Pages

Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Saturday, 21 November 2015

தன் வரலாறு

ஊர், கோவில், சாதி வரலாறு, என் பூர்வீகம் போன்றவை குறித்து எனக்கு எந்தவித ஆர்வமோ ஈடுபாடோ இருந்ததில்லை.  ஒருநாள் முத்துவின் தம்பி கொடுத்தாக அற்புதராஜ் புத்தகம் ஒன்றைக் கொடுத்தான்.  மொழிபெயர்ப்பு புத்தகம்.  பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள் எனக்கு ஆர்வத்தை தூண்டாதவை.  இத்தனைக்கும் அதுவரை ஒரு மொழிபெயர்ப்பு நூலைக்கூட வாசித்ததில்லை என்பது முரண்நகை.  அப்புத்தகத்தின் முகப்பில் ஒரு கருப்பினத்தவர் காயம்பட்ட தன் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார்.  அவர் முகத்தில் அப்பியிருந்த சோகமும் இயலாமையும் என்னை அப்புத்தகத்தை தொடவிடாமல் செய்தது.  மற்றொரு காரணம்,  மொழிபெயர்ப்பு நூல்களில் அந்நியத்தன்மை அதிகம் இருக்கும் என்று நம்பியமை. இதுவரை நான் புத்தகத்தின் தலைப்பைக்கூட படிக்கவில்லை.  

தனிமை ஒரு ஆலகால விஷம்.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.  சமயங்களில், அளவுக்கு மிஞ்சின நஞ்சும் அமிர்தமாவதுண்டு.  அப்படியான சந்தர்ப்பமொன்றில் தனிமையைப் போக்கவேண்டி, ‘ஏழு தலைமுறைகளை’ எடுத்தேன்.  ஆங்கிலத்தில் அலெக்ஸ் ஹேலி(Roots) எழுதியது.   தமிழில் மொழிபெயர்த்தவரின் பெயரை மறந்துவிட்டேன்.  மன்னிக்க.  முதல் மூன்று அத்தியாயங்களை, நேரம் கடந்து விட்டதா நேரம் கடந்து விட்டதா என்று கடிகாரத்தை சரிபார்த்தபடியே படித்து முடித்தேன். அதன்பின் தான், ‘குண்ட்டா கிண்டே’ வை எனக்கு நெருக்கமாக அறிந்தேன். சொல்ல மறந்துவிட்டேனே, ‘குண்ட்டா கிண்டே’ தான் கதை நாயகன்.

நாகரீகத்தின் அழுக்கால் தீண்டப் படாமல், இயற்கையோடு இயந்து வாழ்கிறான், ஆப்பிரிக்க கிராம்மொன்றில். தன் தந்தையுடனான உரையாடலில் தன் பூர்விகத்தைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த கிராம மக்களிடம் ஒரு கதை உண்டு.  நம் ஊர் ஒத்தைக் கண்ணன் போல,  காடுகளுக்குச் செல்லும் போது வெள்ளை பூதங்களால் கடத்தப் படுவதாக.  ஒருநாள் விறகு பொறுக்கச் செல்லும்போது, அக்கதை இவனுக்கு நிஜமாகிப் போகின்றது.  கடத்தப்படும் பலரில் ஒருவனாக கப்பலில் ஏற்றப்படுகின்றான்.  அங்கு மாட்டுக் கொட்டிலினும் கீழான இடத்தில், பெருங்கூட்டத்தோடு அடைக்கப்படுகிறான்.  அவன் பட்ட காயத்திலிருந்து கசியும் ரத்தத்தின் வீச்சம், அவன் பேண்ட பீயின் வீச்சத்தோடு சேர்ந்து எழுகிறது.  அவ்வீச்சத்தை என்னால் நுகர முடிந்தது.  அவ்வீச்சம் என் உச்சந்தலை மயிரைச் சொண்டியது.

அவன் அமெரிக்காவின் அடிமைச் சந்தைகளில் விற்கப்படுகிறான்.  அடிமைகளுக்குண்டான அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறான்.  தப்பிக்க முயன்று, பிடிபட்டு, கால் நரம்பு அறுக்கப்படுகிறான்.  திருமணம் செய்கிறான்.  பிள்ளைகள் பெறுகிறான்.  கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கிறான்.  பல தலைமுறைகளாக அவன் சந்ததி வாழ்கிறது.  அவன் தன் பூர்வீகத்தைப் பற்றி, தான் இங்கே வந்ததைப் பற்றி, சில ஆப்பிரிக்க வார்த்தைகளையும் தன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறான்.  அப்படியே அவர்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள்.  அப்படி வந்தவர்களின் கடைசிக் கண்ணிதான் நூல் ஆசிரியர் ‘அலெக்ஸ் ஹேலி’.  வாளியின் தண்ணீரை கையில் அள்ளிக் கடத்தினால், பல கைகள் தாண்டி வரும் போது, கடைசியில் அளவு குறையத்தானே செய்யும். அப்படி அலெக்ஸ் ஹேலிக்கு வந்து சேர்ந்தது, சில பொருள் புரியா ஆப்பிரிக்க வார்த்தைகள் தான்.  அதைவைத்துக் கொண்டு அவர் தேடி கண்டெடுத்த வரலாறு தான் இப்புத்தகம்.  அதற்காக அவர் பயன்படுத்தியது, அமெரிக்கா அரசு பராமரித்து வரும் ஆவணக்காப்பகம் ஒன்றும். அடிமைகளாக வந்தவர்களைப் பற்றி தொகுத்து வைத்துள்ளது. பழையீடு போலும்.


இங்கே நான் பேச வந்தது, மேற்சொன்னவை அல்ல.  ‘உரையாடல்’.  வீட்டின் பெருசுகளின் பேச்சு பெரும்பாலும் சலிப்பையும் அயர்ச்சியையும் ஏற்படுத்துபவையாகத் தோன்றும்.  ஆனால், அதில் தான் நம் பூர்வீகம் பற்றிய எச்சங்களைப் பெற முடியும். இன்றைய நம் குடும்பத்தில் பெரியவர்களுடனான உரையாடல் வெறும் மேம்போக்கான ஒன்றாகவே உள்ளதென்பது என் எண்ணம்.  நம் முன்னோர்கள் எத்தனை இடப்பெயர்வைச் சந்தித்திருப்பார்கள்? எத்தனை மதங்களைப் பின்பற்றியிருப்பார்கள்? எத்தனை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்திருப்பார்கள்? உணவுப் பழக்கங்கள் என்னென்னவாக இருந்திருக்கும்?  ஜாதீய அடுக்குமுறைகளினால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் என்னென்ன?  ஜாதி அவர்களுக்கு முக்கியமாகப் பட்டிருக்குமா?  

இவைகளில் நமக்கு எத்தனை வினாக்களுக்கு விடை தெரியும்.  எனக்கு தெரியாது. ஆக, நான் மேற்கண்ட வினாக்களுக்கு விடை தேடலாமென்று இருக்கிறேன், இன்னும் சில வாரங்களில்.