Pages

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, 11 December 2015

அட்ரிலினும் - அன்பும்

என் அலுவலகத்தில் பிராமணர்கள் அதிகம்.  இதைக் கண்டறிய தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதும் போல அவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும் விதமாக, தனித்துவமான மொழியைப் பேசுவதாகட்டும், ‘அய்யோ, நான்-வெஜ்ஜா’ என்பதாகட்டும், இப்படி வெளிப்படுத்திய வண்ணம் இருப்பர்.  எல்லோரையும் போல் எனக்கும் அது அசூயையாகவே இருக்கும்.  இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும்.  ஒருபோதும் துவேஷத்தைக் காட்டுவதில்லை.

தங்களின் உணவுப் பழக்கத்தை அதிகமும் சிலாகித்துப் பேசிய வண்ணம் இருப்பர்.  எங்களிடம் ஒரு புராஜக்ட் ஒன்று உண்டு, ஆன்லைன் கறிக்கடை.  அதன் மேலாளர் அய்யர் பெண்மணி.  கேட்கவும் வேண்டுமோ?  கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் தன் ஒவ்வாமையை, மாமிச உணவின் மீதான தன் ‘உவ்வே’யை காட்டுவார்.  எனக்காகட்டும், அதில் வேலை செய்யும் என் நண்பனாகட்டும் சடாரென வெறுப்பு ஒன்று வந்து தொலைக்கும்.  நியாயம்தானே? இப்போதெல்லாம் அது கொஞ்சம் கொஞ்சமாக சரியில்லையோ என்று தோன்றியவாறு உள்ளது.  காரணம் இருக்கிறது.  

இடையில் ஒருநாள், அலுவலகத்திலிருந்து சாப்பிட வெளியே ஒரு ஜப்பானிய கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.  கடையின் பெயர் - மொமோ யொமா.  உள்ளே நுழைந்ததும் ஒரு வாசம்.  அது உணவுப் பொருள்களின் வாசம் என்பதை சாப்பிட ஆரம்பித்தபின் தான் தெரிய வந்தது.  நான், கிடைத்த எல்லா அசைவத்தையும் ஆர்ட்ர் செய்தேன், பன்றி, மாடு, மீன்(சுசி, டூனா) மற்றும் சிக்கன்.  அங்கு எனக்கு சில ஆச்சரியங்கள் இருந்தன.  தேநீர் குளர்ந்திருந்தது. அதுவும் துளி கூட இனிப்பின்றி, வெளிர் பச்சை வண்ணத்தோடு, சுவையும் மிக மிக மென்மையான கசப்பு.  அசைவ உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் அரைவேக்காடுதான். மாட்டுக்கறி நன்றாக இருந்தது.  பன்றிக்கறி இதுவரை நான் சாப்பிட்டதில் மிக மிக மென்மையான பன்றிக்கறி.  செம்பருத்தி இதழ்களைத் தின்பதைப் போல இருந்தது.  மீனை சமைக்கக் கூடாதாம், பச்சை மீனை இரண்டு விரல் அளவு  பிரட் துண்டின் இடையில் வைத்து இருந்தனர்.  வேகவைக்காதது என்று சொல்லியிருந்தனர். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை, மாடு மற்றும் பன்றிக்கறையைப் போல, அரைகுறையாக வேகவைத்திருப்பார்கள் என்று.  பிறகுதான் தெரிந்தது, சுத்தமாக வேகவைக்கப் படவில்லை.  பச்சை மீன் அப்படி இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.  கவிச்சை அடித்தது.  ஆனாலும் அதெல்லாம் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. சாப்பிடும் போது என் நாக்கை நானே சாப்பிடுவது போல ஒரு ருசி.  உப்பின் சுவை சமைக்கப் படாத இறைச்சியில் அதிகம் இருக்கும் போல.  மொத்தம் ஆறு மீன் துண்டுகள்.  இரண்டுக்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை.  மூன்றாவது துண்டை வாயில் வைத்தபோது, குமட்டிவிட்டது.  கவிச்சையெல்லாம் ஒரு பொருட்டல்ல, ஆனால் பச்சைக் கறியின் சுவையை என்னால் ஏற்கமுடியவில்லை.  எனக்கெல்லாம் உணவுப் பொருளும் குமட்டும் என்று கண்டுகொண்டேன்.  ‘நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே கூடுகட்டி வாழ்ந்தவன்’ என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடிதான்.

இதன்பின் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தேன், என் அருகே அமர்ந்திருந்த நான்கு சைவ பக்கிங்களின் நிலையை. ரொம்பக் கஷ்டம் தான்.  பாவம்.  அன்று முதல், அவர்களுடைய மாமிச உணவின் ஒவ்வாமையை என்னால் உணர முடிகிறது.  ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்த் திரைப்படங்களில் அய்யர்களை துக்கடாக்களாக, No: 1 காமெடிப் பீஸுகளாகக் காட்டியபடி தான் இருக்கிறோம்.  அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை.  ஆனால் இப்போது அதே போல மாமிசம் உண்பவர்களை, அவர்களின் கூட்டத்தில் இருந்து என்னைச் சொல்லும் போது புரிகிறது.  அன்றுமுதல் நான் வெறுமனே அவர்களை எள்ளல் செய்வதை விட்டொழித்துவிட்டேன்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பேணும் பொருட்டு அதை விடுத்த பாடும் இல்லை, சீண்டலின் போது நானும் மடக்குவதற்கான பேச்சுக்களைப் பேசியிருக்கிறேன்.  பிழைதான்.  செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நிற்க.

மாமழை ஒன்று எம்மைச் தழுவிச் சென்றிருக்கிறது.  அது ஏற்படுத்திய விளைவுகள் பலவேறு மனக்குழப்பங்களையும் மனத்தெளிவுகளையும் எல்லோரிடத்திலும் உண்டாக்கியிருக்கிறது.  குழப்பங்களாக சொல்வதென்றால், அரசியல் நடவடிக்கைகளும், மீடியா குவிந்ததும், வட இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளும், நம்முடைய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், அதனால் நாம் அடைந்த விளைவுகளும், வெள்ளத்தின் முதல் இரண்டு நாட்களில் சில கடைக்காரர்கள் கொள்ளை விலைக்கு விற்றதும் மற்றும் இன்னபிற.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களினால் தான் நம் கீழ்மைகளும் மேன்மைகளும் ஒருசேர வெளிப்படும்.  அனைவரின் மனச்சாட்சியோடும் இம்மழை ஒரு மாபெரும் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறது.  அதை தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், களப்பணியார்களின் பேட்டிகளும் காட்டிய வண்ணம் உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா மக்களும் இருந்திருப்பார்கள் தானே?  வீட்டில் சமைக்க இயலாத பல ஏரியாக்களில் முதலில் வீதியில் அடுப்பை ஏற்றியது அய்யர்கள் தானாம்.  கேள்விப்பட்ட போது ஒருவகை நெகிழ்ச்சி ஏற்பட்டது.  பொதுவாக பொதுப் பிரச்சினைகளுக்கு தெருவிலிறங்கிச் செயல்படுவது ஒருவகை பொறுக்கித் தனம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்பது என் கணிப்பு.  

நாய் விரட்டம் போது, தாண்ட முடியாத பள்ளத்தையும் தாண்டி விடுவோம்.  அதுபோன்ற அசாதாரண சம்பவங்களின் போது நம்முடைய சுரப்பிகளில் ஒன்றான ‘அட்ரலின்’ சுரந்து அப்படி ஒரு வேகத்தையும் ஒரு  உச்சகட்ட விழிப்புத் தன்மையையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.  அப்படி ஒரு விழிப்புத் தன்மையை கடந்த சில வாரங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளேயும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதைப் பார்க்கையில் சிறு நெருப்பும் ஒளியும் தென்படுகிறது. பாரதி பிறந்தநாளான இன்று, அந்நெருப்பை அணையாமல் காத்து, சுயநலக் காட்டில் வைப்போம். வெந்து தணியட்டும் அக்காடு.  இப்பதிவை ஆரம்பித்த போது, இன்று பாரதியின் பிறந்தநாள் என்பதே என் நினைவில் இல்லை.  ஆகவே யாரும் இப்பதிவின் தொடக்கத்தைக் கொண்டு பாரதியை இணைப்பதாக எண்ண வேண்டாம்.  அவர் அமைப்புகளுக்குள்ளும் வீண் ஜம்பத்துக்குள்ளும் அடங்காதவர்.


வாழ்க பாரதி.

Sunday, 29 November 2015

தேங்கிவிட்டோமா?





நொபுரு கரோஷிமா - இந்தப் பெயரை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.  யாரென்று தெரய வந்த பின் வெட்கத்தால் வெம்முகிறேன். இம்மாதம் 26-ல் இறந்து போயிருக்கிறார்.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.  பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

ஜப்பானியர்.  24 ஏப்ரல் 1933-ல் பிறந்திருக்கிறார்.  வரலாற்றுத் துறைப் பேராசிரியராக்ப் பணியாற்றிருக்கிறார்.  இவருடைய ஆய்வுகள் தென்னிந்தியாவைச் சார்ந்து அதிலும் தமிழக வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.  நானும் அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் நம் வரலாறே.  தெற்காசிய வரலாற்றாசிரியர் என்று அவர் குறிப்பிடப்பட்டாலும், பண்டைய தமிழக வரலாறு சார்ந்தே அமைந்திருக்கிறது அவருடைய ஆய்வுகள்.  வரலாறு எப்போதும் கடந்த காலத்தின் தரவுகளின் மூலம், எதிர்காலத்தைக் கண்டடைய முயல்வதின்றி வேறில்லை. எனவே வரலாற்றினை அரசியலுக்காக படிக்காமல், சரிவரச் செய்வோர் எப்போதும் சமரசமில்லாத ஆட்களாகவே இருப்பர்.  எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் சிலர் அப்படி இருந்துள்ளனர்.  கல்லூரியில் ‘Religious Docotorine’ எடுத்த பாதிரியார் தம்புராஜ் அப்படிப் பட்டவர்களில் ஒருவர்.  திருச்சபையின் வரலாற்றைத் தெளிவுறச் சொன்னவர்.  அப்படிப் பார்க்கையில், நொபுரு கரோஷிமா இன்றைய நம் அரசியல்வாதிகள் சொல்லும் வரலாற்றைக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார் போலும், தன் தரவுகளால்.  தீவிரமான மாற்றுப் பார்வை ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.  எவரும் மறுத்தது போல் தெரியவில்லை.  ஆனால், மௌனமாக, காரணமின்றி நிராகரிக்கப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.  

நான் சொல்லப் போகின்றனவற்றை நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம்.  ஏன், மேலதிகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.  நானும் அங்கிருந்தே தெரிந்து கொண்டேன்.  ஆனாலும், என் தெளிவுக்காக பின்வருமாறு தொகுத்துக் கொள்கிறேன்.

  1. உலகத் தமிழாராய்ச்சிக் நிறுவனம்(IATR - உ.த.நி) பல தமிழ் அறிஞர் பெருமக்களின் பெருமுயற்சியால் 1964-ல் நியூ டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கிறது.  அதன் முதல் அமர்வு 1966-ல் கோலாலம்பூரில் நடந்திருக்கிறது.
  2. உ.த.நி. தொடக்கத்தில், முக்கிய ஆளாக இருந்தவர், தனிநாயகம் அடிகளார்.  இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பாதிரி.
  3. 1967-ல் தி.மு.க. தேர்தலில் வென்று அண்ணாத்துரையின் தலைமையில் ஆட்சிப் பீடம் ஏறுகின்றது.  1968-ல் சென்னை(மதராஸ்)யில் நடப்பதாக முன்னமே திட்டமிடப்பட்டிருந்த உ.த.நி.ன் அடுத்த அமர்வு, ஆட்சி மாற்றத்தால், அரசியல் சாயம் சற்றே பூசப்பட்டு விடுகிறது.  ஆனால், அதன் வீச்சு வெறுமனே அரசியலாக மட்டும் இல்லை என்பது மட்டும் தெளிவு.
  4. அதன் அடுத்தடுத்த அமர்வுகளும் அவ்வாறே.  1981-ல் மதுரை(அ.இ.அ.தி.மு.க - எம்.ஜி.ராமச்சந்திரன்), வரும் தேர்தலுக்கான விளம்பரமாக, ‘பாரு என் வெயிட்ட’ என்பது போலவே நடந்திருக்கிறது.  1985-ல் கோலாலம்பூர்(அ.இ.அ.தி.மு.க-எம்.ஜி.ராமச்சந்திரன்) - அதே வேலை.
  5. ஏழாவது அமர்வு, 1989-ல் மொரீஷியஸில் நடந்திருக்கிறது.  நொபுரு கரோஷிமா, இதில் கலந்து கொள்ளவில்லை.  இந்த அமர்வில் அவர் உ.த.நி.ன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
  6. எட்டாவது அமர்வு, 1995(அ.இ.அ.தி.மு.க - ஜெயலலிதா)-ல் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது.  உ.த.நி. ஒருங்கிணைத்திருக்கிறது, நொபுரு கரோஷிமாவின் தலைமையில்.  அரசியல் நிகழ்வுகளையும், அமைப்பின் நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க முயன்றதாகச் சொல்லியிருக்கிறார்.  நமக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று?
  7. ஒன்பதாவது அமர்வு, ஜூலை, 2010(தி.மு.க.- கருணாநிதி)-ல் கோயம்புத்தூரில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசின் சார்பில், நொபுரு கரோஷிமாவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப் படுகிறது.  அதற்கு பதிலாக, மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். அவை,
    1. நான்கு மாதங்கள் என்பது வெகு குறைவு.  இன்னும் ஒரு ஆறு மாதங்கள் சேர்த்துக் கொண்டு, 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் ஏற்பாடு செய்வது சிறந்தது.
    2. அரசியல் நிகழ்வுகளும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது.
    3. 1995-ல் நடந்த எட்டாவது அமர்வில் முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் வெளியிடத் தயாராக 2005 முதல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய, அதாவது 2010-ன் தமிழக அரசு, வெளியிடுவதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுக் கொண்டிருந்த போதும்.
நொபுரு கரோஷிமாவின் முதல் கோர்க்கையைத் தவிர மற்றவை ஏற்கப்பட்டன.  காரணம் நமக்குத் தெரியாதா என்ன? 2011-ல் தேர்தல்.  ஏற்கனவே இலங்கைப் பிரச்சினையில் மூக்கடி பட்டாயிற்று.  அந்த வலிக்கு, இவ்விழாவினைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முயன்றிருப்பார்கள் போல. 

நிற்க.

நொபுரு கரோஷிமா, தமிழுக்கான ஆராய்ச்சியில் புதுப்போக்குகளை திறந்து விட்டிருக்கிறார்.  நான் இன்னும் படித்து அவரை அறியவில்லை.  அவர் தலைமைப் பொறுப்பேற்றது முதல், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கிறது.  எம்.ஜி.ஆர். மதுரை அமர்வை, தன் அடுத்த தேர்தலுக்கான பலம் காட்டும் போட்டியாகவே எண்ணி நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதியும் அஞ்ஞனம்,  ஆட்சி முடிவதற்குள், தான் முன்னின்று, அவ்விழாவினை தன் வாழ்வில் ஒருமுறை நிகழ்த்த ஆசைப்பட்டு நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதி, விழாவுக்கு முன், தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொன்னார்.  அதையே சொல்லி லியோனி புகழ்ந்ததையும் காணும் பேறு பெற்றவர்கள், நாம்.

நொபுரு கரோஷிமா, 2010-ல் தான் பதவி விலகியிருக்கிறார்.  காரணம் என்னவென்று சொல்லத்தான் வேண்டுமோ?  மனம் வெறுத்து, இயன்றதைச் செய்வோம் என்று இருந்தவர், போதும்டா சாமி என்று போயிருக்கிறார்.  இன்னொரு மனம் வருந்தச் செய்யும் செய்தி, அவருடைய நூல்களில் ஒன்று கூட இன்று வரை மொழிபெயர்க்கப் படவில்லை.

ஒரு மொழிக்கு, அதன் நிலவியல், பண்பாடு, அரசியல், மற்றும் கருத்துத் தளம் சார்ந்து ஆய்வுகள் அமையப் பெற வேண்டும்.  ஏனெனில், ஆய்வுகள் மறுப்பாய்வுகளை உண்டாக்கும். ஆய்வுகளும் - மறுப்பாய்வுகளும், உரையாடல் மூலம் கருத்தை உண்டாக்கும்.  அது, நாம் இனி செல்ல வேண்டிய பாதையைத் தெளிவுறக் காட்டும்.  அதுசரி, பெரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரின் ஆய்வு நூல்களே இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் போது, மறுப்பாய்வு எப்போது? உரையாடல் எப்போது?

என் எளிய வினாக்கள் சில.  நொபுரு கரோஷிமாவின் மரணச் செய்தி, ஏன் என்னைப் போன்ற சாமானியனைச் சென்றடையவில்லை? நாளேடுகள் செய்திகள் வெளியிட்டிருக்கலாம்.  சாமானிய நாளேடுகளாக அறியப்படும், தினத்தந்தி போன்றவற்றில் இதன் வீச்சு அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை?  எதற்கெடுத்தாலும் கூட்டம் போடும்/நடைபயணம் மேற்கொள்ளும்/அறிக்கை விடும்/கடிதம் எழுதும், நம் நலத்தை நம்மை விட அதிகம் விரும்பும், நம் அரசியல்வாதிகள் எங்கே? அல்லது, இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதை நாம் நிறுத்திக் கொண்டுவிட்டோமா? ஆர்வமில்லையோ?

என் பயங்கள் சில.  
தமிழ், இதே வீச்சோடு எம் தமிழ் நிலத்தில் வாழுமா? இல்லை, தமிழின் எதிர்காலம், தமிழகம் அல்லாத, தமிழர் வாழும் நாடு / பகுதியா?  அரசியல் கலக்காத தமிழ் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், அரசியலால் தமிழ் அழுக்கடையாமல் / மங்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?  
தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்கப் பட்டிருக்கலாம்.  ஆனால், பாதிக்கப்படவில்லை என்று சொல்வதற்கான முகாந்திரம் இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது.  இருக்கலாம்.  தமிழ் தவிர்த்து, ஆங்கிலம் மட்டும் உரையாடல் மொழியாக இருக்கும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க துடிக்கும், எம் இனம் தேடுவது எதை?  இரண்டாம் மொழியாகக் கூட, தாய்மொழியை எடுக்காமல் பிற மொழியை தேர்வு செய்யும் கூட்டம் சொல்ல வருவது என்ன?  மொழியும் ஒரு அடையாளம் என்பதை மறந்துவிட்டோமா?

நிற்க.

பின்னகரவில்லை நாம்.  அதே நேரம், நாம் முன்னோக்கியும் நகரவில்லை.  ஓடும் வரை தான் நீரும், மொழியும் சுத்தமாக இருக்கும். தேங்கினால்?  சகதி. பின் சதுப்பு. சதுப்பிலிருந்து காலை எடுப்பது அவ்வளவு எளிதில்லை. அவ்வப்போது யோசித்துப் பார்ப்போம். தேங்கிவிட்டோமா நாம்?

நொபுரு கரோஷிமாக்கு அஞ்சலி.  ஆங்கிலத்தில் அவர் பேட்டி ஒன்று உள்ளது.  அது சொல்லட்டும் அவர் வாழ்நாள் கருத்தை. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece


உதவிய இணைப்புகள்:

  1. http://www.jeyamohan.in/81216
  2. https://en.wikipedia.org/wiki/Noboru_Karashima
  3. http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=180&Itemid=253
  4. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
  5. http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

Monday, 23 November 2015

சென்னையின் தேநீர்



எனக்கென, ஒவ்வொரு ஊருக்கும், தனிப்பட்ட மணமும் சுவையும் உண்டு.  ஈரநெடி அற்ற மணமும், புளிப்பின் காய்ந்த சுவையும் திண்டுக்கல்லுக்கு.  பழவாடையும் பேச்சின் சுவையும் மதுரைக்கு.  சுகந்த மணமும் மண் வாசனையும் திருச்சிக்கு. சென்னைக்கு?  எவ்வளவு நீ…………..ண்ட சிந்தைக்குப் பின்னும் என்னால் வகைப்படுத்த முடியவில்லை.

எல்லாவற்றிலும் ஒரு கலவையும் அதனால் உண்டான தனித்துவமும் கொண்ட அற்புதமான ஊர், சென்னை.  இதில் என்னை பெரிதும் கவர்ந்தது, தேநீர்க் கடை.  ‘மாஸ்டர், ஒரு டீ’ என்ற சத்தம் என் கைகளுக்கு தேநீரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். மற்ற ஊர்களில் உள்ளூர்க்காரனானாலும் டோக்கன் வாங்காமல், நமக்கான டீக்கு உத்திரவாதமில்லை.

சென்னையில், ஒரு சத்தத்தில் எனக்கான டீயை முன்பதிவு செய்யலாம்.  அடுத்த இரண்டு நிமிடங்களில் டீ என் கையில் இருக்கும்.  அதற்கு பெரும்பாலும் சிகிரெட்டே தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.  வடைகள் வைக்கப் பட்டிருந்தாலும் சமோசாக்களே பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கின்றன.  அதற்கான சட்னி பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை.  அதன் ஆதார சுவையை அனைவரும் சுவைக்க விரும்புகின்றனர் போலும்.  அதற்கும் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை.  நாளிதழ்களை ஒரு ஜான் அளவுக்கு கிழித்து கத்தையாக வைக்கப்பட்டிருக்கும்,  பிஸ்கட் பாட்டில்களுக்கு இடையிலோ அல்லது வளைக்கப்பட்ட சைக்கிள் சக்கரக் கம்பியில் கோர்க்கப்பட்டோ.  

சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பணம் கொடுப்பது இங்கு வழக்கம்.  அதுவே என்னை ஆரம்பத்தில் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.  அதுபோக, நான் சொல்வதே கணக்கு.  இரண்டு சமோசா, ஒரு டீ, ஒரு கிங்ஸ் என்பன போன்ற சொற்கள், இங்கு கிராமத்துச் சொலவடைகள் போலப் புழங்கும்.  உரத்த சிரிப்பொலிகள் எந்நேரமும் அங்கு யாரோ ஒருவரால் எழுப்பப் பட்டுக் கொண்டே இருக்கும்.  மக்கள் கூடும் இடங்கள் என்றாலே அப்படித் தானே.  சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் டீ மாஸ்டர்களாக இருந்து நான் இதுவரை பார்த்ததில்லை.  ஸ்டைல் என்ற சொல்லுக்கான பொருளை மிக அழகாக தங்களுக்கானதாய் இவர்கள் மாற்றிக் கொண்டார்கள் போல.  சீனி போட்டு முதலில் கண்ணாடிட் டம்ளர்களை அடுக்கி வைப்பர்.  பின் பாலை ஊற்றுவார்கள். அதன்மேல் டீத்தூள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரை சரியான அளவில் கலப்பர்.  அது, தழுவிக்கொள்ளும் காதலர்கள் போல, ஒன்றோடொன்று கலந்து கடைசியில் ஒன்றாக மாறி, டீயாக உருவமெடுத்து நிற்கும்.  மேலே நுரை நிற்காததெல்லாம் ஒரு டீயா?.  நுரைதான் டீக்கு கிரீடம்.  மாஸ்டர் அதற்காக இரண்டு மூன்று முறை ஆற்றி பக்கத்திலிருக்கும் ஒரு ஜானுக்கும் குறைவான திண்டில், கையால் ஒரு சுழற்று சுழற்றிவிடுவார்.  பம்பரம் போல அதுவும் திண்டிலிருந்து வழுவாமல்(இதுவும் வழுவமைதியா?) மூன்று சுற்று சுற்றி நிற்கும்.  பரிசாரகன் ஒருவன் இருப்பான்.  அவனைத் தீண்டி அது நம்மை வந்து சேரும்.  பெரும்பாலும் அவன் சின்னப் பையனாக இருப்பான். அவன் அடுத்த டீ மாஸ்டர் ஆவதற்காக அவ்வேலையைச் செய்து கொண்டிருப்பான்.

சமோசாக்கள் வான்கோழியின் முட்டைக்கு மூக்கு முளைத்து போல, பெருத்த அடிப்பாகம் கொண்டிருக்கிறது.  எனக்கு, வெகுநாள் வரை முக்கோணமாக இல்லாத அதை சமோசா என்றழைக்கவே ஒரு மாதிரி இருந்தது.  ஊட்டி, கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளையாவிட்டால் இந்த சமோசாவிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம்.  அந்த ஒரு அம்சமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.


சென்னையில் ஐம்பது அடிக்கு ஒன்றிரண்டு டீக்கடை இருக்கும்.  சென்னையின் வீதிகள் எல்லாம் டீக்கடைகள் என்ற சரடால் கோர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றும்.  அது ஒரு சமூகக் கூடம்.  ஒரு டீக்கடையில் ஒருநாள் அமர்ந்தால் போதும், மொத்தத் தமிழ் நாட்டின் வட்டார வழக்கையும் கேட்டுவிடலாம். அவ்வகையில் அது தமிழ்நாட்டின் முகம்.