வேயன்னா, அங்கம்மா, கூழானி, வையத்துரை, வில்லாயுதம், திருவேட்டை, சிகப்பி, துருவன், வஜ்ராயினி, ஹசார் தினார், முனி, சேது, வில்லியம்ஸ், விக்டர், விசக்குட்டை, பச்சமுத்து, ஆசாரி இப்படி பெருநாழி, கொம்பூதி, மற்றும் பெரும்பச்சேரி மக்களோடே கடந்த இரண்டு மூன்று நாட்கள் வாழ்ந்தேன்.
குற்றப்பரம்பரை. கிட்டத்தட்ட என் ஊரின் வழக்கில் நான் படிக்கும் முதல் நாவல். இதற்கு முன் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ வாசித்திருக்கிறேன். ஆனால் அது இயல்பாக இல்லாமல், கொஞ்சம் வைரமுத்துவின் ‘முத்திரைகள்’ உண்டு. அதுதான் நான் முதன்முதலாய் வாசித்த புதினமும் கூட. குற்றப்பரம்பரை – வாராந்திர பத்திரிக்கைக்கு எழுதப்பட்டதாலோ என்னவோ, அது ஒவ்வோரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாய் அமைந்தது.
வேயன்னா – இறுக்கமான மனம் கொண்ட, என் தந்தை மற்றும் தாத்தன் தலைமுறையின் முகம். குடிகாத்தலே அறமென துணிந்த மனங் கொண்டவர். ஆசிரியர் வேல. ராமமூர்த்தி நடித்த படம் பார்த்ததாலோ என்னவோ, வேயன்னாவாக அவர் முகமே என்னில் புதைந்து போனது. வேட்டையாடப்படும் இனக்குழுவின் தலைவனுக்கான கூர்மையும், மனவுறுதியுமான ஆள். வையத்துரையின் கால் பற்றியது, சேதுவைத் தவறவிட்டது முதல், களவுக்குச் செல்வதில்லை என சத்தியஞ்செய்யும் இடம் வரை என்று எல்லா இடத்திலும் தலைவனுக்கான அளவுகோலில் இம்மிபிசகாமல் நிற்கிறார். காவல்த்துறையிடமிருந்து கலகம் செய்து தொடர்ந்து தொழிலை நடத்தினால், குலமழியுமென ‘தொலைநோக்குப்’ பார்வையால் கண்டதால்தான் அவர் சத்தியஞ் செய்தாரேயன்றி, வெறும் பாசத்தால் மட்டுமே இதைச் செய்தவரில்லை. அப்படியாயின் சம்பங்கி ஆற்றை அடையும் முன், சேதுவை இவர் தொலைய விட்டிருக்க மாட்டர். உடன் சென்று மாண்டிருப்பார். கடைசிவரை அவர் ஒடுக்கப்படும் குழுவின், மனிதனின் முரட்டுத் தலைவனாகவே இருந்தார். எழுதிவைக்கும் கோட்பாடில்லை அவருக்கு, சொல் போதும்.
தான் கொம்பூதிக்காரனில்லையென, பசியால் செத்துக் கொண்டிருக்கும் கொம்பூதிக் கூட்டத்திற்கு தானியங்களைக் கொள்ளை கொண்டு வரும் வேயத்துரை முன், பெரிதாய் மறுக்காமல் இருக்கிறார். அந்த இயலாமையின் போது நொறுங்கி நிற்பதன்றி வேறு வழியில்லை வேயன்னாவுக்கு. தன் கூட்டம் வாழ வேண்டும் என்பதே நோக்கம். அதுவே தலைவனின் அறம்.
கூழானி – குலத்தின் ஆதிக் கிழவி. இன்பதுன்பங்களை கண்டுணரும், உச்சகட்ட விழிப்பில் வாழ்ந்த விலங்கின் மனம் கொண்டவள். ஒருவகையில் இவளும் ஒரு வேயன்னா.
வையத்துரை – வேயன்னாவின் கூட்டத்திற்கான தளபதி. ஏதோ ஒரு பந்தம் போல ஒட்டிக் கொண்டவன். நாடா நட்பு போல. இவன்பொருட்டு வேயன்னாவின் தீண்டாமை வெறுப்பு வந்திருக்கவேண்டும். துருவன் – கர்ணனாய் மாறுவதற்கு வையத்துரைதான் காரணம். இவனிடம் கொம்பூதி வைத்திருக்கும் நன்றிக்கடன் தான் பெரும்பச்சேரிக்காரனுக்காய் வேயன்னாவைத் தூண்டி, பெருநாழியைப் பகைக்கச் செய்தது. ஒருபோதும் வைத்துரை பெரிய நாயகனாக நிற்கவில்லை, இவனின்றி இங்கு எதுவும் நிகழாது என்பதை மட்டும் நமக்கு உணர்த்தப்படுகிறது.
விக்டர் – பேரன்பு கொண்ட மனிதன். இதைத்தவிர என்னிடம் இவரைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. அனைத்தையும் புரிந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பது என்பது, கூரான பிளேடுகளை வாயில் வைத்துக் கொண்டு தீவிர இலக்கிய உரையாடலில் இருப்பதைப் போன்றது.
பச்சமுத்து – பெருங்கருணையைப் போல பேராசையும், பெருந்துரோகமும் அதே மதிப்பைப் பெருபவையே. எதையும் விலையாகக் கோருபவை என, தூய விலங்காக வாழும் வியாபார ஞானி.
——————————————————————————————————————
ஜெயமோகன் கட்டுரைகளில் படித்த ஞாபகம், ‘இலக்கியம் நிகர் வாழ்க்கை’ என. அப்படியாயின் இது நிகர் வாழ்க்கையே. எங்கும் பிரச்சாரமில்லை. குலக்கும்மியில்லை. திருட்டு பற்றிய குற்றவுணர்ச்சியில்லை என்பதே, திருட்டுப் பொருளை கடவுளிடம் படைத்துண்ணும் போதே உணரமுடிகிறது. காடு தாண்டி வந்த வேட்டைச் சமூகம், கொள்ளையடிப்பது என்பது தன் குழு வாழுவதற்கான அறமென அதைக் கண்டெடுத்தது என எழுந்து நிற்கிறது. ‘அய்யோ.. அடுத்தவன் பொருள்’ என யாரும் நினைப்பதாகக் கூட இல்லை. அந்தப் பொருட்களின் மதிப்பும் எவ்வளவு பெரிது என அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘வாழவேண்டும்’ என்பது மட்டுமே விதிக்கப்பட்டதாய், ஒதுக்கப்பட்ட முரடர்களின் வழி வேறேதுமில்லை போலும்.
‘வெளியே போ’ எனச் சொல்லப்படும் போது, அது எப்படி இருக்கும் என்பது பெரும்பச்சேரிக்காரனாய் இருந்தால் மட்டுமில்லை, கொம்பூதிக்காரனாக இருந்தாலும் தெரியும் என்பது துருவனை மீட்டு வரும் நிகழ்வில் தெரியும். நாடோடியன்றி வேறு யாருக்கும் பெரியமனம் வாய்ப்பதில்லை. எனவே கொம்பூதிக்கு வாய்த்தது. மலங்கலந்த கிணறைக் கண்ட பின், நெளியும் பழியுணர்ச்சிதான் எத்தனை தூய்மையானது. ஆசாரியின் மனைவி காப்பாற்றப்படுவதை விட, இது தூய்மையானது. சந்தையில் வெட்டப்படும் பெருநாழியின் ஒவ்வொருவர் கையும், காலும் அங்கங்களும் எவ்வளவு பெருமைமிகு பிழையீடுகள். அதே அளவு கீழ்மையானது, தவளையின் தத்தலில் படரும் மலம். ஆனால், இரண்டும் பழியுணர்ச்சிதான்.
மனிதனின் அத்தனை மேன்மைகளும் கீழ்மைகளுமாக காட்சிகள் தோறும் விரிந்த வண்ணம் இருக்கின்றன. அதனாலேயே இது எனக்கு ஒரு நிகர் வாழ்க்கை. பழியுணர்ச்சிதான் எத்தனை புனிதமானது? அதுவன்றோ உரிமை கோருகின்றது. அதுவன்றோ உரிமை மறுக்கப்படுபவன் பக்கம் பேசச் சொல்கிறது. அதுவன்றோ மனிதம் பெருக்கெடுக்க வைக்கிறது? ஆ… பழியுணர்ச்சிதான் எத்தனை கீழானது? அதுவன்றோ அவமானத்தை எண்ணி, சக மனிதனை அழிக்கத் தூண்டுகிறது. அதுவன்றோ அகங்காரத்தினால் விளைகிறது. அன்பும் கருணையும் தான் எத்தனை அழகானது. வேயன்னா, தன் கூட்டத்தின் பால் கொண்ட அன்பு, சேதுவை விட்டு வரச் சம்மதித்தது. அதுவே சேதுவிடம் சத்தயமும் செய்ய வைத்தது. அதுவே வில்லியம்ஸையும் விக்டரையும் கொம்பூதி மக்களை நோக்கித் தள்ளியது. பீயால் வீடு முழுதும் வீச்சமெடுக்க வைத்தபின்னும், நேரில் வந்து தன் மனத்தாங்கலைச் சொல்லிச் செல்ல வைத்தது. அதுவே துருவனைத் தோளிற் சுமந்து வந்தது. அதுவே சேதுவை சத்தியம் வாங்கச் செய்தது. ஓ.. அன்பும் கருணையும் தான் எவ்வளவு அருவருப்பானது. வில்லியம்ஸ் மனிதனிடம் கொண்ட அன்புதான், சேதுவை அவன் தாய் தந்தையிடம் இருந்து பிரித்தது. வையத்துரையின் அன்பு சத்தியம் மீறி தானியம் திருட வைத்தது.
இப்படியாய் நிறைந்திருக்கும் மனித உணர்வுகளோடு, இருந்ததாலேயே இது நிகர் வாழ்க்கையானது. மொழியால் நான் உள்ளிழுக்கப்பட்டேன். தொய்யவிடாத உணர்வுகளின் கொந்தளிப்புகோடு இருந்ததால், அதில் எளிதாய் வாழப்பணிந்தேன். வாசிக்கப்பட வேண்டிய நாவலை, இவ்வளவு நாள் தள்ளி வாசித்தாலும், வாசித்துவிட்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி.
பி.கு : பெருநாழிக்காரர்களைச் சித்தரித்திருந்த விதம் எனக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. முடமான பெருநாழி. மனதில் முடமான பெருநாழியென என்னுள் பதிந்து போனது. ஆச்சரியத்தின் காரணம், ஆசிரியர் பெருநாழிக்காரர். எழுதிய காலத்தில், கொஞ்சநாளேனும் தலைமறைவாய் இருந்திருப்பார்
No comments:
Post a Comment