய் என்றான்.  மெல்லிய ஆச்சரியத்துடன் காசு கொடுத்தேன்.  பின் இறங்கும் வரை, அரசுப் பேருந்தில் பணிபுரிபவர் பேசியதையும், தனியார் பேருந்துக் காரன் பேசியதையும் நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்தேன்.

Monday, 3 October 2016

சிறுகதை : ஏன் அழுதேன்?

திருவான்மியூர் கடற்கரையில், 'ஜூலி, நில்லு', இப்படி நான் கத்திக் கொண்டு ஓடவும்,  ஜூலிக்கும் குஷி தாங்கமுடியவில்லை.  ஒரே ஓட்டம் தான். என்னிடம் சிக்காமல் ஓடுவது எப்படி என ஜூலிக்கு நன்கு தெரியும்.  ஓடி நான் பிடிக்கும் போது எப்படியும் மண்ணில் புரண்டுவிட வேண்டியிருக்கும். கடற்கரை மணல் எவ்வளவு நெருடும் என டிஷர்ட்டுக்குள்ளும் 3/4-க்குள்ளும் சென்ற பின் தான் தெரியும்.  ஆனாலும் நாங்கள் இருவரும் மண்ணில் புரண்டு விடாமல் விளையாடவே முடியவில்லை.  ஜூலிக்கும் என் மேல் மணலள்ளிப் போடுவதில் அலாதிப் ப்ரியம்.  மண்ணள்ளிப் போட்டபின், ஜூலியின் முகத்தில் அதை என்னால் பார்க்க முடியும்.  வீட்டுக்குப் போனதும் இருவருக்கம் என்னுடைய குளியலறையில் ஒன்றாகத்தான் குளியல்.  மாறி மாறி இருவரும் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொள்வோம்.  இல்லை இல்லை.  நான் ஜூலி மேல் தெளிப்பேன்.  ஜூலி தன் முதுகின் மேல் உள்ள நீரை உடலைக் குலுக்கி, என்மேல் இறைப்பான். அவன் அல்ஷேஷன் வகை.  அதனால் குலுக்கலில் தண்ணீர் நிறையவே இறைக்கப்படும். தினமும் காலை நாங்கள் இருவரும் அங்கு போவது வழக்கம்.  அதானாலேயே சில நாட்கள் அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்ல நேர்ந்ததும் உண்டு.

என்னால் தான் அவனுக்கு என் பெற்றோர் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
பிரசவம் தாமதமான படியால், நான் பெண்ணாகத்தான் இருப்பேன் என முடிவுகட்டி, என் அம்மாவும் அப்பாவும் எனக்கு சூட்டத் தேர்ந்தெடுத்த பெயர்தான் 'ஜீலி'.  இருவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக,  பையன் பிறந்தான், அது நான்.  பையனுக்கு பெயர் என்ன வைக்கலாம் என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கவில்லை.  ஆதலால், தன் அப்பாவின் பெயரை வைக்கலாம் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார்.  என் அம்மா, தன் அப்பாவின் பெயரை வைக்கலாம் என அடம் பிடிக்க, இருவரின் பெயரையும் சேர்த்து, எனக்கு வைத்து, பீட்டர் சவரிமுத்து என் அழைக்கப்படலானேன்.  அப்பா வீட்டில் இருக்கும் போது சவரிமுத்து என்று என் அம்மாவின் அப்பாவுடைய பெயரைச் சொல்லித் தான் அம்மா அழைப்பாள்.  அப்பா மெல்லிய முறைப்பைக் காட்டுவார்.  அதில் ஒரு மெல்லிய சந்தோஷம் என் அம்மாவுக்கு.  ஆனால் யாராவது என்னை சவரிமுத்து எனக் கூப்பிட்டால், 'பீட்டர்னு கூப்டுங்கங்க, அதான நல்லா இருக்கு.  நாங்க அப்டித்தான் கூப்டுறது' என்பாள்.  சவரிமுத்து என்பது தன் தகப்பன் பெயரானாலும், மாடர்னாக இல்லை என்ற மனக்குறையை அப்படி வெளிப்படுத்துவாள்.

பெசண்ட் நகர் கடற்ரகரையும், திருவான்மியூர் கடற்கரையும் எனக்கு மிகவும் பிடித்த கடற்கரைகள்.  நான் மனம் செயலற்று இருக்கும் நேரங்களில் எல்லாம் அங்குதான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கட்டாயம் ஜூலியும் உடன் இருப்பான்.  சூரியன், நிலா எதன் ஒளியின் மீதும் கடற்பரப்பைக் காண்பதில் எனக்கு உவப்பில்லை.  கரிய இருட்டில் உள்ள அந்த வெளிச்சத்தில் பார்ப்பதுதான் பிடிக்கும்.  பெரும் கோப்பையில் நிரப்பப்பட்ட மதுவைப் போன்ற தோற்றத்தைத் தரும்.  குடிப்பதற்கு முன் தட்டிக் கொள்ளும், கோப்பையைப் போல அலை நுரை தள்ளி கரையில் முட்டிச் செல்லும்.  இங்கு சுமியுடன் நான் வரும் போதெல்லாம், நான் காதலர்களை ஓரக்கண்ணில் பார்த்து, மனதுக்குள் சிரிப்பதைக் கண்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள்.  'போடி, கருப்பி' என்பேன்.  உடனே கோபித்துக் கொள்வாள்.  எனக்குக் கருமைதான் கவர்ச்சி.  அதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.  அப்படியான நாள் இன்று.

'அது எப்டிடா கருப்பு கலரு பிடிச்சிருக்கு? பொய் சொல்ற'

'இல்லடி, அது அப்படித்தான். நா பாத்த எல்லா அழகான பொண்ணுங்க எல்லா கருப்பாத்தான் இருந்தாங்க'

மற்ற நாட்களில், இந்நேரம் அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, தன்னை என்மேல் உரசிக் கொண்டிருந்திருப்பாள்.  அந்த வெப்ப மூச்சுக் காற்றை, மூன்று நான்கு முறையாவது நான் சுவாசித்திருந்திருப்பேன்.   நான் சிகிரெட் இப்போதுதான் குடித்து வந்திருப்பதைக் கண்டுபிடித்து, செல்லக் கடி ஒன்றை என் தோளில் பதிந்திருப்பாள்.  இது எதுவும் நடக்காததாலும், நடப்பதற்கான முகாந்திரம் தெரியாததாலும்,  என்னவோ தவறாக இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

'உங்க அம்மா ரொம்ப ஃபேர் தானடா.  அப்ப அவுங்க அழகா இல்லையா'

இப்படியான கேள்வியை அவளைத் தவிர யாரும் கேட்க முடியாது என்று தோன்றும்.  

'அவுங்க அழகுதான்டி.  ஆனா எனக்கு கருப்புதான் ரொம்ப பிடிக்கும்'

'பொய் சொல்ற.  ஜாக்கி ஷோரூம்-க்கு போனப்ப, நீ அங்கிருந்த வடஇந்தியப் பொண்ண நீ பாத்த.  நா உன் மோதிர விரல்ல மோதிரத்த சுத்திக்கிட்டிருந்தேன்.  வருடிக்கிட்டும் இருந்தேன்.  நீ கண்டுக்கவே இல்ல'

கிடிக்குப்பிடி போட்டுவிட்டாள்.  ஆமாம், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.  நானே மறந்துவிட்டேன்.  அவள் துல்லியமாக ஞாபகம் வைத்திருந்தாள்.  

'சிகப்பா இருந்தா சட்டுனு பார்க்கத் தோணும்டி ஆனா சலிச்சிரும்.'

'ஆனா நீ அன்னக்கி நா உன்னத் தொட்டுட்டு இருக்கது கூடத் தெரியாம அவளயே பாத்துக்கிட்டிருந்த.  அவளும் அவ சப்ப மூக்கும்.  லோ நெக் வேற'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.  என்ன சொன்னாலும் ஒரு பிடி பிடித்து விடுவாள் என்று எனக்குத் தெரியும்.  நான் அவள் மார்பகத்தை என் கவனம் தவறிப் பார்த்திருந்தேன்.  அதைத் சொல்லிக் காட்ட வருகிறாள்.  நான் இல்லை என்று சொன்னால், குதறி விடுவாள்.  ஆமாம் என்று சொன்னால், 'சரி நான் போறேன்' என்று நடையைக் கட்டிவிடுவாள்.  அதுவும் இல்லாமல், நான் கடையிலிருந்து கிளம்பும் வரை வேறு விற்பனைப் பெண்கள் வரவிடாமல் அவளே என்னிடம் பேசிக் கொண்டேயிருந்தாள்.  நானும் வழிந்திருந்தேன்.  வெளியே வரும்போது சுமி என் தொடையில் கிள்ளினாள்.  செல்லமாகத்தான் கிள்ளினாள் என்று நினைத்துக் கொண்டேன்.  இப்போதுதான் ஏன் என்று புரிகிறது.  கடையிலிருந்து வந்தபின், ஓரிரு நாட்களில் என் வாட்ஸ்-அப்பிற்கு ஒரு புதிய எண்ணிலிருந்து செய்தி வந்திருந்தது.  யாரென்று அந்த எண்ணின் புரொபைல்-பிக்சரை பார்த்தும் தெரிந்துபோனது, அந்த கடையிருந்த பெண்.  சிறிதுநேரம் ஏதேதோ கேட்டாள்.  பின் சந்திக்கலாமா என்று கேட்டாள்.  நானும் சரி என்று சொல்லியிருந்தேன்.  அந்த தகவல்களை என் அலைபேசியிருந்து அழிக்காமல் வைத்திருந்தேன், அதுவே என் வழக்கமும் கூட.  சுமி என் அலைபேசியை எடுத்துப் பார்ப்பாள் அது அவள் வழக்கமும் கூட.  அதைப் பார்த்திருப்பாள் என்று புரிந்து கொண்டேன்.

'சிகப்பும் அழகுதான்டி' என்றேன், பேச்சை மாற்றும் விதமாக.

'அப்போ நான் அழகா இல்ல தான'

ஆண்டவா, எப்படியாவது இந்த பேச்சை விட்டு காப்பாத்து என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமல், நேராக அமர்ந்திருந்தேன்.  என் அகக்கண்கள் அனைத்தும் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தன.  அவளும் அப்படித்தான் அமர்ந்திருந்தாள்.    கனமான மௌனம் தான் நம்மை முட்டாள் தனமாக பேச வைக்கும்.

'சரிடீ, அப்டியே வச்சுக்க.'

சுமி என்னைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.  லேசாகச் சிரித்தாள்.  நான் எரிச்சலுற்றேன்.  என்னால் தான் இந்த பிரச்சினை என்று நான் நினைக்க நினைக்க, வெறுப்பு வந்தது.  அதை எப்படிக் கையாள்தவது என்ற புரிதல் இன்றி திடீரென கடும் கோபத்தில் அவளைச் சீண்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.  

'எதாவது பேசுடி', அவள் நான் சிகிரெட் பிடித்திருப்பதைக் கண்டுபிடித்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

'என்னடா, அதான் சப்ப மூக்கிய பாக்கப் போறியே'

'சும்மாதான்டி'

'அத ஏன் என்ட்ட சொல்லல'

இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள்.  நானும் என்னதான் சொல்லுவது.  அவள் நண்பன் எவனையாவது இழுத்துப் பேசி, சப்பைக் கட்டுக் கட்டலாமா என்று நினைத்தேன். அது சூழலை இன்னும் மோசமாக்கும்.  வீம்புக்கு பேச விரும்பவில்லை.  ஏற்கனவே இதுபோல ஒருமுறை அவள் தோழன் ரஞ்சித்தைப் பற்றிப் பேசி, அவள் என்னை அறைந்ததோடு மட்டும் அல்லாமல், சாப்பிடாமலும் இரண்டு நாள் திரிந்து என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டாள்.

'மொத மொத ஒரு பொண்ணு எனக்கு பிங் பண்ணுனா அதனால தான்டி ரிப்ளை பண்ணுனேன்'

'அத என்ட்ட சொல்ல வேண்டாம்னு ஏன் வச்சிருந்த.  அவ மெசேஜ் பண்ணி மூணுநாள் ஆச்சு.  டெய்லி என்னப் பாக்குறீல.  தப்பா எதும் யோசிக்கலன்னா, சொல்ல ஏன் தயங்குன?'

இதற்கான பதிலாக எந்தப் பையனும் எதைச் சொல்லியும் தாம் விரும்புகிற பெண்ணைச் சமாதானம் செய்யமுடியாது.  சபலம் தான் என்பது எனக்கும் தெரியும்.  அவளும் அறிவாள்.  அதை நானும் அறிவேன்.  ஆனால் பெண்கள் தாங்கள் விரும்புவது பொய் வடிவத்திலாவது அவர்களை வந்து அடைய வேண்டும் என்று விரும்புவார்கள்.  அது உண்மையில்லை என்று அவர்களின் ஆழ்மனதிற்குத் தெரிந்தாலும், அதை மழுப்பும் அளவுக்கான பொய்யை எதிர்பார்ப்பது இயல்பு.  'அனல்காற்று' என்ற நாவலில் வந்த, பெண் கதாப்பாத்திரங்களின் மெய் வடிவின் அருகில் அமர்ந்து, அதை உணர்வது வெம்மை பொன்ற உணர்வைக் கொடுத்தது.

நான் எதுவும் சொல்லவில்லை.  அவள் என் பொய்க்காகக் காத்திருந்து, நடவாது என்று புரிந்து, சொல்லிக் கொள்ளாமல் விடை பெற்றாள்.  நான் கூடவே ஓடிச் சென்று, எப்படியாவது சமாதானம் செய்துவிட நினைத்தேன்.  ஆனால் செய்யவில்லை.  என் பக்கத்து வீடுதான் அவள் வீடும்.  பைக்கில் வரும் போது, அவள் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.  உருண்டையான பளபளக்கும் கருப்புக் கண்ணம் எப்போதும் போல பளபளத்துக் கொண்டிருந்தது.  மிதந்து கொண்டிருக்கும் கண்கள், துளிர்க்கத் தயாராய் இருந்த கண்ணிரினால் மிளிரிக் கொண்டிருந்தது.  ஜீன்ஸும் மெல்லிய வெள்ளை டாப்ஸும் அணிந்திருந்தாள்.  தோளில் புரளும் குட்டைக் கூந்தலும், சோடியம் விளக்கொளியில் நெருப்புக் 'கங்'கைப் போல தோற்றம் தரும் கருப்பு முகமும் முன் கழுத்துப் பள்ளமும்,  வெண்ணிற டாப்ஸில் அசைந்து கொண்டிருக்கும் அவள் மார்புகளும் மற்ற நாளாய் இருந்திருந்தால், என்னை கிளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும்.  அந்த வேகத்தில் அவளை எப்படியாவது, வெடித்துக் கிளம்பும் உற்சாகத்துடன் இறுக்கி அணைத்துக் கொள்ளத் துடித்திருப்பேன்.   இப்போது, முற்றிலும் காமம் வறண்டு போன பிண்டம் போல அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

வீட்டிற்குச் சென்று குளித்து, உடைமாற்றி என் அறைக்கு வந்தேன்.  ஜூலி என் அருகிலேயே வரவில்லை.  நான் பைக்கை நிறுத்துவதைப் பொறுத்து என் மனநிலை எப்படி என்று கணிப்பதில் அவன் கில்லாடி.  வழக்கமாக நான் வந்ததும் ஓடி வந்து, முன்னிரண்டு கால்களையும் என்மேல் இட்டு குதூகலித்துக் கொண்டிருப்பான்.

'என்னடா ஒருமாதிரி இருக்க?' என்று என் அம்மா கத்தினாள்.  அவள் பேசினாலேயே உச்ச குரலில் தான் பேசுவாள்.  கண்டுகொள்ளவில்லை.  நான் என்ன நினைத்தாலும் என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடுகிறாள்.  ஆனாலும், அதை என் வாயால் கேட்பதில் அவளுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.  அம்மா மட்டுமா?  கிட்டத்தட்ட பெண்களின் மனமே அப்படி ஒரு பாதையில் இயங்கத்தான் இயற்கையால் படைக்கப்பட்டிருக்குமோ என்னவோ?  'நம்ப பேசுறதக் கேக்கத் தான் ஒரு நாதியில்ல' எனத் தானாகப் புலம்புவது போல் எனக்குக் கேட்கும் படி சமையலறை வாசல் வரை வந்து என் அறையின் வாசலைப் பார்த்து சொல்லிவிட்டு, தன் வேலைக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டாள்.

சுமியை எனக்கு இருபத்திரண்டு ஆண்டுகளாகத் தெரியும், அவளுக்கு என்னை இருபத்திமூன்று ஆண்டுகள் மூன்று மாதங்களாகவும் தெரியும்.  அண்டை வீடு.  பெற்றோர்களுக்கும் பல வருடங்களாக ஒருவருக்கொருவர் தெரியும்.  சென்னைதான் என் ஊர் ஆனாலும் திருச்சியில் என்னைப் படிக்க வைத்தனர்.  இளம் அறிவியல், கணிப்பொறியியல் படிப்பை வளனார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது அவளைப் பார்க்க இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும்,  அதாவது விடுதியிலிருந்து விடுப்பு கிடைக்கும்.  தனியாகச் சந்தித்து பார்க்க வேண்டும் என நான் எண்ணிக் கொண்டேயிருப்பேன்.  அவள் தங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் எந்நேரமும் அவளோடே ஒட்டிக் கொண்டிருப்பாள்.   மென்புன்னகையோடும் சாதாரண பேச்சோடும் எங்கள் சந்திப்புகளை வைத்துக் கொள்வது வழக்கம்.  விடுதியில் அவள் ஞாபகம் வரும் போதெல்லாம்  முதல்முறை இருவரும் ஒருவர் ஒருவரின் எப்படி எப்போது விருப்பத்தை புரிந்து கொண்டோம் என்று நினைத்துப் பார்த்து பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன்.

சுமி என் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதும், நான் அவள் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதும் வழக்கம் தான்.  அவளிடம் பேசிப் பேசித்தான் நான் பேச்சையே கற்றுக் கொண்டேன் என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள்.  நான் பிறந்தபோது அவள் நடக்கப் பழகியிருந்திருப்பாள்.  அவள் பார்க்கக் கிடைத்த முதல் குட்டிப் குழந்தை நான்தான், நான் பார்க்கக் கிடைத்த முதல் விளையாட்டுக் கூட்டாளியும் அவள்தான்.  என்னை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருப்பாளாம்.  'என் பிள்ள கலர உரசிப் பாக்குறியா?  அவன் தங்கம்டி' என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பாளாம்.  அவளுக்கு அப்போது என்ன புரிந்ததோ?  வெட்கப்பட்டு சிரித்து என் அம்மாவுக்கு முத்தமிட்டு,  ஓடுவாளாம், ஓடும் போது எனக்கும் ஒன்று உண்டாம்.  அவள் இப்போது இருப்பதை விட அதிக கருப்பாக இருந்திருக்கிறாள் குழந்தையில்.  நாளாக நாளாக இளமையின் பளபளப்போடு, மிளிரும் கருப்பாக மாறியிருக்கிறாள்.  நான் மாநிறம்.  ஒப்பீட்டளவில் நான் நல்ல நிறம் போல தோற்றம் கொடுக்கும்.

என் அம்மா அவளைக் கிண்டல் அடிப்பதை விட, அவள் அம்மாதான் அவளை அதிகம் கிண்டல் அடிப்பாள்.  இருவரும் சில நேரம் தோழிகள் போல் தோற்றம் தருவார்கள்.  அதுபோன்ற நேரங்களில் நான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.  வயதில் மூத்த பெண்களுக்குள் இருக்கும் பதின்வயதுக் குறும்பு கொப்பளிக்கும்.  பதின்ம வயதில் கூட அப்படி கொக்கரிப்பான சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று கூட எனக்கு சந்தேகம் வரும்.  அப்படி அவளது அம்மா பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி அவளைச் சீண்டுவதற்கென்றே ஒரு நிகழ்வை அடிக்கடி சொல்லிக் காட்டுவாள்.  அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் போது ஒருமுறை, அவள் எப்படியோ கீழே விழுந்து, வயிற்றின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது.  அரை அங்குலத்திற்கும் குறைவான அகலம் இருந்த காயம், காயம் என்று கூடச் சொல்ல முடியாதாம், மெல்லிய சிராய்ப்பு.  ஆனால் ரத்தம் கசிய ஆரம்பித்திருந்திருக்கிறது.  அழவுமில்லாமல், ஆனால் மெல்லிய சிணுங்கலோடு குண்டுக் கீழுதடு பிதுங்க, என் வீட்டில் அமர்ந்திருந்திருக்கிறாள்.  என் அம்மா ஏதோ வேலையாக அடுப்படியில் இருந்து கொண்டே, சரியாக கவனிக்காமல், 'என்னடி வாயாடி ஒண்ணும் பேசாம வார?' என்றிருக்கிறாள்.  சுமி வெளியே கேட்கா வண்ணம் தேம்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.  வழக்கமாக,  சுமி வந்ததும், என்னை ஒழுங்காகத் தூக்கமுடியாவிட்டாலும், தூக்குவது போல் ஒரு பாவலாவிற்காக ஏதாவது செய்து பின் என்னை முத்தமிடுவது வழக்கம்.  அன்று அவள் காயம் பட்டதால், அமைதியாக அமர்ந்திருந்தாள்.  நானும் அவள் இப்போது வருவாள் அப்போது வருவாள் என்று பார்த்து, அவள் நகராமல் அமர்ந்திருந்தைப் பார்த்து, நானாவே சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று கால்களைத் தேய்த்து தேய்த்து, ரொம்பவும் பிகு பண்ணிக் கொண்டே அவளை நோக்கிச் சென்றிருந்திருக்கிறேன்.  அவள் அப்போதும் என்னைக் கொண்டு கொள்ளவில்லை.  ஒரு ஏக்கம் என்னைச் சூழ்ந்தது.  அன்புக்கான ஏக்கம் இருந்து, அவர்கள் கண்டு கொள்ளாதபோது, இது வெறும் ஏக்கமாகவே இருந்த பருவம் குழந்தைப் பருவம்.  அதன்பின்னான பருவங்களில், அது கொஞ்சநேரமே தாக்குப் பிடிக்கும்.  பின் அது நம் அகங்காரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கொள்ளப்பட்டு, வன்மமாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும்.  அப்படி மாறினால் மட்டும் நாம் வளர்ந்துவிட்டோம் என்றும் ஏற்றுக்கொள்ளப்படும்.  அப்போது அவளின் வவது வயிற்றுப் பகுதியைப் பார்த்தேன்.  என்ன தோன்றியது என்று தெரியவில்லை. எனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று நினைவில்லை.  காயம்பட்டால் எச்சில் வைக்க வேண்டும் என்று தோன்றி, எச்சிலின் ஊற்றுக் கண்ணை அவளது காயத்தில் வைத்தேன்.  இதுவரை சிணுங்கிக் கொண்டிருந்தவள்,  பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.  ஐந்து வயதுக்காரிக்கு என்ன தோன்றியது அப்படி அழுதாள்.  நானும் அவளுக்காக அழுதேன்.  என் அம்மாவும் அவள் அம்மாவும் ஒருசேர பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.   இருவரையும் சோதனை செய்தனர்.  அவளுக்கு காயத்தைக் கண்டுபிடித்தாயிற்று,  நான் எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் சிறிது தவித்தனர்.  பின் சுமி, 'அவன் சும்மா அழுறான், என் புண்ணுல முத்தம் குடுத்துட்டான், பாப்பா அதுக்குத்தான் அழுது' என்று அவள் அழுத காரணத்தைச் சொன்னாள்.  நான் என்ன காரணத்தைச் சொல்வேன்.  இருவர் அம்மாக்களும் சிரித்து, அவளுக்கு மருந்திட்டனர்.  அப்போதும் நான் என் அம்மாவின் இடுப்பில் இருந்தேன்.  சுமி என்னைப் பார்க்கவேயில்லை.  அவள் அம்மா அவளின் இச்செய்கையைக் கண்டுபிடித்து, ஓரக்கண் காட்டிச் சிரிக்கிறாள்.  என் அம்மா கமுக்கமான புன்னகையில் பதிலளிக்கிறாள்.  அப்போது எனக்கு ஏன் சிரித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.  இப்போது புரிகிறது.


அதன் அடுத்த இரண்டுநாளில், மீண்டும் சகஜமானோம்.  பின் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆனபோதும் கூட அவள் அவ்விஷயத்தில் மட்டும் அப்படியே இருந்தாள்.  ஆனாலும் அவள் அம்மா அவளைச் சீண்ட எண்ணி எதையாவது பேசி, அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாளெனில், இதைப் பற்றிப் பேசுவாள்.  உடனே சீறிக்கொண்டு கோபம் வரும். வெறும் முறைப்பைக் காட்டுவாள்.  அவள் கோபம் கொண்டால், வெளியே காட்டமாட்டாள்.  அவள் வலது காலின் பெருவிரலில் தரையை நிமிண்டிக் கொண்டிருப்பாள்.  அப்போதும் அப்படி நிமிண்டி நிமிண்டி, காலில் நகக் கண்ணில் ரத்தம் வந்துகொண்டிருந்தது.  அதைப்பார்த்ததும் நான் மருண்டு போயிருந்தேன்.  நான் அவ்விடத்தை விட்டுச் செல்ல எத்தனித்து, விரைந்து நான் வெளியேறும் முன் அவள் வெளியேறினாள்.  அவள் அம்மா அவளுக்கு ரத்தம் வந்ததைப் பார்க்கவில்லை.  அவள் அம்மா உள்ளே, என் அம்மாவுடம் பெரிய சத்தத்துடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.  அவள் மேல் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.  மாலை வீட்டுக்குப் போனதும், என் அம்மாவிடம், 'சுமி அத்த ஏம்மா, இப்டி அவள இவ்ளோ வெறுப்பேத்துறாங்க' என்றதற்கு, 'விடுடா, அவள்ளாம் அம்மா பொண்ணுமாரியா இருக்காங்க.  நல்லா பள்ளீயோடத்துல சோடிபோட்டு சுத்துற ஆளுகளாட்டம்.  நல்லாத்தான இருக்கு. அப்புறம் என்ன?' என்றாள்.  என் அம்மாவுக்கு எவ்வளவுநாள் எந்த ஊரில் இருந்தாலும், திண்டுக்கலை ஒட்டிய கும்மம்பட்டியின் பேச்சை மாற்றவே முடியாது.  அப்படித்தான் சுமியும் சென்னையின் உடையையும் வாசனையையும் தன்னகத்தே கொண்டிருந்தாள்.   அம்மா சொல்லிவிட்டு, அவள்பாட்டுக்கு அவள் வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.

சுமி அதன் பின் இரண்டு நாள் என் வீட்டுப் பக்கம் வரமாட்டாள்.  வெட்கமாம்.  பின் மிகச் சாதாரணமாய், 'என்னடா ஆளயே பாக்க முடில' என்றபடி வீடுட்புகுவாள்.  நான் வெறுமனே சிரித்து வைப்பேன்.  பள்ளியில் நடந்தது, அது, இது என்று அளந்து கொண்டே இருப்பாள்.  அவள் பூப்பெய்தியபின், இடைவெளி விழும் என்று எதிர்பார்த்தேன்.  இல்லை. அவள் எப்போதும் போலவே இருந்தாள்.  பள்ளியில் நான் எந்நேரமும் பெண்களைப் பற்றியே சிந்தித்தும் நண்பர்களுடன் பேசியும் சிரித்திருந்தேன்.  அப்படியான நேரங்களில் ஒருபோதும் சுமி என் நினைவில் இருந்ததேயில்லை என்பதை இப்போது நினைத்து வியக்கிறேன்.  நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, அவள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.  வழக்கம்போல், ஒருநாள் அவள் அம்மா அவளைக் கிண்டல் செய்கிறேன் என்று அந்த பழைய நிகழ்வை, எந்த சுவாரசியமும் இல்லாத வண்ணம் சொன்னாள்.  அவளுக்கு மட்டும் ஒரே விஷயத்தை எத்தனை முறை சொன்னாலும், முதல்முறை கொண்ட அதே உணர்வை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பாள்.  என் அம்மாவும் சேர்ந்து கொள்வாள்.   அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல், தலையைக் கீழே குவித்த வண்ணம், அறிவியல் செய்முறைக்கான படத்தை வரைந்து கொண்டிருந்தேன்.  என் கண்கள் ஏட்டையும், என் மீதிப் புலன்கள் மொத்தமும் உச்சகட்ட விழிப்போடு சுமியைக் கவனித்துக் கொண்டிருந்தன.  மெல்ல என் பார்வை அவள் காலைத் தேடிக் கண்டபோது, அது தரையை நிமிண்டிக் கொண்டிருக்கவில்லை என்று கண்டேன்.  பின் என் வேலைக்குள் மூழ்குவது போல திரும்பிக்கொண்டேன்.  என் பின்னால் யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.  அது கடித்துத் துப்பிய நகத்தின் நுனியில் வருடுவதைப் போல இருந்தது.  நான் திரும்பிய போது, சுமி என்னை தன் குமிழ் விழிகளால், பனிக்கட்டியால் செய்த ஊசியில் என் முதுகுத்தண்டில் குத்துவது போல், பார்த்துக் கொண்டிருந்தாள்.   உள்ளுக்குள் நான் ஒரே நேரத்தில், சுருண்டதைப் போலும், அளவு தெரியாமல் உண்டுவிட்ட குழந்தைபோலும் செய்வதறியாது அமர்ந்திருந்தேன்.  மெல்லிய நகை ஒன்றை உதிர்த்தாள், அது நான் பார்த்திராத சுமி.  மெல்லிய வெட்கமும், செல்லக் கோபமும் கொண்ட பார்வை.  அவள் புன்னகைப்பதை நிறுத்திவிட்டாள், ஆனாலும் எனக்கு புன்னகைப்பதைப் போலவே தோன்றியது.  கன்னம் சிவப்பதாகக் கூடத்தோன்றியது.  அவள் அம்மா சிரிப்பின்ஊடே இவளைப் பார்க்க, என்ன நடக்கிறதென்று கண்டுவிட்டாள்.  பெண்களுக்கேயுள்ள நுண்ணுணர்வு அது.  சுமியும் அதைப் பார்த்திருந்தாள்.  அவள் அம்மா கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு, கிளம்பினாள்.  அதன்பின் அவள் ஒருபோதும் இந்தச் சம்பவத்தைச் சொல்லி அவளை வம்புக்கிழுப்பத்தில்லை.  வீட்டுக்குச் சென்றபின், 'சுமி, இங்கவாடி' என்று கத்தி, இவளையும் அங்கிருந்தபடி இழுத்துக் கொண்டாள்.


அதன்பின்னான ஒருவாரம் அவளைச் சந்திக்கும்படி அமையாமல் பார்த்துக் கொண்டேன்.    மீதிநாட்களில் எப்படியோ தப்பிவிட்டேன்.  ஏனெனில்,  என்னைப் பெரும் குழப்பத்திலாழ்த்தும் வண்ணம் ஒரு புன்னகையைச் சிந்தியிருந்தாள்.  எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்ததுமாறு அவள் தோன்றியதே இல்லை.  இப்போது திடீரென அவளின் அந்த சிரிப்பாலும், மென்னசைவாலும் சலனப்படுகிறேன் என்றால், நானும் உள்ளூர அதை நினைத்திருந்தேனா?  அப்படி நினைக்கவில்லை என்றால், இப்போது ஈர்ப்பு உண்டானது போல நினைத்தால் அது தவறல்லவே.  இல்லை, அப்படி நினைத்திருப்பேனாயின், அது ஏன் வெளியில் தெரியவேயில்லை?  அல்லது தெரியவில்லை என்று நானே என்னை ஏமாற்றிக் கொண்டேனா?  அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக எனக்கு நினைவில் இருப்பதன் காரணம் என்ன?  நான் ஏதோ பெரும் தவறிழைத்ததாகவே கற்பனை செய்து கொண்டிருந்தேன்.  மாலைவேளையில், குப்பையைப் கொட்ட என் அம்மாவுடன் சண்டையிட்டு, இறுதியில் நானே கொட்ட வேண்டி, குப்பைக் கூடையுடன் வெளியே வரும்போது, சுமி என் வீட்டினுள் வந்து கொண்டிருந்தாள்.  அவள் என்னைப் பார்க்கிறாள்.  இடது புருவம் மட்டும் 'என்ன?' அல்லது 'எப்டி?' அல்லது 'எங்கே?' என்று கேட்கிறது.  புடைத்த கன்னங்களும் கண்களும் ஒன்றும் சொல்லவில்லை.  நான் கண்ணைக் கீழே போட்டு விட்டு வெளியே போய்விட்டேன்.

இரவு, மொபைலில் 'ஹாய்' என்று மட்டும் அனுப்பினேன்.

'என்னடா' என்றாள்.

 அதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தாள் என்று தெரியாமல், 'சாப்டியா' என்றேன்.

'ம்... இன்னும் 3 மணிநேரம் ஆனா அது வெளிய போகும்.   அத கேக்கத்தான் டெக்ஸ்ட் பண்ணியா' என்றாள்

'சும்மாதான்'

'ஓகே. பாய்'

'இல்ல இல்ல. இரு. ஒண்ணு கேக்கணும்'

'என்னடா'

'இல்ல. நேத்து, வீட்ல ... உங்கம்மா உன்ன வெறுப்பேத்துனப்ப.... நீ கோவப்படல... அப்புறம்.... ... ... ... சிரிச்ச'

இதை ஒரு பத்து மெசேஜாக அனுப்பியிருந்தேன்.  கடைசியாக அவள் ஒரு ஸ்மைலி போட்டு முடித்து விட்டாள்.  என் அவஸ்தைகளை அது ஆரம்பித்து விட்டது.


இப்படி நான் பழையனவற்றை யோசித்துக் கொண்டிருந்தபோது, என் அம்மா வந்தாள்.  நான் உம்மென்றிருப்பது பொறுக்காது அவளுக்கு.  இரவில் உறங்கும் முன் ஒரு டம்ளர் குடிப்பது வழக்கம்.  அதைக் கையில் கொண்டு வந்திருந்தாள்.  'குடிப்பா செல்லக் குன்னாரு' என்றாள்.  குடித்தேன்.  குடித்து முடித்தபின், சேலைத்தலைப்பில் வாயைத் துடைப்பேன்.  சிறுவயது முதல் உள்ள பழக்கம்.  உறவினர் வீடுகளுக்குப் போனாலும் இந்த  பழக்கத்தை விடாமல் செய்வதற்கு அப்பாகூடத் திட்டுவார்.   நான் வாயைத் துடைத்துக் கொள்வேன் என்று என் அம்மா சேலைத்தலைப்பை நீட்டிய வண்ணம் இருந்தாள்.  நான் கவனிக்கவில்லை.  என் சட்டையில் துடைத்துக் கொண்டேன்.  அவள் சற்று ஏமாற்றமடைந்திருந்தாள்.  'என்னப்பா, முகம் வாடியிருக்கு', என்றாள் வாட்டத்தோடும் வாஞ்சையோடும்.  நான் சுமி கடற்கரையிலிருந்து பேசாமல் எழுந்து போனதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

'ஒண்ணுமில்லன்னா விடுவே, ஏன் சொம்மா நய்யி நய்யின்னு சாவடிக்கிற', என்றேன்.

சாவு-சாகடிக்கிறாய் போன்றவற்றை பெற்றவளிடம் சொல்லக் கூடாது என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.  அம்மாவுக்கு நொடி நேரத்தாமதமின்றி கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது.  எனக்கு மேலும் கோபம் வந்ததேயன்றி, குறையவில்லை.  விருட்டென என் அறையை விட்டு அவள் உறங்கச் சென்று விட்டாள்.  நிச்சமாக அவள் இன்றிரவு உறங்கப் போவதில்லை.  நான் மீண்டும் சுமியுடனான நினைவுகளுக்குள் போனேன்.

குறுஞ்செய்தி வழியான அந்த உரையாடலுக்குப் பின், நாங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை.  வழக்கம் போல இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் அல்லது பேச முயன்று கொண்டிருந்தோம்.  ஆனால், அந்த நாட்களிலான தீண்டல்களில் இருவரும் வெட்கியும், கொணற்றியும் தீர்த்தோம்.  இப்போது நினைத்தால் அதெல்லாம் அதீதமோ என்று தோன்றுகிறது.  ஆனால், அது மிகவும் உற்சாகத்தையும், அடுத்த நிமிட ஆச்சரியத்தையும் ஒளித்து வைத்திருந்தது.  கல்லூரியில் சேர்ந்த பின், அவளைப் பார்க்கமல் இருப்பது வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் போல், மனம் சுற்றிக் கொண்டிருந்தது.  இடையில் ஒரு விடுப்பில் ஊருக்கு வந்திறங்கியபோது, பேருந்து நிலையத்தில் அவளைச் சந்தித்த போது சுற்றம் மறந்து இளித்துக் கொண்டிருந்தேன்.  அவள் அங்கிருந்து வெட்கத்தை அடக்கமாட்டாமல்,  தன் இடக்கையால், சிப்பி திறந்து மூடுவது போல 'வாயை மூடு' என்று சைகை செய்தபின், தன்னக்கான பேருந்தில் ஏறிவிட்டாள்.  அதன்பின் தான் நான் தன்னிலை உணர்ந்தேன்.  மாலை வீட்டுக்கு வந்தவள், அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.  என் அம்மா நான் வந்திருப்பதைச் சொன்னபோதும், ஆர்வம் காட்டாமல், 'அப்டியா' என்றுவிட்டு, மீண்டும் அவளுடன் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.  என்னைச் சீண்டிப் பார்க்கிறாள் என்று புரிந்தது.  நானும் காத்திருக்க முடிவெடுத்தேன்.  இருபது நிமிடம் போனது, என் பொறுமையும்.  எப்படியாவது அவளை அங்கிருந்து நகர்த்த நினைத்த போது, பக்கத்து தெருவில் சமையல் எரிவாயுக்காரன் வந்தது என் அம்மாவுக்குத் தெரிந்தது.  அவன் போன முறை வந்தபோது, அம்மா இல்லாத நேரமாதலால் அப்பாவிடம் ஏதோ கதை சொல்லி அதிகப் பணம் வாங்கிச் சென்று விட்டான்.  அவனைப் பிடித்துச் சத்தம் போட என் அம்மா, 'இருடீ வரேன்' என்று விரைந்தாள்.  அப்போது, அவள் சந்தோஷமான மெல்லிய பதைபதைப்போடு இருந்ததை, மொபைலைச் சுழற்றுவதன் மூலமும், மார்பின் அசைவின் மூலமும் பார்த்தேன்.

மெல்லிய சீட்டி இரண்டு அடித்தேன்.  திமிருடன் பார்க்கும் தோரணையுடன், 'என்னடா' என்றாள்.  இது அவள் வெட்கப்படுவதன் வெளிப்பாடுகளில் ஒன்று.  'இங்க வாடி, கார்த்திகைச் செல்வி என்கிற கார்த்தி' என்றேன்.  'செருப்பு பிஞ்சிரும்டா நாயே' என்றாள் குழைதலோடு.   கார்த்திகைச் செல்விதான் அவளது பெயர்.  சின்ன வயதில் கார்த்தி என்ற ஆண்பாலின் பெயரோடு அவளை எல்லோரும் கிண்டல் செய்ததால், அவளின் அடத்தால் சுமி என்றே அழைக்க அவள் அம்மா ஆரம்பித்தாள்.  இப்போது அவள் சுமி தான் எல்லோருக்கும்.

'இங்க வாவே'

'எதுக்கு' என்றபடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.  நான் நுழைவாயிலை ஒட்டி, தையல் மிசின் இருக்கும் இடத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தேன்.  குழந்தையில் அங்குதான் ஒளிந்து விளையாடுவது.  மூன்றடி இடைவெளியில் நின்று கொண்டிருந்தவளின் வலது கையைப் பிடித்து முறுக்கினேன்.  கொஞ்சம் பலமாகவே முறுக்கிவிட்டேன்.  அந்த கொஞ்சம் புஷ்டியான கருப்புக் கையில், வெள்ளையாக வரிவரியாக தடம் கூட விழுந்துவிட்டது.  'சாரிடீ' என்றேன்.  'வலிக்குதுடா' என்றவாறு என் வயிற்றில் கிள்ளினாள்.  நானும் வலிப்பதைப் போலவே நடித்தேன்.  எனக்கு அவள் கன்னமும் பூனை முடிகொண்ட கழுத்தின் பக்கவாடுகளும் ஈர்ப்பை அளித்தன.  நாய்க்குட்டி தன் நாவால் நம்மை நக்கியபின் வரும் குளிர்ச்சியை அது என் கண்களுக்கு அளித்தது.  முட்டைக் கண்ணால் முறைத்தாள்.  புருவத்தால், 'என்ன?' என்றாள்.
'இல்ல, உன் கன்னத்த ஒரு தடவ தொட்டுப் பாக்கனும் போல இருக்கு.'

'ஹூகும்..', இந்த அசைச் சொல்லின் பொருள் இல்லை என்றாலும், அது ஆம் என்று வழுவமைதியாக மாறிவிட்டதை நானும் அறிவேன்.

மெல்ல, அவளது கன்னத்தை என் வலது கையால் இருவிரல் கொண்டு வருடிக் கொண்டிருந்தேன்.  அப்போது மயிர்கூர்ச்செரிந்த அவளது கழுத்தின் பக்கவாட்டுப் பூனைமுடி, என்னைக் கிளர்ந்தெழ வைத்தது.  சட்டென அவள் உதட்டில் முத்தமிட்டேன்.  அதிர்ச்சியானாலும் அவள் சிரித்ததை உணர்ந்தேன்.  அவ்வளவு மிருதுவான, வழவழப்பான ஒன்று இருக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை.  ஜிகிர்தண்டாவில் இருக்கும் கடற்பாசியைப் போல வழவழப்பு.  சுவையற்றிருப்பதன் சுவை.  சொற்ப நொடிகள்தான், கிறுகிறுத்து இருந்தேன்.  விலக்கிக் கொண்டு சிரித்தபடி, நகர்ந்து நின்றபடி, என் தொடையில் கிள்ளினாள்.  கிள்ளுவது கொஞ்சல் வகையில் சேர்த்தி.  'கள் குடித்த குரங்கு இப்படித்தான் இருந்திருக்கும் போல' எனச் சொல்லிச் சிரித்தேன்.  அவளும் சிரித்தாள்.  பின் அதுவே முத்ததிற்கான சங்கேதச் சொல்லாகவும் மாறியது.

நான் சிகிரெட் புகைப்பது அவளுக்குத் தெரியும்.  அம்மாவிடம் போட்டுக் கொடுக்கவா என்றெல்லாம் இரண்டு முறை மிரட்டியிருக்கிறாள்.  இப்போதெல்லாம் கள் குடிப்பதற்கு முன் கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதாவது செய்துவிடுகிறேன்.  கடற்கரையில் முத்தம் கொடுத்துக் கொள்வதில் எங்கள் இருவருக்குமே உடன்பாடு இல்லை.  அது நம் அந்தரங்கம், அதை போர்ன் வீடியோக்களைப் போல கடற்கரையில் நிகழ்த்துவது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்.  இப்போது முத்தமிடுகையில், நான் நெருங்கி என் ஹார்மோன்களுக்கேற்ப நகர, அவள் சற்று நேரம் அருகே வந்த பின் காத்திருப்பாள்.  இரண்டொருமுறைக்குப் பின் தான் புரிந்தது, நான் சிகிரெட் புகைத்திருக்கிறேனா என்று முகர்ந்து பார்க்கிறாள்.  ஆனாலும் முத்தம் ஒருபோதும் தடைபட்டதில்லை.  ஆரம்பநாட்களில் சிகிரெட்டெல்லாம் பரவாயில்லை என்றாள்.  பின் குறைத்துக் கொள் என்றாள்.  அதற்காகத்தான் இந்த நடவடிக்கை போல இருக்கிறது.

இப்போதெல்லாம் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது.  சண்டை கடைசியில் சமாதானமாவது ஒரு முத்தத்திலோ அல்லது ஒரு இறுக்கமான அணைப்பிலோதான்.  கதைகளில் காமத்தினால் தான் சண்டையே உருவாகும், ஆனால் நம் இயல்பு வாழ்க்கை கதை அல்லவே.  எனவே காமமே சமாதானம் செய்து வைக்கிறது.  கொஞ்சம் திமிறி பின், நானும் அவளும் சமாதானமாவது வழமை.  சமாதானம் என்பது பேச்சுவார்த்தை மூலம் காண்பது என்று நாடுகள் தீர்மானிக்கின்றன.  ஆனால், தனிமனித வாழ்க்கையில் பேச்சுவார்த்தையில் தானே சண்டைகள் உற்பத்தியாகின்றன.  காமம் தீயாக எல்லா நேரங்களிலும் ஒப்பிடப்படுகிறது, சொல்லப் போனால் எனக்கு அது அப்படி இல்லை, அது நீர்.  கசப்பில் எரிந்து கொண்டிருக்கும் போது, அந்த தேவை எங்களை இணைத்துவிடுகிறது.  ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு போகச் சொல்லிவிடுகிறது.  இன்னும் சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பேன், அணைத்திருக்கும் நேரங்களில் பேசுவதேயில்லை.  ஆனால், நான் முறுக்கும் போது அவள் நெகிழ்வதும், அவள் முறுக்கும் போதும் நான் நெகிழ்வதும் ஒருசேர, நல்ல இசைக் கச்சேரியைப் போல இயைந்து இருக்கும்.  அதனால் பிறிதொரு அணைப்பில் சமாதானமாகிவிடுவாள்.  இப்படியே எண்ணங்கள் ஓட எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியாமல் தூங்கிப் போனேன். 

காலை எழுந்தேன்.  இப்போது மனம் கொஞ்சம் தெளிவாக இருப்பதைப் போல் தோன்றியது.  இரவு அம்மாவிடம் மூர்க்கமாக பேசியிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.  போய் அவளிடம் இப்போது பேசினாலும், இயல்பாகப் பேசுவாள்.  ஆனால் நேற்று அதிக மனஸ்தாபமாகிவிட்டபடியால், இன்று ஞாயிறுக் கிழமை பெசண்ட் நகர் ஆரோக்கிய மாதா கோயிலுக்குச் சென்று வந்தேன் என்றால், விரைவில் ராசியாகிவிடுவாள்.  ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாகின்றன்.  என் அம்மாவும் சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டாள்.  நான் குளித்துக் கிளம்புவதைப் பார்த்தாள்.  நான் வேண்டுமென்றே சிரிக்காமலேயே கிளம்பிவிட்டேன்.  அவள் காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று வந்துவிட்டாள்.  நான் எட்டு மணிக்கு நடக்கும் பூசைக்குப் போகிறேன்.  கோவிலில் நல்ல கூட்டம்.  பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் அதாவது, அன்று மட்டும் கோயிலுக்கு வருவதோடு சரி.  நான் எந்தக் கூட்டம் என்று தெரியவில்லை.  ஆனால் இன்று வந்திருப்பது, சும்மா மன திருப்திக்கு.  சும்மா அமர்ந்திருந்தேன்.  பங்குத்தந்தை பிரசங்கத்தில் சொல்வதையெல்லாம் நான் கவனிப்பதேயில்லை.  சுற்றிலும் இருக்கும் படங்களையும், எழுத்துக்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.  நான் என் சிறு வயது முதலே பார்த்த இடமாதலால், பெரிய சுவாரசியமெல்லாம் இருக்காது.  சும்மா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓரத்தில் ஒரு ஆரோக்கியமாதா சுரூபம், கையில் குழந்தையுடன்.  அந்தப் பெண்ணும் குழந்தையும் நல்ல லட்சணமாய் இருந்தார்கள்.  நல்ல சிவந்த நிறம்.  யூத லட்சணம்.  நெற்றிக்கும் மூக்குக்கும் இடையில் உள்ள மூக்குத் தண்டு பள்ளமாக இரவே இராது.  நீள்வட்டத்துக்கும் வட்டத்துக்கும் இடைப்பட முகம்.   தலையில் கிரீடம்.  பளபளக்கும் அங்கி பொன்ற ஆடை.  கையிலிருக்கும் குழந்தையும் அதற்கு ஏற்றாற்போல் இருந்தது.  அந்த சுரூபத்திற்கு மேல் ஒரு வாசகம் 'இதோ உன் தாய்'.  இதை வாசித்ததும், சொற்சுழலுக்குள் வழுக்குவது போல் இருந்தது.  இந்த வார்த்தைக்கும் அந்த சுரூபத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்த சிவந்த, உருவம் கொண்ட லட்சணமான பெண் என் தாயாக இருக்க வாய்ப்பு இல்லை.   வெளிநாட்டுப் பெண் ஒருத்தியை வைத்து எப்படி இவளை என் தாயாக எடுத்துக் கொள்வது?  இல்லை இல்லை.  இவள் என் தாய் இல்லை.  காலையில் நான் இங்கு வந்திருக்கவே கூடாது.  என்னைக் குழப்பத்திலாழ்த்தி விட்டது.  சின்னவயதில்  சைக்கிள் ஓட்டிப் பழகும் போது ரோட்டில் ஒருத்தன் மோட்டார் சைக்கிளில் தட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.  முழங்கால் சிராய்ப்புடன் அழுத என்னை, தான் வைத்திருந்த மீன் கூடையை மேலே இருக்கும் இறால்கள் இரண்டு சிதறுமளவு வேகமாக வைத்துவிட்டு, 'அந்த பாடு பய கிடக்குறான்ப்பா. எந்திரி எந்திரி'  என்று என்னைத் தூக்கிவிட்டு, என்னோடு வீட்டுவரை வந்து விட்டுவந்த அந்த, வெற்றிலை குதப்பிய, பெரிய பொட்டு வைத்த, அந்த கரிய பெண்தான் தாய் போல தோற்றமளிக்கிறாள்.  இதையெல்லாம் நான் ஏன் யோசிக்கிறேன்? மூளை குழம்பிவிட்டதா?

இனி நான் இங்கே இருத்தல் ஆகாது, திடுதிப்பென்று வெளியே ஓடி வந்தேன்.  நேற்று சுமி கோபித்ததால், என் அம்மாவிடம் எரிந்து விழுந்தேன்.  அதனால் அவள் மனம் சங்கடப்பட்டு இருந்தாள்.  அவளைச் சமாதானப்படுத்த கோவிலுக்கு வந்து, இப்போது குழம்பிவிட்டேன்.  அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.  என் மனதிருப்திக்காகவே இங்கு வந்தேன்.  பிள்ளை என்ன தவறிழைத்தாலும், தாய்க்கு அது ஒரு பொருட்டல்லவே.  வெளியே வந்தால், சுமி நிற்கிறாள்.  காலையில் அவளை முற்றிலும் மறந்திருந்திருக்கிறேன்.  அவளும் இதை அறிந்திருக்கிறாள்.  நான் அவள் கோபித்துக் கொண்டதை இன்னும் நினைப்பில் வைத்திருந்தால், காலையிலேயே அவளை தேற்ற முயன்றிருந்திருப்பேன். அது நடக்கவில்லையாதலால்,  நான் வேறு ஏதோ குழப்பத்தில் வந்திருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறாள்.  அதனால்தான் வெறும் சிரிப்போடு என்னைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு நிற்கிறாள்.  என் கண் வெறுமனே பொங்கி நிற்க, அவள் தரையிலிருக்கும் இரும்புத் துகளை ஈர்க்கும் காந்தம் போல , என்னை இழுக்கிறாள்.  நான் ஓடிச் சென்று, சாலை ஓரத்தில நிற்கும் அவளிடம் ஏதோ சொல்ல வந்து, தேம்புகிறேன்.  வார்த்தை கடைசிவரை வரவேயில்லை.  ஏதும் பேசாமல், கடற்கரை ஓரத்திலிருக்கும் சிமெண்ட் இருக்கையில் உட்காருகிறோம்.  என் முகத்தை தன் தோளில் வைத்துக் கொள்கிறாள்.  என் கண்ணீர் மயிர்க்கூர்ச்செரியாத அந்த பக்கவாட்டுக் கழுத்துப் பூனை மயிர்களை நனைத்துக் கொண்டிருக்கிறது.

Wednesday, 14 September 2016

மலையில் தொலைதல்

கடந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று பெங்களூர் அலுவலகத்திலிருந்து, இரண்டு நாள் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.  அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அதைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டு இருந்தனர் எல்லோரும்.  மிகப் பெரிய கூட்டம்.  மொத்தம் அறுபது பேர் செல்வதாக இருந்தது.  கடைசியில் 28 பேர் மட்டுமே செல்வது உறுதியானது.  முன்னரே இது பற்றி என் அம்மாவிடம் சொல்லிவிட்டால் தினமும் ஒரே அறிவுரையாக இருக்கும்.  எனவே கடைசி நாள் தான் இதைப் பற்றிச் சொன்னேன்.  அலைபேசி வேலை செய்யாது எனவும் சொன்னேன்.  மலைப்பகுதி ஆதலால் அப்படித் தான் இருக்கும் என ஊகித்திருந்தேன்.  அப்படித்தான் ஆனது.  இடத்தைத் சொல்ல மறந்துவிட்டேனே, இடத்தின் பெயர் 'சக்லேஷ்பூர்'.

வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கிளம்பினோம். வருகைப் பதிவேடெல்லாம் தயார் செய்யப்பட்டது.  என் பெயர் தான் அதில் முதலில்.  எல்லோரும் வந்ததும், ஒருமுறை வருகைப் பதிவு எடுக்கப் பட்டது.  பின் பேருந்து கிளம்பியது.  வருகைப் பதிவுச் சீட்டு ஒவ்வொருவரிடமாக கொடுக்கப் பட்டது.  அதில் மது எப்படி வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதாவது தண்ணீர் கலந்து வேண்டுமா, இல்லை குளிர்பானம் கலந்து வேண்டுமா,  அதுவும் எந்த அளவில் கலக்கப்பட வேண்டும் என்று.  எல்லோரும் அளவு குறித்துக் கொடுத்ததும், பேருந்தின் கடைசி இருக்கை, இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டது.  அதுவரை நான் மிகக் கறாரான ஆளாகப் பார்த்த ஒருவர், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் அதைச் செய்வதைப் பார்த்தபோது, அவர் முற்றிலும் வேறு ஆளாக உருமாறியிருக்கிறார் என்று நம்பத் தலைப்பட்டேன்.  தமிழ்க்காரர்.  வேலையின் போது மிகக் கடுமையாக அவருக்குக் கீழ் உள்ளவர்களிடம் நடந்துகொள்வார்.  அதனால் தான் நான் அப்படி நினைத்திருந்தேன். எனக்கான முறையில் நான் வேண்டாம் என்று சொன்னபோது, அதிர்ச்சியைக் காட்டி, பின் 'இருடா, உன்ன அப்புறம் வச்சிக்குறேன்' என்று சொல்லி நகர்ந்தார்.  நான் ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பெங்களூரிலிருந்து சக்லேஷ்பூர் 250 கி.மீ. இருக்கும்.  பேருந்து மிக மிக மெதுவாகவே சென்றது.  அதற்கேற்றாற்போல் வண்டியின் உள்ளே சுதி ஏறத் தொடங்கியிருந்தது.

ரம், அதற்குத் தேவையான தண்ணிர், குளிர்பானப் புட்டிகள், மற்றும் திண்பண்டங்களாக பிஸ்கட், சாக்லெட், மிக்சர் என்று சகல ஏற்பாடுகளுடனும் கச்சேரி தொடங்கியது.  எனக்கு கொடுத்தார் என் மேலாளர், 'சும்மா குடிடா' என்று.  நான் புன்னகையுடன் வேண்டாம் என்றேன்.  அவரும் சிரித்தபடி சென்றுவிட்டார்.  பின்னர் பாடல்கள் போடப்பட்டன.  முதலில் ஹிந்திப் பாட்டு, பின்னர் கன்னடா, தமிழ் என்று மாறி மாறி ஒலிக்கவிடப் பட்டது.  எல்லோரையும் ஆட வைக்க முயன்று கொண்டிருந்தனர். என்னையும் ஆட வைக்க, என் மேலாளர் கேட்டார்.  அப்புறம் வருகிறேன் என்று சொல்லித் தாட்டிவிட்டேன். பின்னர் அனைவரும் ஆடுவதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எல்லோருக்குள்ளிருந்தும் யாரோ ஒருவர், பெரும் உற்சாகத்துடன் எழுந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆகச் சிறந்த அனுபவம் என்று கூறுவேன்.  அப்படிப் பார்க்கும் போது நமக்குள் இருக்கும் வேறொருவரும் எழுந்து வர முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.  எனக்கும் அப்படி வந்தார். பிடித்து அமுக்கிவிட்டேன் அமுக்கி.  ஐந்து பெண்களும் வந்திருந்தார்கள்.  அவர்களும் அதீத ஆச்சரியத்தை, தேவைக்கதிகமான அளவு தங்கள் கண்களையும் குரல்களையும் கொண்டு, வெளிப்படுத்திய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

பொழுது சரிந்து கொண்டிருந்ததே தெரியாதவாறு, பேருந்துக்கு உள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  இந்த அலுவலகத்தில் 80 விழுக்காடுக்கு மேல் 40-ஐ நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லது கடந்தவர்கள்.  அவர்கள் எல்லோரும் பதின்ம வயதுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு நான்கு பேர் நன்கு ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தான் எல்லோரையும் இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தார்கள்.  பெண்களில் இருவர் ஏற்கனவே ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அதில் ஒருத்தி தெலுங்கு பேசும் தமிழ்க்காரி.  அவளுக்கு சரியாக ஆட வரவில்லை என்றாலும், இரு கைகளையும் உயர்த்தி இடுப்பை பக்கவாட்டில் அசைத்து ஆடிக் கொண்டேயிருந்தாள்.  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதர பெண்களை இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தாள்.  அவர்களும் ஆடினார்கள்.  கடைசியாக, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்த தமிழ் மேலாளர் ஒருவரின் கவனம் என்மேல் விழுந்தது.  அவர்தான் மதுவை மகிழ்வுடன் எல்லோருக்கும் கலந்து கொடுக்கும் வேலையைச் செய்தது.  நான் சும்மா இருந்திருக்க வேண்டும். 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ....' பாடல் வந்தபோது என்னால் கட்டுப்படுத்த முடியாமல், விசில் அடிக்க ஆரமித்துவிட்டேன்.  அதைக் கண்ட அவர், என்னை நோக்கி ஒடி வந்தார்.  'வாடா வாடா.... தமிழ்ப்பையா' என்று கூவிக் கொண்டே.  நான் 'அப்புறம் வருகிறேன் மணி' என்று எவ்வளவு கதறியும் பொருட்படுத்த வில்லை.  இடுப்போடு சேர்த்துப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்விட்டார். முன்வாசலுக்கு அருகில் உள்ள இருக்கைகளின் இடையில் தான் ஆடிக் கொண்டிருந்தனர்.  என்னைக் கூட்டத்தின் நடுவில் தள்ளி விட்டு, ஆடச் சொல்லி கூச்சலிட்டனர்.  நான் கூச்சப்பட்டு மறுத்துவிட்டேன். பெண்களும் இருந்ததால் கூச்சம் சற்று அதிகம் இருந்தது, தவிர்க்க முடியாததாகிப் போனது. கடைசியில் என்னை விடுவித்தனர்.  வந்து அமர்ந்தபின் என் மேலாளர் என் அருகில் வந்துவிட்டார்.  'கம், வில் டான்ஸ்' என்றார்.  'வராது, மது ப்ளீஸ் விட்ருங்க' என்றேன்.  விடவில்லை.  கூடவே அந்த தமிழ்ப்பெண்ணும் வந்துவிட்டாள்.  'வா, கூச்சப் படாத. எங்களுக்கு கூட தெரியாது.  சும்மா குதி' என்றாள்.  நான் மாட்டேன் என்று தலையசைத்துச் சிரித்தேன்.  இருவரும் என் கைகளைப் பிடித்து இழுத்து என்னை நிற்க வைத்து விட்டனர்.  நான் ஆடாமல் சிரித்தபடி நின்று கொண்டேயிருந்தேன்.   இருவரும் என் அருகே தங்கள் உடலை அசைத்துக் கொண்டு, என்னையும் 'ஆடு ஆடு' என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது என் மேலாளர் என்னிடம், 'சும்மா, ஆடுடா.  இந்தமாரி நேரத்தில் தான் டச் பண்ண முடியும்' என்று என் வலது கையை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் உரசிவிட்டான்.  அவள் கண்டு கொள்ளவேயில்லை.  நான் விதிர்த்துப் போனேன்.  சட்டென்று மொத்த உற்சாகமும் வற்றிப் போனது போல் தோன்றியது.  காரணம் பயம்.  ஒருவாறு தப்பித்து, வந்து இருக்கையில் அமர்ந்து உறங்கிப் போனேன்.  

இரவு 12:30-க்கு சக்லேஷ்பூரில் நாங்கள்  இறங்க வேண்டிய இடத்துக்கு 1கி.மீக்கு முன் பேருந்து வந்து சேர்ந்தது.  மலைப்பகுதி ஆதலால், அதன் பிறகான பாதை எப்படி இருக்கும் என்று தெரியாமல், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டனர்.  அதன்பின் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது.  ஒரே ஒரு ஜீப்தான் இருந்தது.   எட்டு எட்டு பேராக ஏற்றிச் சென்று வந்து விட்டனர்.  அந்த விடுதியின் பெயர் 'ரொட்டிக் கல்லு'.  இருட்டில் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை.  எங்களுக்கு ஒரு 12 படுக்கை கொண்ட ஒரு நீண்ட அறை ஒதுக்கப் பட்டிருந்தது.  பிறருக்கு நால்வர் தங்கும் அறைகளாக ஒதுக்கப்பட்டிருந்தது.  நாங்கள் இருந்த அறையில் குளிரும் வெப்பமும் சமநிலையில் இருந்தது, நான் விரைவில் தூங்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  நன்கு தூங்கினேன்.


அடுத்தநாள் காலை 6:30 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்.  குளித்தேன்.  வெந்நீர் வருவது தெரியாமல், குளிர்நீரிலேயே குளித்து முடித்தபின் வெளியே செல்ல விரும்பினேன்.  கவி என்கிற ஆந்திர மாநிலப் பையனும் வந்தான்.  அவன்தான் என்னைப் போலவே எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்ற யோசனையோடேயே இருந்தான்.  இருவரும் அறையை விட்டு வெளியே வந்தோம். வெளியே வந்ததும் என் விழிகள் என்னையும் அறியாமலேயே விரிந்தன.  சுற்றிலும் மலைமுகடுகள் தங்கள் அழகை அப்பட்டமாகக் காண்பித்ததே காரணம்.  நாங்கள் தங்கியிருந்த அறையைச் சுற்றிலும், முழுப்பச்சை மலைமுகடுகள் விண்ணைத் துழாவிக் கொண்டிருந்தன அல்லது மேகங்கள் வந்து பசுமையின் குளிர்ச்சியைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தன.  மலை ஓடைகள் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.  நான் அவை எங்கோ தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று நினைத்திருந்தேன்.  சுற்றிப் பார்த்தபோது தான் தெரிந்தது, எங்கள் அறையை ஒட்டியே 3-4அடி அகலம் கொண்ட ஓடை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்தபோது கிளர்ச்சிக்கு உள்ளானேன். இதற்கெல்லாம் காரணம் மர்மமானது என்று நம்புகிறேன்.  இருந்த அரைகுறை தூக்கக் மயக்கத்தையும் அது விரட்டியடித்தது.  மற்ற தங்கும் கூடங்கள் எப்படி இருக்கின்றன என்று நோட்டம் விட்டேன். மிகச்சிறிய ஓட்டு வீடைப் போல் தோற்றம் அளித்தது.  உள்ளே ஒரு நல்ல நட்சத்திர விடுதி அளவுக்கான அமைப்புடன் இருந்தது.  தொடர்ச்சியான ஈரப்பதம் அவ்விடுதிகளின் வெளிப்பகுதியில் ஒரு பழமையை அப்பியிருந்தது.  மெதுவாக ஒரு நடை சென்றோம்.  ஒரு ஓடை ஒன்றை ஒட்டித்தான் அவர்கள் அந்த விடுதியைக் கட்டியிருந்தார்கள்.  அதைப் பார்க்கச் சென்றோம்.  பதினைந்தடி அகலம் கொண்ட ஓடை. துல்லியமாக கீழே இருக்கும் கற்களையும் மண்ணையும் காட்டும் நீர்.  கூச்சமின்றி அள்ளிப் பருகத் தோன்றும் சுத்தம்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அங்கேயே தங்கிவிடச் சொல்லும் பசுமைப் போர்வை.  மானசீகமாக எடுத்துப் போர்த்திக் கொண்டேன்.  கவி உற்சாக மிகுதியால் 'ஓ'வென்று கத்தினான். விடுதியில் மூன்று ஜெர்மன் செப்பர்டு நாய்களும் இரண்டு நாட்டு நாய்களும் வளர்த்து வந்தார்கள். அவன் கத்தியதும் ஒரே ஒரு நாட்டு நாயைத் தவிர்த்து அனைத்து நாய்களும் பாய்ந்து, நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தன.  வந்து எங்களின் நலனை முகர்ந்து நோட்டம் விட்டன.  பின் தண்ணிருக்குள் இருந்த கவியை கூர்ந்து நோக்கி, அவன் வெளியே வந்ததும் அவன் காலைச் சுற்றியே இரண்டு மூன்றுமுறை வந்து, அவன் பாதுகாப்பை உறுதி செய்தன.  பிறகு, எங்கள் கூடவே இருந்தன.

சற்று நேரம் கழித்து, பக்கத்து மலைமுகடுக்கு செல்லும் பாதை ஒன்று தென்பட்டது.  அதில் ஏறப் போனேன்.  
கவி 'வேண்டாம்' என்றான்.  'ஏதேனும் தவறான பாதையாக இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பு முக்கியம்'  என்று அவன் எண்ணினான்.  

நான், 'ஏதாவது பிரச்சினைன்னா திரும்பி இதே வழில ஓடி வந்திரலாம்டா' என்றேன்.

அவனுக்கு சம்மதமில்லை என்றாலும், துணைக்கு வந்தான்.  நாய்கள் எங்கள் கூடவே இருந்தன.  ஒரு 30-40 மீட்டர் நடந்திருப்போம்.  நாய்கள் எங்களின் காலுக்குக் குறுக்காய் நடந்து வந்து, எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர விட மறுத்தன.  அதை மீறிச் செல்ல முயன்ற போது, வேண்டாம் என்று கெஞ்சுவதைப் போன்று மெல்லிய ஒலியை எழுப்பியவாறு, அண்ணாந்து அண்ணாந்து எங்கள் முகத்தைப் பார்த்தன.  மேற்கொண்டு செல்ல முடியாது என்று புரிந்து, மீண்டும் இறங்கத் தொடங்கினோம்.  குஷியாக அவையும் எங்களோடு வந்தன.


விடுதி அறைகளை நெருங்கிய போது, எல்லோரும் எழுந்திருந்திருப்பது தெரிந்தது.  சிலருக்கு புன்னகையை பதிலாகச் செலுத்திவிட்டு, தேநீர் அருந்த உணவுக் கூடத்திற்குச் சென்றோம்.  தேநீரும் காபியும் தயாராக இருந்தன. தேநீரை சில்வர் டம்ளரில் எடுத்து அருந்தத் தொடங்கினேன்.  உணவுக் கூடம் நடுவில் முற்றம் வைத்த வீடு போல இருந்தது.  இதில் முற்றம் இருக்கும் இடத்தில் ஒரு தொட்டி, அதில் நான்கு ஆமைகள் விடப் பட்டிருந்தன.  மழை பெய்தால் நீர் வந்து அதில் சேரும்.  இங்குள்ள விடுதியில் ஓடைகளின் நீரைக் கொண்டு ஒரு குளம் அமைத்திருந்தார்கள்.  அதில் ஒருபுறம் ஓடையின் நீர் வந்து விழுந்தபடி இருக்கும்.  மறுபுறம் அதே அளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கும்.  அதேபோன்ற அமைப்பு தான் அந்த உணவுக் கூடத்தின் ஆமைத்தொட்டிக்கும் வைக்கப்பட்டிருந்தது.  காலை உணவு ஒன்பது மணியைப் போல ஏற்பாடு செய்யப்பட்டது.  தோசை, சட்னி, புலாவ், மற்றும் ஒரு இனிப்பு வகை. மிக நன்றாக இருந்தது.  

காலை உணவு முடிந்ததும் குழு விளையாட்டுப் போட்டி என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னச்சின்ன விளையாட்டுப் போட்டிகள், வட்டத்திற்குள் சிலர் நிற்க வெளியிலிருப்போர் பந்தை எறிவர் - பந்து மேலே பட்டவர் வெளியே செல்லவேண்டும் என்பன போன்றவை.  ஆரம்பிக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் முழு ஈடுபாட்டோடு விளையாடியது, விளையாடி முடித்தபின்தான் உணர்ந்தேன்.  அதன்பின் மதியஉணவுக்குச் சென்றோம்.  மதியஉணவுக்குப் 'மட் கேம்ஸ்' -  சேற்றில் விளையாடலாம் என்றார்கள்.


மதியஉணவாக கோழிக்கறி வைத்தனர்.  சோறு, குழம்பு, தொட்டுக்கொள்ள வைக்கப்பட்ட கோழிக்கறி, ரசம் மற்றும் பஜ்ஜி என எல்லாம் வீட்டில் தயார் செய்யப்படும் தரத்தில் இருந்தது.  ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.  சாப்பிட்ட போதையோடு மீண்டும் அந்த ஓடையில் சென்று என் கால்களை நனைத்து அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்.  ரஞ்சித் என்னுடன் வந்தான், இங்கும் ஒரு ரஞ்சித் அமைந்துவிட்டான்.  என் ரசனைக்காரன்.  நுனிநாக்கு ஆங்கிலம் , ஹை-பை தோற்றத்தோடு இருப்பான். ஆனால் மிக மிக நல்ல பையன்.  மதியம் இரண்டு மணிக்கு மேல், சேற்றில் கையுந்து பந்து விளையாடச் சென்றோம்.  

முழங்கால் அளவு பள்ளம் வெட்டப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.  கையுந்து பந்துக்கான வலை கட்டப்பட்டிருந்தது.  முழங்கால் அளவு செந்நீர்.  பார்ப்பதற்கு எங்கள் ஊரின் செங்குளம் போல் இருந்தது.   அதில் இறங்கச் சென்றேன்.  ஏற்கனவே என் அலுவலகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளே இருந்தனர்.  அவர்கள் என்னை இறங்கவிடவில்லை.  அந்த திடலில், உள்ளே இறங்குவதற்கு சறுக்கல் ஒன்று அமைத்திருந்தார்கள்.  அதன்வழியாகத் தான் நான் இறங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர்.  எனக்கு, இறங்கினால் முழுதாக நனைந்து விடுவேனே என்று தயங்கி நின்றிருந்தேன்.  பின் வேறுவழியின்றி சறுக்கலில் வந்து, உள்ளே இறங்கினேன் இல்லை விழுந்தேன்.  நெஞ்சுவரை நனைந்திருந்தேன்.  பின் என் தயக்கம் முற்றிலும் பறந்துவிட்டது.  ஒரு தேர்ந்த எருமை எப்படி நீரில் இருப்பதை விரும்புமோ, அப்படி நான் மாறிப் போனேன்.  பந்து இடப்புறம் போனால், வலப்புறம் பாய்ந்து சேற்றில் முங்கி முங்கி எழுந்து சிரித்தேன்.  மற்றோரில் பலர் குடித்திருந்தமையால் பல அழிச்சாட்டியங்கள் செய்து எல்லோருக்கும் 'கிச்சு கிச்சு' மூட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது முடிந்த பின் ஓடையில் விளையாடினோம்.  கால் உரசும் அளவுக்கு தண்ணீரின் மேல் செல்லுமாறு இருந்த ஊஞ்சல், பெரிய கடற்பஞ்சு மீது அமர்ந்து ஓடையின் நீரில் மிதத்தல்,  ஓடையின் மேல் கயிற்றுப் பாலத்தில் நடத்தல், 10 மீட்டர் உயரத்திலிருந்து கயிற்றில் சறுக்கி ஓடையில் விழல் என்று மாலை வரை போயிற்று. கூச்சலிட்டுக் கொண்டு, பெரும் கொண்டாட்டமாய் இது அமைந்தது.


மாலை 6:30 மணி முதல், 'பார்பிக் கியூவுக்கு வாங்க' என்று என் மேலாளர் அழைத்துக் கொண்டிருந்தான்.  குடிப்பதைத் தான் அப்படிச் சொல்கிறான் என்று, எனக்கு அங்கு போன பின்தான், ரஞ்சித் சொல்லித் தெரிந்து கொண்டேன்.  மதுக்கூடம் எல்லோரும் அமரும் வண்ணம் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தது.  அறையாக இல்லை.  வெளிப்புறத்தைப் பார்க்கும் வண்ணம் வெட்டவெளியில், தளம் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.  பியர் பாட்டில்கள், ரம் பாட்டில்கள், சோடா பாட்டில்கள் என்று மேஜை நிறைந்து இருந்தது.  கூடவே விடுதியின் ஆள் ஒருவர் உணவு பரிமாறுவதற்காக நின்றிருந்தார்.  உணவு என்றால் உணவு இல்லை, சூப், சுண்டல், பொரித்த கோழிக்கறி என்று பரிமாற.  தெலுங்குப் பெண் ஒருத்தி இறுக்கமான உடை அணிந்து உலாத்திக் கொண்டிருந்தாள்.  கையில்லாத, முழங்காலுக்கு ஒரு ஜான் மேலே இருக்குமாறு உள்ள உடை.  அதை உடுத்திக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தாள்.  மது பரிமாறப் பட்டது.  மெதுவாக சூழல் கொண்டாட்டத்தின் மையம் நோக்கி நகரத் தொடங்கியது.  கூடத்தின் நடுவில் விறகு போட்டு நெருப்பு மூட்டப்பட்டது.  அது நெருப்போடு சேர்ந்து புகைந்து கொண்டிருந்தது.  அவ்வப்போது அருகில் சென்று குளிர்காய்ந்து வந்தோம்.  எட்டு எட்டரை மணி அளவில், புகை சூழ் கூடத்தில், போதையின் நிழலில் கூட்டம் அசைவாடிக் கொண்டிருந்தது.  ஒரு விளையாட்டு திட்டமிடப்பட்டது.  ஐந்து ஜோடிகள் ஆடவேண்டும்.  ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் ஆட வேண்டும் என்று யோசனை சொல்லப் பட்டது.  என் மேலாளர் என்னையும் அதனுள் இழுத்துவிட முயன்றான்.  நான் மறுத்துவிட, ஐந்து ஜோடிகள் ஆடத் தயாரான நிலையில் நின்று கொண்டிருந்தனர்.   போதையில், பெண் போல ஆட முயன்ற எல்லா ஆண்களும் கூட்டத்தின் சிரிப்புக்கான உத்திரவாதமாகத் திகழ்ந்தனர்.  நான் போயிருந்தால் இன்னும் அதிகமாக சிரிப்புக்கு உதவியிருக்கக் கூடும்.  பத்து மணிக்கு, விடுதியின் ஆள் வந்து சாப்பிடச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான்.  யாரும் நகர்வதைப் போலத் தெரியவில்லை.  அவன் முகம் அழுவது போலவும், எரிச்சலில் இருப்பது போலவும் எனக்கு ஒருசேரத் தோன்றியது.   கடைசியில் பதினொரு மணியைப் போல எல்லோரும் சென்று உணவுக் கூடத்தில் அமர்ந்தோம்.  நான் கட்லா மீன், சோறு, ரசம் சாப்பிட்டேன்.  வழக்கம் போல மிகத் தரமாக இருந்தது.  


பின் அலுப்பில் சென்று தூங்கி, மறுநாள் காலை எழுந்தோம்.  பக்கத்தில் இருக்கும் மலைமுகடுக்கு நடை கூட்டிச் செல்ல வழிகாட்டி வந்தார்.  முந்தின நாள் நான் சென்ற அதே பாதை.  நாய்கள் என்னை நடக்கவிட மறுத்த பாதை.  இப்போதும் அதே நாய்கள் கூடவே வந்தன.  ஆனால்  வழிகாட்டி இருந்ததால் அவை எங்களைத் தடுக்கவில்லை.  மனிதனை விட விலங்குகள் நல்ல நுண்ணுர்வு கொண்டவை போலும்.  பத்து நிமிட நடைதான்.  பெயருக்காக மலையேற்றம் என்று, இது நடந்து முடிந்தது.  மேலே சென்று சில நிமிடங்கள் நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்து, புகைப்படம் எடுத்து, கீழே வந்து காலை உணவு முடித்து, பின் வீடு திரும்பினோம்.

இது எனக்கு மிகவும் பிடித்த பயணம்.  காரணம் என்னவென்று யோசனை செய்ததில், அலைபேசிதான் என்று தோன்றியது.  கிளம்பும் முன் நான் சொன்னதன் படி, அங்கிருந்த ஒன்றரை நாட்களும் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தேன்.  அது என்னை மிகவும் நிதானமானவனாவும் அவ்வப்போது நடக்கும் அந்தந்த கணத்தை வாழ்பவனாவும் காட்டியது என்று தோன்றுகிறது. யாருமற்ற வெளியில் உலவுவதைப் போலக் கற்பிதம் கூட செய்து கொண்டேன்.  அதனால் தானோ என்னவோ, இப்படியான பயணங்களை நினைத்து என் உள்மனம் ஏங்கிக் கற்பனை செய்யத் தொடங்கிவிடுகிறது.  நான் நானாக இருக்க இது உதவும் என்று நினைத்துக் கொள்கிறேன். குறைந்தபட்சம் இதுபோன்ற மன திருப்திக்காகவாவது மீண்டும் மீண்டும் இதுபோல மலைகளிலோ, குகைகளிலோ, கடற்கரைகளிலோ தொலைந்துபோக ஆசைப்படுகிறேன்.

Monday, 8 August 2016

முதன்முறையாக அலுமினியப் பறவைக்குள் புகுந்து மும்பை வரை

கடந்த வாரம், முழுக்க என்னைக் கிறுக்கனாக்கி விட்டார்கள்.  பெங்களூர் வந்ததிலிருந்தே எக்கச்சக்க குழப்பங்கள்.  மூன்று மாதங்களுக்கு முன், அலுவல் ரீதியாக வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது.  பின் சொதப்பியது.   எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை.  பின், இந்தமுறை மும்பை (எ) பாம்பே செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. பின் அதுவும் இல்லை என்றார்கள்.  மூன்று, நான்கு முறை ஆமாம், இல்லை எனப் பலவாறாகச் சொல்லிச் சொதப்பி, கடைசி நேரத்தில், அதாகப்பட்டது திங்கட்கிழமைப் பயணத்துக்கு முந்தின வியாழக்கிழமை விமானச்சீட்டை பதியச் சொன்னார்கள்.  என் அலுவலகத்தில் பதிந்துவிட்டார்கள்.  இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சனி ஞாயிறு நான் என் ஊருக்குத் திருவிழாவுக்குச் சென்று வர வேண்டும்.  இதற்குமுன் இரண்டு மாதங்களாக ஊருக்குச் செல்லவே இல்லை.  திங்கள் காலை 7.10 க்கு விமானம். எனவே நான் மாலை 4 மணிக்காவது என் ஊரிலிருந்து கிளம்ப வேண்டும்.  இல்லையேல், விமானத்தைப் பிடிக்க முடியாமல் போகலாம்.  திருவிழாவன்று நான் அங்கிருக்காமல் கிளம்பினால், வீட்டில் எல்லோருக்கும் கோபம் வராதா என்ன?  அதனால் இங்கிருந்து யாரிடமும் சொல்லவில்லை.  வீட்டிற்குப் போய் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.  அது நல்ல பலனைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  யாரும் கோபப்படவில்லை.  அதனால் தான் இந்த கம்பெனிக்காரன்களும். தன் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார்கள்.  மின்னஞ்சலில் காட்டிய காட்டத்தை, நேரில் பார்க்கும் போது, வெளிக்காட்ட முடிவதில்லை.

ஊரில் இரண்டு நாட்களும் நிதானமாகப் போயின. சனிக்கிழமை, நீண்ட நாட்களுப்பின் திண்டுக்கல் காய்கறிச் சந்தைக்குப் போனேன்.  அடுத்தநாள் பிரியாணிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தேன்.  அடுத்தநாள் விழாவுக்குச் சென்று வந்தபின், பெங்களூரு கிளம்பினேன். இடையில் சேலம் வந்து ரஞ்சித்தைப் பார்த்து, இருவரும் டீக்கடைக்குப் போய்விட்டு நான் பெங்களூருக்கும் அவன் சென்னைக்கும் கிளம்பினான்.  அதிகாலை 2.30க்கு மடிவாலாவில் இறங்கினேன்.  அங்கிருந்து அறைக்கு 1கிலோமீட்டர் இருக்கும்.  அந்தநேரத்தில் நடந்து செல்ல வேண்டாமென்றெண்ணி, ஆட்டோவைக் கேட்டால், அவன் 100 ரூபாய் கேட்டான்.

நான், 'ஆரஞ்சு பேக்கரிக்கு 100 ரூ. முடியாது. நா நடந்து போய்க்கிறேன். வேணாம் விடுங்க.'.

'சரி சரி.  90 குடுக்கோ சார். நைட் டைம், நீங்க வேற பாவம் சார்'.

'அண்ணே, 1 கி.மீ. கூட இல்ல. 60 ரூ. தரலாம். லேட் நைட்டுங்கறதுனால வேணா 70 தருகிறேன்' - (என் அலுவலகம் 3 கி.மீ.  அதுக்கே 60 தான் அதிகபட்சம் தரவோம்.)

'80 ரூபா குடுங்கோ.. சார்'

'இல்லண்ணே'

'அதெல்லாம் தரலாம் சார். வாங்க வாங்க'

'எழுபது ரூபாய் தான் தருவேன்'

ஏறிவிட்டேன். இறங்கியதும், 70 ரூ. கொடுத்தேன்.

'அப்போ 70 ரூ. தான் தருவீங்களா?'

'அதத் தான சொன்னேன்'

'அப்போ இந்தா, இன்னும் 20 ரூ தரேன். அதையும் வாங்கிட்டுப் போ'.  இப்படிக் கேட்டால் இன்னும் தொகை தருவேன் என்று நினைத்துக் கேட்டான்.

'வாங்க போங்க' என்பது 'வா போ' - வுக்கு மாறியிருந்தது.  அவன் கேட்ட அடுத்த விநாடி, நான்  'அதெல்லாம் வேணாம். போங்க.   ஆனா, நான் இப்போ அந்த 20 ரூபாயையும் வாங்கிட்டா,  என்ன பண்ணுவீங்க?'.   அவன் முகம் கடுகடுவென மாறியது.  அதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் வண்ணமாக, அவனைப் பார்த்து சிரித்து வைத்து விட்டு வந்து விட்டேன்.  ஆட்டோ மிக வேகமாகப் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.

வீட்டில் வந்து, தூங்கினால் கட்டாயம் காலை விமானத்தைப் பிடிக்கமாட்டேன்.  எனவே. தூங்காமலேயே 4.30 க்கு ஓலா வண்டி வரும் வரை, ஒருவாரத்திற்குத் தேவையான துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.  பின், வண்டியில் ஏறி, விமான நிலையம் போனேன். முதல்முறையாக பயணிக்கப் போகிறேன்.  என்ன என்ன தேவை என்று எண்ணிக் கொண்டே இருந்தேன்.  போர்டிங் பாஸ் பிரிண்ட் எடுக்கவில்லை.  அதனால் உள்ளே போவதில் எதும் பிரச்சினை இருக்குமோ என்று பயந்து கொண்டேயிருந்தேன்.  இதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டும் சென்னை விமான நிலையத்திற்குப் போயிருக்கிறேன்.  முதலில் வாசலில் ஒரு ராணுவ காவல் வீரர், பயணச் சீட்டையும் அடையாள அட்டையையும் சோதித்த பின் என்னை உட்புக அனுமதித்தார்.  பின் உள்ளே சென்றபின் தான, அங்கேயே போர்டிங் பாஸ் எடுத்துக் கோள்ள முடியும் என்று.  என்னுடன் வேலை செய்பவர் வந்தார், அவர் தான் இதையெல்லாம் காட்டினார்.  பின் என் துணிப்பையை லக்கேஜ் செக்சனில் தள்ளிவிட்டு,  செக்கியூரிட் பகுதிக்குப் போனேன்.  மெட்டல் டிடெக்டர் வைத்து என்னையும், என் மடிக்கணினிப் பையை ஸ்கேனரிலும் சோதித்த பின் விமானம் ஏறும் பகுதிக்குப் போனேன்.  முழு வெள்ளைப் பகுதி, சுத்தம் சுத்தம்.  முற்றிலும் வாசனையற்ற பகுதியாகப் பட்டது.  பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பட்ட வாசனை ஒன்று உள்ளதாக எனக்குத் தோன்றும்.  திருச்சி - நீர் வாசனை(பாசி வாடை அல்ல, நீருக்கென்று குளிர்ச்சியூட்டும் வாடை ஒன்று நான் மட்டும் அறிவேன்.), திண்டுக்கல், மதுரை -  வெயிலோடு சேர்ந்த, வெங்காய வாடை, இப்படி.  பெங்களூரின் விமான நிலையத்துக்கு அப்படி எதையும் அறியமுடியவில்லை.  என்னோடு அலுவலகத்திலிருந்து மூன்று பேர் வந்திருந்தனர்.  அவர்களை முன்னுக்கு விட்டு, அவர்கள் எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதையே நானும் செய்தபடி, அவர்களுக்குப் பின்னாலேயே சென்று கொண்டிருந்தேன்.  7.10 மணிக்கு விமானம். நேரத்திற்கு வந்தது.  விமானம் வாசலிலிருந்து தொலைவாதலால், பேருந்து ஒன்று எங்களை அழைத்துப் போனது.

விமானத்தின் முன்னால் போனதும் தான் கவனித்தேன், அது அவ்வளவு ஒன்றும் பளபளப்பாகவெல்லாம் இல்லை.  சில இடங்களில் வண்ணப் பூச்சு உரிந்து காணப்பட்டது, மெல்லிய சொட்டை சொட்டையாக.  இரண்டு வாயில்கள் இருந்தன,  முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும்.  இரண்டுக்கும் தற்காலிக படிக்கட்டுகள் வந்து நின்றிருந்தன.  அப்படிக்கட்டுக்கள் டிராக்டர் அல்லது ஜீப் மூலம் இழுத்துவரப் பட்டன.  விவசாயத்திற்கு அடுத்து இங்குதான் டிராக்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன போலும்.  என் இருக்கை 27A, ஆன்லைனில் இதை புக் பண்ணியிருந்தேன்.  விமானத்தின் இடப்புறம் கொஞ்சம் போல பின்னால் அமைந்திருந்தது.  அதனால், பின் படிக்கட்டில் ஏறினேன்.  விமானப் பணிப்பெண்கள் எப்படி இருப்பர் என்று பார்க்கும் ஆர்வம் வேறு.  ஏறும் முன் என் ஃபோர்டிங் பாஸை சோதித்த பின், அதன் கடைசி நுனியில் அலுவலகப் பயன்பாட்டிற்கான பகுதியை கிழித்து வைத்துக் கொண்டபின் என்னை ஏற அனுமதித்தனர்.  இது கிட்டத்தட்ட நாம் தியேட்டர் நுழையும் முன் நடப்பதைப் போல இருந்தது.  மேலேறினேன்.  விமானப் பணிப் பெண்கள் இருவர், 'வெல்கம் சார்' என இன்முகத்தோடு வரவேற்றனர்.  பதிலுக்கு நான் பல் தெரியாமல் மட்டும் சிரித்து, தலையை அசைத்து ஆமோதித்தேன்.  பல் தெரியாமல் சிரித்தால் தான் காசுள்ளவன் எனப் பொருள் படுமாறு என் மனம் பழக்கப்பட்டிருந்தது. அவர்களின் முகங்களை சொற்ப நொடிகள் தான் பார்த்திருப்பேன்.  ஆனாலும், துல்லியமாக என்னால் நினைவு கூற முடிவது எனக்கே ஆச்சரியம் தான்.  பின்னோக்கி இழுத்து வாரப்பட்ட தலை. அழுத்தமாகவும் திடமாகவும் இடப்பட்ட உதட்டுச் சாயம் - அதன் பின், எப்போது விமானப் பணிப்பெண் என்ற சொல்லைக் கேட்க நேர்ந்தாலும் இந்த சாயம் தான் எனக்கு முதலில் ஞாபகம் வந்து தொலைக்கிறது.  இறுக்கமான கறுப்பு நிற உடை.  தலையில் குல்லாவெல்லாம் இல்லை.  நேர்த்தியாகக் கொண்டையிட்டிருந்தார்கள்.  ஆடை கழுத்து முதல் முழங்கால் வரை இருந்தது.  இதைத் தவிர பெரிய வித்தியாசமாகவெல்லாம் அவர்கள் தெரியவில்லை.  ஏனெனில் பெங்களூரில் 80-90 விழுக்காடு பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  அப்படியும் யாரேனும் இல்லை என்றால் அவர்கள் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களாக இருப்பார்கள்.  அதனால், அவர்களின் முகப்பூச்சும் உதட்டுச் சாயமும் ஆச்சரியமளிக்கவில்லை.  கால்களில் டிரான்ஸ்பரன்ட் உறை அணிந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், என் நண்பன் ஒருவன் அப்படித்தான் சொல்லியிருந்தான்.  ஆனால், இல்லை, வெறும் காலுடன் தான் இருந்தனர்.  வட்ட முகக்காரி ஒருத்தி, நீண்ட முகத்துக் காரி ஒருத்தி.  வட்ட முகத்துக் காரியின் முழங்காலில், உதட்டுச் சாயத்தின் சிறு தீற்றல் இருந்தது, முகத்திலிருக்கும் திருநீறு அளவுக்கு.  அங்கு ஏன் பார்த்தேன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  பெண்களைப் பார்த்த சில நொடிகளுக்குப் பின் நான் தலையைக் கீழே போடும் பழக்கம் உள்ளவன் நான். அப்போது சிக்கியது அது. நுழைவாயிலைக் கடந்து, உட்புகும் போது, 'என்னடா பண்ற' என்று அட்சர சுத்தமாக அந்த வட்டமுக விமானப் பணிப்பெண் பக்கத்தில் இருந்த பணிப்பையனைக் கேட்டாள். அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. முகம்  தமிழ் முகம் இல்லை.  பேச்சு மட்டும்.  திரும்பிப் பார்க்க எண்ணினேன், ஆனால் பார்க்கவில்லை.

பின், என் இடத்தை கண்டுபிடுத்து சென்று அமர்ந்தேன்.  ஜன்னல் ஓர இருக்கை.  இருக்கை ஒன்றும் சொகுசாவெல்லாம் இல்லை.  தமிழ்நாட்டில் ஓடும், தாழ்தளப் பேருந்தில் இருப்பதைப் போன்ற இருக்கைகள். நான் அமர்ந்த பின், பெல்ட்டை ஒருமுறை அணிந்து பின் அவிழ்த்தும் பார்த்துக் கொண்டேன்.  கிளம்புவதற்கு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன், எப்படி பெல்ட் அணிய வேண்டும்? அவசர நேரத்தில் என்னவெல்லலாம் செய்ய வேண்டும்? என ஒரு பெண் ஒலி பெருக்கியில் சொல்ல, அதை இந்த வட்டமுகக்காரி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.  விமானம் கிளம்பத் தயாரானது.  நான் ஜன்னலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.  ஒரு ஓட்டத்திற்குப் பின், மழையில் நனைந்த பறவை தன் சிறகைக் குலுக்குவது போல், விமானம் தன் இறக்கையின் பின் பகுதியை லேசாக, மேலும் கீழும் அசைக்க, விமானம் மேலே ஆகாயத்தின் மீதேறியது.  அப்போது என் பிருஷ்டத்தை யாரோ பின்னிருந்து தள்ளுவது போல் இருந்தது.  இன்னும் சொல்ல வேண்டுமானால், ஊஞ்சலில் ஆடும் போது முன்னுச்சத்தைத் தொடும் போது இருப்பது போலவும், ராட்டினத்தில் சுற்றும் போது முன்னுச்சத்தைத் தொடுவதும் போலவும் இருந்தது.  ஜன்னலின் வழியே, வெளி உலகம் தூரமாய்ச் சென்று கொண்டிருந்தது.   கொஞ்சம் கொஞ்சமாக மேகக் கூட்டத்தினுள் புகவும், கீழே எதுவும் தெரியவில்லை.  ஆனால் குவியல் குவியலாய் தென்பட்ட குட்டிக் குட்டி மேகக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது சோப்பு நுரை வைத்து விளையாடும், குழந்தைக்கு ஒப்பான உவகை கொண்டேன்.  அதன் பின் எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.  விமானம் மும்பையில் தரை இறங்கிய பின் தான் விழித்தேன்.

மும்பை மேக மூட்டத்துடன் இருந்தது. என் லக்கேஜை, கன்வேயர் பெல்ட்டில் அணிவகுப்பு செய்து கொண்டிருந்த மூட்டைகளில் அடையாளம் கண்டு, எடுத்து வந்தபின் வெளியேறும் வழி வழியே வந்தோம்.  அங்கே 'IGate Welcomes IR' என்ற அட்டையுடன் ஓட்டுநர் இருந்தார்.  அவரை வண்டியை எடுத்து வரச் சொல்லிவிட்டு, துரிதமாக காலை உணவை முடிக்க, விமான நிலையத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்தோம்.  மினி இட்லி மற்றும் வடை வாங்கினோம்.  மினி இட்லி சாம்பாரில் மிதந்து கொண்டு வந்தது,  பணியாரத்தை விட சின்னதாக.  மும்பை வந்துவிட்டோம் இனி இனிப்பான சாம்பார் இருக்காது என்று நினைத்த என் நினைப்பில் மண்.  பெங்களூரில் போடுவதை விட அதிக இனிப்பு சேர்க்கப்பட்டிருந்தது.  உண்டு முடித்து, காரில் ஏறி அலுவலகம் சென்றோம்.  மாலை தான் விடுதிக்குப் போவதாகத் திட்டம்.

அலுவலகத்தில் பயங்கர உபசரிப்பு.  எங்கள் அலுவலகத்தில் கிளையண்ட் வந்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோமோ அதெல்லாம் எங்களுக்குச் செய்யப்பட்டது.  ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அலுவலக உதவியாளன் 'டீ வேண்டுமா?' என்று கேட்ட வண்ணம் இருப்பான்.  அவர்கள் செய்திருக்கும் வேலையில் எங்களுக்கு இருக்கும் சந்தேகம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் இந்த ஒரு வார பயணத்தின் நோக்கம்.  'அது அதுபாட்டுக்கு' ஓடிக்கொண்டிருந்தது.  எல்லா நாட்களும் மதிய உணவு அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  சூப்பு, ரொட்டி, காய்கறிக்கூட்டு, சோறு வகை ஒன்று(வெண்ணைச் சோறு, வெஜிட்டபுள் சோறு இப்படி), பருப்பு, கோழி குருமா, இன்னும் இருவகைக் கூட்டுகள் பின் இறுதியாக இனிப்பு வகை ஒன்று(குளோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமாலய்).  எல்லா மேசைகளிலும் கொக்ககோலா டின்(சாதாரண மற்றும் டயட்)கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

மாலைகள் தான் நான் வெளியே சுற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.  முதல்நாள், மாலை விடுதிக்கு வரும்போதே உணவை முடித்துக் கொண்டோம்.  வடபம் மற்றும் கோல்கபா உண்டோம்.  கோல்கபா என்கிற பண்டத்தைத் தான் பானிபூரி என்று அழைக்கிறோம்.  அறைக்கு வந்து பையை வைத்துவிட்டு, வெளியே செல்லலாம் என்று எண்ணி, வெளியே கிளம்பினோம் நானும் இன்னொருவரும்.  பக்கத்தில் ஒரு மால் இருந்தது.  அங்கு சென்று சுற்றிப் பார்த்து விட்டு, அடுத்த நாள் வந்து, என் அண்ணன் மகனுக்கு என்று சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து அறைக்கு வந்து தூங்கினேன்.  அதன் பிறகு எங்களுக்கு சுத்தமாக நேரமே கிடைக்கவேயில்லை.  இரவு 10.30 மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து சேரவேண்டிதாய்ப் போனது. அதனால் பிந்தய நாட்கள் ஒன்றில் கூட நாங்கள் வெளியே சுற்றவேயில்லை.

விடுதியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.  அட்டகாசமான அறை.  5000 நாள் ஒன்றுக்கு.  பல்துலக்க, குளிக்க தேவையான பொருட்கள், ஷூ பாலிஷ், மைக்ரோ வேவ் அவன், சின்ன ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, என மிக சொகுசான அறை.  முக்கியமாக என்னைக் கவர்ந்த விஷயம், 'குளியலறையில் இருந்த குளிக்கும் தொட்டி'.  சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தில் அவன் ஆவிபறக்கும் தண்ணீரில் அப்படி ஒரு தொட்டியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பான்.  அது என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது.  குடிக்க முடியாவிட்டாலும், அதுபோல தொட்டியில் படுத்துக் கொண்டு குளித்தேன்.  மும்பையில் குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  அதனால் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க சுகமாகவே இருந்தது.  குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அதில் தினமும் காலை படுத்துக் கிடந்தேன்.

காலை உணவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.  நான் தங்கியிருந்த விடுதியில் காலை உணவு மட்டும் இலவசம்.  நான்கு நாட்கள் உண்டேன்.  ஒருநாள் கூட உணவின் சுவையில் சிறிது கூட மாற்றம் காணமுடியவில்லை.  இட்லி(காஞ்சிவரம் இட்லி என்று கூட ஒன்று ஒருநாள் வைக்கப்பட்டது), சாம்பார் (இது மட்டும் இனிப்பு கலக்காமல் கிடைக்கவேயில்லை.), போண்டா, உப்புமா, தண்ணிர்ப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இருவகை மில்க் ஷேக், வெஜ் நூடுல்ஸ், பேக்கன் (இதை மட்டும் நான் ஒருநாள் கூட தவற விடவேயில்லை.),  சிக்கன் உருண்டை வகை ஒன்று, பன்றிக்கறி வகை ஒன்று, இலையைப் போல தடிமன் அளவில் சிக்கன் வகைகள் இரண்டு, உலர் திராட்சை, குளிர்விக்கப் பட்ட தயிர்,  பழ வகைகள், பிரட் வகைகள் இரண்டு, மற்றும் இன்னும் சிலற்றை விட்டுவிட்டேன்.  இவை எல்லாவற்றையும் நிச்சயம் ஒரே நாளில் உண்ணவியலாது.  ஆக, நாள் ஒன்றுக்கு சில வகைகள் எனப் பிரித்து , எல்லாவற்றையும் சுவை பார்த்துவிட்டேன். அப்புறம் ஒருநாள், இரவுணவுக்காக 'village' என்றொரு உணவுவிடுதிக்குப் சென்றோம்.  அது ஒரு மாலில் இருந்தது.  அதன் மேற்கூரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.  கிறிஸ்மஸ் தாத்தாவின் குல்லாவின் உட்புறம் போல இருந்தது.  நாங்கள் தேடிய உணவு விடுதி நான்காவது மாடியில் இருந்தது.   உள்ளே நுழையப் போனபோதுதான் கவனித்தேன், அதன் தோற்றம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது.  ஒரு வட இந்திய கிராமம் போல உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.  சிவப்பும் ஆரஞ்சும் ஆதிக்கம் செலுத்தும் வண்ணப் பூச்சுக்கள் மிகுந்திருந்தன.  சேட்டுக் கடை கல்லாப் பெட்டி போல இருந்த முகப்பில் உணவுக்கான கூப்பன் வாங்குமாறு அறிவுறுத்தப் பட்டோம்.  தலை ஒன்றுக்கு 400 ரூபாய்.  நால்வரும் வாங்கிக் கொண்டு உட்புகுந்தோம்.  தாபா செட்டப் போல இருந்தன உணவு மேஜைகள்.   மூங்கில் நாற்காலிகள் ஒருபுறமும் உருண்டைத் தலையணையுடன் கூடிய படுக்கை ஒருபுறமுமாக மேஜையைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது.  உணவு வகைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.  தாறுமாறு.  ரொட்டியை ஆட்டுக்கறி மசாலாவை ஊற்றிச் சாப்பிட்டேன்.  அதிதூய சுவையுடன் இருந்தது.  ரஞ்சித்தின் அம்மா செய்திருப்பதைப் போன்ற கெட்டித் தன்மையும் கொஞ்சம் போல் காரமும் அதிகம் சேர்க்கப்பட்ட உன்னதமான கெட்டியான குழம்பு.  இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.  நன்கு சாப்பிட்டேன்.  இன்னொருநாள் வேறொரு உணவு விடுதிக்குச் சென்றோம்.  நான்கடி நீளமுள்ள தோசையும் ரொட்டிகளும் ஆர்டர் செய்தோம்.  கல்லில் போட்டுச் சுட்ட ரொட்டி அல்ல, நெருப்பில் போட்டுச் சுட்ட ரொட்டி.  கடிப்பதற்கு கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டப் பட்டேன்.  தோசைக்கான சாம்பார் மறுபடியும் இனிப்போடு வந்து சேர்ந்தது.

மும்பையின் நிலத்தையும் மனிதர்களையும் பற்றிச் சொல்ல வேண்டும். சாலைகள் அழுக்கான சாலைகளாகவே இருந்தன.  நான் இருந்தது, 'வாசி' என்ற இடம் இது மும்பையின் புறநகர்ப் பகுதி - நவி மும்பையைச் சேர்ந்தது.  நகர்புற மும்பைக்குச் செல்ல நேரம் கிடைக்காததால் அங்கெல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, அழுக்கடைந்த, பசுமை நிரம்பிய இடங்கள் தான்.  வட இந்திய மக்கள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு ஆச்சரியம் தான்.  70 விழுக்காடு கருப்பு அல்லது அதற்கு நெருக்கமாக இருந்தார்கள்.  அலுவலகத்தில் எல்லா வட இந்தியர்களையும் போல, எனக்கு இந்தி தெரியாது என்பதை அளவுக்கு மீறிய ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.  குறைந்த பட்சம் இரண்டு முறையாவது கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.  அதைப் பார்த்தால் எனக்கு அவர்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்க அப்படிச் சொல்கிறார்களோ என்று கூட நினைக்கிறேன்.  சென்னையைப் போலவே காலை நேரத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  புறநகர் ரயில் நிலையத்திலும் காலை 8 மணிக்கும் 200-250 க்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டு எடுக்க  நீண்ட வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்தனர்.  இங்கேயே இப்படி என்றால் உள்ளே எப்படி இருக்கக் கூடும் என்று கணக்கிட்டுக் கொண்டேன்.

இப்பயணம் பெரிதாக வெளியிடங்களைச் சுற்றப் பயன்படவில்லை.  கிட்டத்தட்ட சாப்பாட்டுப் பயணம் போலவே போனது.  கடைசிநாள், மீண்டும் விமானம் ஏறும் போது, சிறிய குறுகுறுப்பு இருந்தது.  ஏனெனில் வானிலை சரியில்லை என 30 நிமிடம் தாமதமாக கிளம்பியது.  இடையில் 6-7 இடங்களில் விமானி பெல்ட்டை அணிந்து கொள்ள அறிவுறுத்தினார்.  அதன்பின் விமானத்தின் உள்ளே சிறுசிறு குலுக்கல்கள் இருந்தன.  அப்போதெல்லாம் சின்னதாக பயம் எட்டப் பார்த்தது.  ஒருவழியாக வெள்ளி இரவு 11.40ஐப் போல வீடு வந்து சேர்ந்தேன்.  அடுத்தமுறை வட இந்தியா போனால்,  நிறைய சுற்றிப் பார்க்க வேண்டும்.

Wednesday, 3 August 2016

சென்னை - முன்பு புதிய இடம்

பெங்களூருக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.  என் அலுவலகத்தில் திடுதிப்பென முடிவு எடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்கு முன், 'மூன்று வாரம் மட்டும் இருந்துவிட்டு வா' என்ற உத்திரவாதத்தின் படி பெங்களூரில் உள்ள கிளையண்ட் அலுவலகத்திற்கு வந்தேன்.  முற்றிலும் புதிய அனுபவங்களின் இடமாக இந்த இடம் மாறிப்போனது.  இதுவரை தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை.  சென்றிருந்தாலும், கேரளா தான் சென்றிருக்கிறேன், நண்பர்களுடன்.  அது ஒரு பெரும் மகிழ்ச்சியான அனுபவம்.  அனுமோன் வீட்டுற்குச் சென்றிருந்தோம்.  அவன் அம்மா அவ்வளவு அன்போடும் பாசத்தோடும் எல்லோரையும் கவனித்தார்.  அறுவருக்கும் சமைத்து, கேரள விருந்தோம்பலில் எங்களை மிரட்டி வைத்தார்.  அப்படியான சொகுசான இடங்களுக்குத்தான் சென்று வந்திருக்கிறேன்.  சென்னை வந்ததும் கூட அப்படித்தான். அற்புதராஐ் வீடு மட்டும் அங்கு இல்லை என்றால், நான் ஏதாவது ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் என்ற பட்டத்துடன், பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்திருப்பேன்.




வெளியிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் என் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்கிறேன்.   
பெங்களூர் வந்த நாளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.  புதிய இடம் பாரக்கப் போகும் உற்சாகம் சிறிதும் இன்றி, பயத்துடன் தான் வந்தேன்.  கன்னடம் தெரியாது.  ஹிந்தி -  சுத்தம்.  நம் தின இதழ்களும், ஊடகங்களும் காட்டிய கர்நாடகாவால் உண்டான காழ்ப்புண்ரச்சியும் பயமும் பெரும் பீதியைத்தான் கிளப்பியிருந்தன எனக்கு.  வந்தபின்பு தான் ஒன்று தெரிந்தது, இங்கு இருப்பவர்களில், அதாவது பெங்களூரில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர்.  அதிலும் நான் இப்போது இருக்கும் மடிவாலாவையெல்லாம் கேட்கவே தேவையில்லை.  கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத தமிழ்ப்பிரதேசம்.  இந்தமாதிரி நம் ஊரில் ஆட்கள் இருக்க விடுவார்களா என்றெல்லாம் தெரியவேயில்லை.  ஆனாலும் இது தெரிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, கிட்டத்தட்ட முதல் இரண்டு மூன்று வாரங்கள்.  

கடையில் ஏதேனும் பொருள்களைக் கேட்க வேண்டும் என்றால் கூட திக்கித் திக்கிக் கேட்டுக் கொண்டு(கனடாவில் பேச முயன்று) திரிந்தேன்.  ஒருமுறை என் அண்ணி வெள்ளைப் பூண்டு வேண்டும் என்று கேட்க, அதைக் கடைக்காரனிடம் எப்படிக் கேட்பது என்று கடைக்காரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.  'யாராவது வெள்ளைப் பூண்டு வாங்க வர மாட்டார்களா? அப்படி வந்தால் தெரிந்து கொண்டு கேட்டு விடலாமே' என்று வருவோர் எல்லோரின் வாயையும் என்ன வாங்குகிறார்ளகள் என்றும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது தான் ஒரு அழகுத் தமிழ்க் கருப்பி வந்தாள்.  கருப்பின் பளபளப்புக்கென்று ஒரு போதை உண்டு, ஆப்பிரிக்கக் கருப்பைக் காட்டிலும் தமிழ், மலையாளப் பெண்களுக்கென்று தனிப்பட்ட பளபளப்பு உண்டு.    போகட்டும். வந்து அவள் என்ன வாங்கினாள் என்றெல்லாம் நான் கவனிக்கவில்லை. கவனிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை தானே?.  ஏதோ கேட்டாள், வாங்கினாள், சென்றாள்.  அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நான் வைத்த கண் வாங்காமல் பெண்களைப் பார்க்க, என் பிரக்ஞை தவறினால் தான் உண்டு.   பெண்களைப் பார்க்கும் எந்நேரமும் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருக்கும், பார்வை தப்பிவிடுமோ என்று.  அவள் சென்றபின் தான், எனக்கு உரைத்தது, அவள் தமிழில் பேசித் தான் ஏதோ வாங்கிச் சென்றாள்.  அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்வத்தில் அவள் என்ன பேசினாள் என்பதைக் கவனிக்கத் தவறியிருந்தேன்.  அதுவரை என்னைக் கண்டுகொள்ளமல் இருந்த கடைக்காரன், என்னைப் பார்த்து 'என்னப்பா வேணும்?' என்றான்.    நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை, அவன் கவனித்திருக்க வேண்டும்.   பாவிப்பயல், இத்தனை நாட்களும் என்னை உளறவிட்டு வேடிக்கை பார்த்திருந்திருக்கிறான்.  பின் வெள்ளைப் பூண்டை வெள்ளைப் பூண்டு என்றே தமிழில் அவனிடம் கேட்டுப் பெற்றேன்.  அதன்பின் நான் எங்கு சென்றாலும், முதலில் தமிழில் பேசுவேன்.  புரியவில்லை என்றால் மட்டுமே உடைந்த கன்னடத்தில் பேச முயற்சிப்பேன்.  இப்படியாக பெங்களூருக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன்.




சென்னை - புராஜெக்ட் என்ற உன்னதமான ஒன்றுக்காக, சென்னை வந்தோம்.  நானும் வினோத்தும் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை தொடரூர்தியைப் பிடித்து வந்தோம்.  இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே தொடரூர்தியில் சென்ற அனுபவம் உண்டு, அதுவும் திருச்சி-திண்டுக்கல்.   ஆகவே, இது புதிய அனுபவமாக இருக்கும் என்று போன எனக்கு, அது ஒரு தாறுமாறான அனுபவமாகிப்போனது.  உட்கார இடம் இல்லை. தரையில் கூட.  'மூங்கில் காடுகளே...' பாடலில் வரும் விக்ரமைப் போல வந்தோம்.   வந்ததும் அற்புதராஜ் எங்களை வந்து கூட்டிச் சென்றான்.  அவன் வீட்டில் நல்ல சோறோடு, நான்கு நாட்கள் ஊர் சுற்றினோம்.   தினமும் 50 ரூபாய் சீட்டோடு நாட்கள் கழிந்தன். பின்,  2011 டிசம்பர் மாத இறுதி, 27 என்று நினைக்கிறேன். முதன் முதலில் திண்டுக்கல் மற்றும் திருச்சியை விட்டு நான் தங்கப்போகும் இடம்.  ரூபன் - அண்ணன், ஆதம்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து வந்தான்.  நான் அவனுடன் சென்று தங்கினேன்.  வீட்டை விட்டு இருப்பது பிரச்சினையில்லை.  பள்ளி, கல்லூரி விடுதிகள் - என்னைப் பழக்கிவிட்டன.  இன்னும் சொல்லப் போனால் என்னால் இப்போதெல்லாம் சேர்ந்தாற்போல் வீட்டில் 2-3 நாட்கள் இருக்க முடியவில்லை.  நிலைகொள்ள மாட்டேன் என்கிறது.  சென்னையின் அறைதான் எனக்கான் இடமாகக் கூடத் தோன்றிவிட்டது. சென்னை வரும்போது தயக்கம் மிகுதியான ஒரு ஆளாக இருந்தேன்.  ஒன்றிரண்டு முறைகள் தவிர்த்து, மீதி நாட்களிலும் சென்னை வந்த தொடக்க நாட்ளகளில், இடம் தெரியாமல் அலையும் போதெல்லாம், யாரிடமும் பாதை கேட்காமல், நானே தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.  2-3 மணி நேரமாவது நடந்து திரிந்து, கால்கள் சோர்ந்து, திருப்பி செல்ல எத்தனித்து, 'சும்மா, கேட்டுப் பார்ப்போமே?' என்று கேட்டால், கிட்டத் தட்ட முதல் நபரே பாதையைச் சரியாகக் காட்டி விடுவார்.   ஆனாலும், 'நல்ல மாட்டுக்குத் தானே ஒரு சூடு' நமக்கு இல்லையல்லவா? அடுத்தமுறையும் நான் கேட்டதில்லை.  கிட்டத்தட்ட 10 முறையாவது இதே தவறைச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக, தயக்கம் குறைந்தது.  சுத்தமாகப் போனது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்.  வெகுவாகக் குறைந்திருக்கிறது. சென்னை தான் காரணம்.  அதன் ஜனசந்தடி வெகு இலகுவாக்குகிறது.  எது எப்படியோ ஆறுமாதங்களுக்கு முன் பெங்களூர் வரும் போது, எனக்கு உண்டான மனநிலையை எண்ணிப் பார்த்தால், ஏதேதோ தோன்றுகிறது.  கிட்டத்தட்ட பிரேக்கப் ஆன மனநிலைக்கு ஒத்தது.

இன்றும் என்னால் சென்னையில் தூங்குவதைப் போல் பிற இடங்களில் தூங்க முடிவதில்லை.  திருச்சி எனக்கு மிகப் பிடித்த, மனதுக்கு நெருக்கமான ஊர்.  அங்கு கூட மீண்டும் செல்ல வேண்டும் என்று பெரிதாகத் தோன்றவில்லை.  ஆனால், சென்னையின் வெப்பம், கசகசப்பு, வீச்சமும் என்னை இழுத்த வண்ணம் உள்ளன.  இன்னொரு முக்கியமான காரணம், அங்குதான் நானே சம்பாரித்த ஆட்கள் உள்ளனர்.  வீடு திருப்புதல் எப்போது?