Pages

Wednesday, 14 September 2016

மலையில் தொலைதல்

கடந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று பெங்களூர் அலுவலகத்திலிருந்து, இரண்டு நாள் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.  அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அதைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டு இருந்தனர் எல்லோரும்.  மிகப் பெரிய கூட்டம்.  மொத்தம் அறுபது பேர் செல்வதாக இருந்தது.  கடைசியில் 28 பேர் மட்டுமே செல்வது உறுதியானது.  முன்னரே இது பற்றி என் அம்மாவிடம் சொல்லிவிட்டால் தினமும் ஒரே அறிவுரையாக இருக்கும்.  எனவே கடைசி நாள் தான் இதைப் பற்றிச் சொன்னேன்.  அலைபேசி வேலை செய்யாது எனவும் சொன்னேன்.  மலைப்பகுதி ஆதலால் அப்படித் தான் இருக்கும் என ஊகித்திருந்தேன்.  அப்படித்தான் ஆனது.  இடத்தைத் சொல்ல மறந்துவிட்டேனே, இடத்தின் பெயர் 'சக்லேஷ்பூர்'.

வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கிளம்பினோம். வருகைப் பதிவேடெல்லாம் தயார் செய்யப்பட்டது.  என் பெயர் தான் அதில் முதலில்.  எல்லோரும் வந்ததும், ஒருமுறை வருகைப் பதிவு எடுக்கப் பட்டது.  பின் பேருந்து கிளம்பியது.  வருகைப் பதிவுச் சீட்டு ஒவ்வொருவரிடமாக கொடுக்கப் பட்டது.  அதில் மது எப்படி வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதாவது தண்ணீர் கலந்து வேண்டுமா, இல்லை குளிர்பானம் கலந்து வேண்டுமா,  அதுவும் எந்த அளவில் கலக்கப்பட வேண்டும் என்று.  எல்லோரும் அளவு குறித்துக் கொடுத்ததும், பேருந்தின் கடைசி இருக்கை, இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டது.  அதுவரை நான் மிகக் கறாரான ஆளாகப் பார்த்த ஒருவர், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் அதைச் செய்வதைப் பார்த்தபோது, அவர் முற்றிலும் வேறு ஆளாக உருமாறியிருக்கிறார் என்று நம்பத் தலைப்பட்டேன்.  தமிழ்க்காரர்.  வேலையின் போது மிகக் கடுமையாக அவருக்குக் கீழ் உள்ளவர்களிடம் நடந்துகொள்வார்.  அதனால் தான் நான் அப்படி நினைத்திருந்தேன். எனக்கான முறையில் நான் வேண்டாம் என்று சொன்னபோது, அதிர்ச்சியைக் காட்டி, பின் 'இருடா, உன்ன அப்புறம் வச்சிக்குறேன்' என்று சொல்லி நகர்ந்தார்.  நான் ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பெங்களூரிலிருந்து சக்லேஷ்பூர் 250 கி.மீ. இருக்கும்.  பேருந்து மிக மிக மெதுவாகவே சென்றது.  அதற்கேற்றாற்போல் வண்டியின் உள்ளே சுதி ஏறத் தொடங்கியிருந்தது.

ரம், அதற்குத் தேவையான தண்ணிர், குளிர்பானப் புட்டிகள், மற்றும் திண்பண்டங்களாக பிஸ்கட், சாக்லெட், மிக்சர் என்று சகல ஏற்பாடுகளுடனும் கச்சேரி தொடங்கியது.  எனக்கு கொடுத்தார் என் மேலாளர், 'சும்மா குடிடா' என்று.  நான் புன்னகையுடன் வேண்டாம் என்றேன்.  அவரும் சிரித்தபடி சென்றுவிட்டார்.  பின்னர் பாடல்கள் போடப்பட்டன.  முதலில் ஹிந்திப் பாட்டு, பின்னர் கன்னடா, தமிழ் என்று மாறி மாறி ஒலிக்கவிடப் பட்டது.  எல்லோரையும் ஆட வைக்க முயன்று கொண்டிருந்தனர். என்னையும் ஆட வைக்க, என் மேலாளர் கேட்டார்.  அப்புறம் வருகிறேன் என்று சொல்லித் தாட்டிவிட்டேன். பின்னர் அனைவரும் ஆடுவதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எல்லோருக்குள்ளிருந்தும் யாரோ ஒருவர், பெரும் உற்சாகத்துடன் எழுந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆகச் சிறந்த அனுபவம் என்று கூறுவேன்.  அப்படிப் பார்க்கும் போது நமக்குள் இருக்கும் வேறொருவரும் எழுந்து வர முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.  எனக்கும் அப்படி வந்தார். பிடித்து அமுக்கிவிட்டேன் அமுக்கி.  ஐந்து பெண்களும் வந்திருந்தார்கள்.  அவர்களும் அதீத ஆச்சரியத்தை, தேவைக்கதிகமான அளவு தங்கள் கண்களையும் குரல்களையும் கொண்டு, வெளிப்படுத்திய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

பொழுது சரிந்து கொண்டிருந்ததே தெரியாதவாறு, பேருந்துக்கு உள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  இந்த அலுவலகத்தில் 80 விழுக்காடுக்கு மேல் 40-ஐ நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லது கடந்தவர்கள்.  அவர்கள் எல்லோரும் பதின்ம வயதுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு நான்கு பேர் நன்கு ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தான் எல்லோரையும் இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தார்கள்.  பெண்களில் இருவர் ஏற்கனவே ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அதில் ஒருத்தி தெலுங்கு பேசும் தமிழ்க்காரி.  அவளுக்கு சரியாக ஆட வரவில்லை என்றாலும், இரு கைகளையும் உயர்த்தி இடுப்பை பக்கவாட்டில் அசைத்து ஆடிக் கொண்டேயிருந்தாள்.  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதர பெண்களை இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தாள்.  அவர்களும் ஆடினார்கள்.  கடைசியாக, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்த தமிழ் மேலாளர் ஒருவரின் கவனம் என்மேல் விழுந்தது.  அவர்தான் மதுவை மகிழ்வுடன் எல்லோருக்கும் கலந்து கொடுக்கும் வேலையைச் செய்தது.  நான் சும்மா இருந்திருக்க வேண்டும். 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ....' பாடல் வந்தபோது என்னால் கட்டுப்படுத்த முடியாமல், விசில் அடிக்க ஆரமித்துவிட்டேன்.  அதைக் கண்ட அவர், என்னை நோக்கி ஒடி வந்தார்.  'வாடா வாடா.... தமிழ்ப்பையா' என்று கூவிக் கொண்டே.  நான் 'அப்புறம் வருகிறேன் மணி' என்று எவ்வளவு கதறியும் பொருட்படுத்த வில்லை.  இடுப்போடு சேர்த்துப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்விட்டார். முன்வாசலுக்கு அருகில் உள்ள இருக்கைகளின் இடையில் தான் ஆடிக் கொண்டிருந்தனர்.  என்னைக் கூட்டத்தின் நடுவில் தள்ளி விட்டு, ஆடச் சொல்லி கூச்சலிட்டனர்.  நான் கூச்சப்பட்டு மறுத்துவிட்டேன். பெண்களும் இருந்ததால் கூச்சம் சற்று அதிகம் இருந்தது, தவிர்க்க முடியாததாகிப் போனது. கடைசியில் என்னை விடுவித்தனர்.  வந்து அமர்ந்தபின் என் மேலாளர் என் அருகில் வந்துவிட்டார்.  'கம், வில் டான்ஸ்' என்றார்.  'வராது, மது ப்ளீஸ் விட்ருங்க' என்றேன்.  விடவில்லை.  கூடவே அந்த தமிழ்ப்பெண்ணும் வந்துவிட்டாள்.  'வா, கூச்சப் படாத. எங்களுக்கு கூட தெரியாது.  சும்மா குதி' என்றாள்.  நான் மாட்டேன் என்று தலையசைத்துச் சிரித்தேன்.  இருவரும் என் கைகளைப் பிடித்து இழுத்து என்னை நிற்க வைத்து விட்டனர்.  நான் ஆடாமல் சிரித்தபடி நின்று கொண்டேயிருந்தேன்.   இருவரும் என் அருகே தங்கள் உடலை அசைத்துக் கொண்டு, என்னையும் 'ஆடு ஆடு' என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது என் மேலாளர் என்னிடம், 'சும்மா, ஆடுடா.  இந்தமாரி நேரத்தில் தான் டச் பண்ண முடியும்' என்று என் வலது கையை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் உரசிவிட்டான்.  அவள் கண்டு கொள்ளவேயில்லை.  நான் விதிர்த்துப் போனேன்.  சட்டென்று மொத்த உற்சாகமும் வற்றிப் போனது போல் தோன்றியது.  காரணம் பயம்.  ஒருவாறு தப்பித்து, வந்து இருக்கையில் அமர்ந்து உறங்கிப் போனேன்.  

இரவு 12:30-க்கு சக்லேஷ்பூரில் நாங்கள்  இறங்க வேண்டிய இடத்துக்கு 1கி.மீக்கு முன் பேருந்து வந்து சேர்ந்தது.  மலைப்பகுதி ஆதலால், அதன் பிறகான பாதை எப்படி இருக்கும் என்று தெரியாமல், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டனர்.  அதன்பின் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது.  ஒரே ஒரு ஜீப்தான் இருந்தது.   எட்டு எட்டு பேராக ஏற்றிச் சென்று வந்து விட்டனர்.  அந்த விடுதியின் பெயர் 'ரொட்டிக் கல்லு'.  இருட்டில் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை.  எங்களுக்கு ஒரு 12 படுக்கை கொண்ட ஒரு நீண்ட அறை ஒதுக்கப் பட்டிருந்தது.  பிறருக்கு நால்வர் தங்கும் அறைகளாக ஒதுக்கப்பட்டிருந்தது.  நாங்கள் இருந்த அறையில் குளிரும் வெப்பமும் சமநிலையில் இருந்தது, நான் விரைவில் தூங்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  நன்கு தூங்கினேன்.


அடுத்தநாள் காலை 6:30 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்.  குளித்தேன்.  வெந்நீர் வருவது தெரியாமல், குளிர்நீரிலேயே குளித்து முடித்தபின் வெளியே செல்ல விரும்பினேன்.  கவி என்கிற ஆந்திர மாநிலப் பையனும் வந்தான்.  அவன்தான் என்னைப் போலவே எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்ற யோசனையோடேயே இருந்தான்.  இருவரும் அறையை விட்டு வெளியே வந்தோம். வெளியே வந்ததும் என் விழிகள் என்னையும் அறியாமலேயே விரிந்தன.  சுற்றிலும் மலைமுகடுகள் தங்கள் அழகை அப்பட்டமாகக் காண்பித்ததே காரணம்.  நாங்கள் தங்கியிருந்த அறையைச் சுற்றிலும், முழுப்பச்சை மலைமுகடுகள் விண்ணைத் துழாவிக் கொண்டிருந்தன அல்லது மேகங்கள் வந்து பசுமையின் குளிர்ச்சியைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தன.  மலை ஓடைகள் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.  நான் அவை எங்கோ தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று நினைத்திருந்தேன்.  சுற்றிப் பார்த்தபோது தான் தெரிந்தது, எங்கள் அறையை ஒட்டியே 3-4அடி அகலம் கொண்ட ஓடை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்தபோது கிளர்ச்சிக்கு உள்ளானேன். இதற்கெல்லாம் காரணம் மர்மமானது என்று நம்புகிறேன்.  இருந்த அரைகுறை தூக்கக் மயக்கத்தையும் அது விரட்டியடித்தது.  மற்ற தங்கும் கூடங்கள் எப்படி இருக்கின்றன என்று நோட்டம் விட்டேன். மிகச்சிறிய ஓட்டு வீடைப் போல் தோற்றம் அளித்தது.  உள்ளே ஒரு நல்ல நட்சத்திர விடுதி அளவுக்கான அமைப்புடன் இருந்தது.  தொடர்ச்சியான ஈரப்பதம் அவ்விடுதிகளின் வெளிப்பகுதியில் ஒரு பழமையை அப்பியிருந்தது.  மெதுவாக ஒரு நடை சென்றோம்.  ஒரு ஓடை ஒன்றை ஒட்டித்தான் அவர்கள் அந்த விடுதியைக் கட்டியிருந்தார்கள்.  அதைப் பார்க்கச் சென்றோம்.  பதினைந்தடி அகலம் கொண்ட ஓடை. துல்லியமாக கீழே இருக்கும் கற்களையும் மண்ணையும் காட்டும் நீர்.  கூச்சமின்றி அள்ளிப் பருகத் தோன்றும் சுத்தம்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அங்கேயே தங்கிவிடச் சொல்லும் பசுமைப் போர்வை.  மானசீகமாக எடுத்துப் போர்த்திக் கொண்டேன்.  கவி உற்சாக மிகுதியால் 'ஓ'வென்று கத்தினான். விடுதியில் மூன்று ஜெர்மன் செப்பர்டு நாய்களும் இரண்டு நாட்டு நாய்களும் வளர்த்து வந்தார்கள். அவன் கத்தியதும் ஒரே ஒரு நாட்டு நாயைத் தவிர்த்து அனைத்து நாய்களும் பாய்ந்து, நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தன.  வந்து எங்களின் நலனை முகர்ந்து நோட்டம் விட்டன.  பின் தண்ணிருக்குள் இருந்த கவியை கூர்ந்து நோக்கி, அவன் வெளியே வந்ததும் அவன் காலைச் சுற்றியே இரண்டு மூன்றுமுறை வந்து, அவன் பாதுகாப்பை உறுதி செய்தன.  பிறகு, எங்கள் கூடவே இருந்தன.

சற்று நேரம் கழித்து, பக்கத்து மலைமுகடுக்கு செல்லும் பாதை ஒன்று தென்பட்டது.  அதில் ஏறப் போனேன்.  
கவி 'வேண்டாம்' என்றான்.  'ஏதேனும் தவறான பாதையாக இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பு முக்கியம்'  என்று அவன் எண்ணினான்.  

நான், 'ஏதாவது பிரச்சினைன்னா திரும்பி இதே வழில ஓடி வந்திரலாம்டா' என்றேன்.

அவனுக்கு சம்மதமில்லை என்றாலும், துணைக்கு வந்தான்.  நாய்கள் எங்கள் கூடவே இருந்தன.  ஒரு 30-40 மீட்டர் நடந்திருப்போம்.  நாய்கள் எங்களின் காலுக்குக் குறுக்காய் நடந்து வந்து, எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர விட மறுத்தன.  அதை மீறிச் செல்ல முயன்ற போது, வேண்டாம் என்று கெஞ்சுவதைப் போன்று மெல்லிய ஒலியை எழுப்பியவாறு, அண்ணாந்து அண்ணாந்து எங்கள் முகத்தைப் பார்த்தன.  மேற்கொண்டு செல்ல முடியாது என்று புரிந்து, மீண்டும் இறங்கத் தொடங்கினோம்.  குஷியாக அவையும் எங்களோடு வந்தன.


விடுதி அறைகளை நெருங்கிய போது, எல்லோரும் எழுந்திருந்திருப்பது தெரிந்தது.  சிலருக்கு புன்னகையை பதிலாகச் செலுத்திவிட்டு, தேநீர் அருந்த உணவுக் கூடத்திற்குச் சென்றோம்.  தேநீரும் காபியும் தயாராக இருந்தன. தேநீரை சில்வர் டம்ளரில் எடுத்து அருந்தத் தொடங்கினேன்.  உணவுக் கூடம் நடுவில் முற்றம் வைத்த வீடு போல இருந்தது.  இதில் முற்றம் இருக்கும் இடத்தில் ஒரு தொட்டி, அதில் நான்கு ஆமைகள் விடப் பட்டிருந்தன.  மழை பெய்தால் நீர் வந்து அதில் சேரும்.  இங்குள்ள விடுதியில் ஓடைகளின் நீரைக் கொண்டு ஒரு குளம் அமைத்திருந்தார்கள்.  அதில் ஒருபுறம் ஓடையின் நீர் வந்து விழுந்தபடி இருக்கும்.  மறுபுறம் அதே அளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கும்.  அதேபோன்ற அமைப்பு தான் அந்த உணவுக் கூடத்தின் ஆமைத்தொட்டிக்கும் வைக்கப்பட்டிருந்தது.  காலை உணவு ஒன்பது மணியைப் போல ஏற்பாடு செய்யப்பட்டது.  தோசை, சட்னி, புலாவ், மற்றும் ஒரு இனிப்பு வகை. மிக நன்றாக இருந்தது.  

காலை உணவு முடிந்ததும் குழு விளையாட்டுப் போட்டி என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னச்சின்ன விளையாட்டுப் போட்டிகள், வட்டத்திற்குள் சிலர் நிற்க வெளியிலிருப்போர் பந்தை எறிவர் - பந்து மேலே பட்டவர் வெளியே செல்லவேண்டும் என்பன போன்றவை.  ஆரம்பிக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் முழு ஈடுபாட்டோடு விளையாடியது, விளையாடி முடித்தபின்தான் உணர்ந்தேன்.  அதன்பின் மதியஉணவுக்குச் சென்றோம்.  மதியஉணவுக்குப் 'மட் கேம்ஸ்' -  சேற்றில் விளையாடலாம் என்றார்கள்.


மதியஉணவாக கோழிக்கறி வைத்தனர்.  சோறு, குழம்பு, தொட்டுக்கொள்ள வைக்கப்பட்ட கோழிக்கறி, ரசம் மற்றும் பஜ்ஜி என எல்லாம் வீட்டில் தயார் செய்யப்படும் தரத்தில் இருந்தது.  ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.  சாப்பிட்ட போதையோடு மீண்டும் அந்த ஓடையில் சென்று என் கால்களை நனைத்து அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்.  ரஞ்சித் என்னுடன் வந்தான், இங்கும் ஒரு ரஞ்சித் அமைந்துவிட்டான்.  என் ரசனைக்காரன்.  நுனிநாக்கு ஆங்கிலம் , ஹை-பை தோற்றத்தோடு இருப்பான். ஆனால் மிக மிக நல்ல பையன்.  மதியம் இரண்டு மணிக்கு மேல், சேற்றில் கையுந்து பந்து விளையாடச் சென்றோம்.  

முழங்கால் அளவு பள்ளம் வெட்டப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.  கையுந்து பந்துக்கான வலை கட்டப்பட்டிருந்தது.  முழங்கால் அளவு செந்நீர்.  பார்ப்பதற்கு எங்கள் ஊரின் செங்குளம் போல் இருந்தது.   அதில் இறங்கச் சென்றேன்.  ஏற்கனவே என் அலுவலகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளே இருந்தனர்.  அவர்கள் என்னை இறங்கவிடவில்லை.  அந்த திடலில், உள்ளே இறங்குவதற்கு சறுக்கல் ஒன்று அமைத்திருந்தார்கள்.  அதன்வழியாகத் தான் நான் இறங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர்.  எனக்கு, இறங்கினால் முழுதாக நனைந்து விடுவேனே என்று தயங்கி நின்றிருந்தேன்.  பின் வேறுவழியின்றி சறுக்கலில் வந்து, உள்ளே இறங்கினேன் இல்லை விழுந்தேன்.  நெஞ்சுவரை நனைந்திருந்தேன்.  பின் என் தயக்கம் முற்றிலும் பறந்துவிட்டது.  ஒரு தேர்ந்த எருமை எப்படி நீரில் இருப்பதை விரும்புமோ, அப்படி நான் மாறிப் போனேன்.  பந்து இடப்புறம் போனால், வலப்புறம் பாய்ந்து சேற்றில் முங்கி முங்கி எழுந்து சிரித்தேன்.  மற்றோரில் பலர் குடித்திருந்தமையால் பல அழிச்சாட்டியங்கள் செய்து எல்லோருக்கும் 'கிச்சு கிச்சு' மூட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது முடிந்த பின் ஓடையில் விளையாடினோம்.  கால் உரசும் அளவுக்கு தண்ணீரின் மேல் செல்லுமாறு இருந்த ஊஞ்சல், பெரிய கடற்பஞ்சு மீது அமர்ந்து ஓடையின் நீரில் மிதத்தல்,  ஓடையின் மேல் கயிற்றுப் பாலத்தில் நடத்தல், 10 மீட்டர் உயரத்திலிருந்து கயிற்றில் சறுக்கி ஓடையில் விழல் என்று மாலை வரை போயிற்று. கூச்சலிட்டுக் கொண்டு, பெரும் கொண்டாட்டமாய் இது அமைந்தது.


மாலை 6:30 மணி முதல், 'பார்பிக் கியூவுக்கு வாங்க' என்று என் மேலாளர் அழைத்துக் கொண்டிருந்தான்.  குடிப்பதைத் தான் அப்படிச் சொல்கிறான் என்று, எனக்கு அங்கு போன பின்தான், ரஞ்சித் சொல்லித் தெரிந்து கொண்டேன்.  மதுக்கூடம் எல்லோரும் அமரும் வண்ணம் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தது.  அறையாக இல்லை.  வெளிப்புறத்தைப் பார்க்கும் வண்ணம் வெட்டவெளியில், தளம் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.  பியர் பாட்டில்கள், ரம் பாட்டில்கள், சோடா பாட்டில்கள் என்று மேஜை நிறைந்து இருந்தது.  கூடவே விடுதியின் ஆள் ஒருவர் உணவு பரிமாறுவதற்காக நின்றிருந்தார்.  உணவு என்றால் உணவு இல்லை, சூப், சுண்டல், பொரித்த கோழிக்கறி என்று பரிமாற.  தெலுங்குப் பெண் ஒருத்தி இறுக்கமான உடை அணிந்து உலாத்திக் கொண்டிருந்தாள்.  கையில்லாத, முழங்காலுக்கு ஒரு ஜான் மேலே இருக்குமாறு உள்ள உடை.  அதை உடுத்திக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தாள்.  மது பரிமாறப் பட்டது.  மெதுவாக சூழல் கொண்டாட்டத்தின் மையம் நோக்கி நகரத் தொடங்கியது.  கூடத்தின் நடுவில் விறகு போட்டு நெருப்பு மூட்டப்பட்டது.  அது நெருப்போடு சேர்ந்து புகைந்து கொண்டிருந்தது.  அவ்வப்போது அருகில் சென்று குளிர்காய்ந்து வந்தோம்.  எட்டு எட்டரை மணி அளவில், புகை சூழ் கூடத்தில், போதையின் நிழலில் கூட்டம் அசைவாடிக் கொண்டிருந்தது.  ஒரு விளையாட்டு திட்டமிடப்பட்டது.  ஐந்து ஜோடிகள் ஆடவேண்டும்.  ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் ஆட வேண்டும் என்று யோசனை சொல்லப் பட்டது.  என் மேலாளர் என்னையும் அதனுள் இழுத்துவிட முயன்றான்.  நான் மறுத்துவிட, ஐந்து ஜோடிகள் ஆடத் தயாரான நிலையில் நின்று கொண்டிருந்தனர்.   போதையில், பெண் போல ஆட முயன்ற எல்லா ஆண்களும் கூட்டத்தின் சிரிப்புக்கான உத்திரவாதமாகத் திகழ்ந்தனர்.  நான் போயிருந்தால் இன்னும் அதிகமாக சிரிப்புக்கு உதவியிருக்கக் கூடும்.  பத்து மணிக்கு, விடுதியின் ஆள் வந்து சாப்பிடச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான்.  யாரும் நகர்வதைப் போலத் தெரியவில்லை.  அவன் முகம் அழுவது போலவும், எரிச்சலில் இருப்பது போலவும் எனக்கு ஒருசேரத் தோன்றியது.   கடைசியில் பதினொரு மணியைப் போல எல்லோரும் சென்று உணவுக் கூடத்தில் அமர்ந்தோம்.  நான் கட்லா மீன், சோறு, ரசம் சாப்பிட்டேன்.  வழக்கம் போல மிகத் தரமாக இருந்தது.  


பின் அலுப்பில் சென்று தூங்கி, மறுநாள் காலை எழுந்தோம்.  பக்கத்தில் இருக்கும் மலைமுகடுக்கு நடை கூட்டிச் செல்ல வழிகாட்டி வந்தார்.  முந்தின நாள் நான் சென்ற அதே பாதை.  நாய்கள் என்னை நடக்கவிட மறுத்த பாதை.  இப்போதும் அதே நாய்கள் கூடவே வந்தன.  ஆனால்  வழிகாட்டி இருந்ததால் அவை எங்களைத் தடுக்கவில்லை.  மனிதனை விட விலங்குகள் நல்ல நுண்ணுர்வு கொண்டவை போலும்.  பத்து நிமிட நடைதான்.  பெயருக்காக மலையேற்றம் என்று, இது நடந்து முடிந்தது.  மேலே சென்று சில நிமிடங்கள் நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்து, புகைப்படம் எடுத்து, கீழே வந்து காலை உணவு முடித்து, பின் வீடு திரும்பினோம்.

இது எனக்கு மிகவும் பிடித்த பயணம்.  காரணம் என்னவென்று யோசனை செய்ததில், அலைபேசிதான் என்று தோன்றியது.  கிளம்பும் முன் நான் சொன்னதன் படி, அங்கிருந்த ஒன்றரை நாட்களும் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தேன்.  அது என்னை மிகவும் நிதானமானவனாவும் அவ்வப்போது நடக்கும் அந்தந்த கணத்தை வாழ்பவனாவும் காட்டியது என்று தோன்றுகிறது. யாருமற்ற வெளியில் உலவுவதைப் போலக் கற்பிதம் கூட செய்து கொண்டேன்.  அதனால் தானோ என்னவோ, இப்படியான பயணங்களை நினைத்து என் உள்மனம் ஏங்கிக் கற்பனை செய்யத் தொடங்கிவிடுகிறது.  நான் நானாக இருக்க இது உதவும் என்று நினைத்துக் கொள்கிறேன். குறைந்தபட்சம் இதுபோன்ற மன திருப்திக்காகவாவது மீண்டும் மீண்டும் இதுபோல மலைகளிலோ, குகைகளிலோ, கடற்கரைகளிலோ தொலைந்துபோக ஆசைப்படுகிறேன்.

Monday, 8 August 2016

முதன்முறையாக அலுமினியப் பறவைக்குள் புகுந்து மும்பை வரை

கடந்த வாரம், முழுக்க என்னைக் கிறுக்கனாக்கி விட்டார்கள்.  பெங்களூர் வந்ததிலிருந்தே எக்கச்சக்க குழப்பங்கள்.  மூன்று மாதங்களுக்கு முன், அலுவல் ரீதியாக வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது.  பின் சொதப்பியது.   எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை.  பின், இந்தமுறை மும்பை (எ) பாம்பே செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. பின் அதுவும் இல்லை என்றார்கள்.  மூன்று, நான்கு முறை ஆமாம், இல்லை எனப் பலவாறாகச் சொல்லிச் சொதப்பி, கடைசி நேரத்தில், அதாகப்பட்டது திங்கட்கிழமைப் பயணத்துக்கு முந்தின வியாழக்கிழமை விமானச்சீட்டை பதியச் சொன்னார்கள்.  என் அலுவலகத்தில் பதிந்துவிட்டார்கள்.  இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சனி ஞாயிறு நான் என் ஊருக்குத் திருவிழாவுக்குச் சென்று வர வேண்டும்.  இதற்குமுன் இரண்டு மாதங்களாக ஊருக்குச் செல்லவே இல்லை.  திங்கள் காலை 7.10 க்கு விமானம். எனவே நான் மாலை 4 மணிக்காவது என் ஊரிலிருந்து கிளம்ப வேண்டும்.  இல்லையேல், விமானத்தைப் பிடிக்க முடியாமல் போகலாம்.  திருவிழாவன்று நான் அங்கிருக்காமல் கிளம்பினால், வீட்டில் எல்லோருக்கும் கோபம் வராதா என்ன?  அதனால் இங்கிருந்து யாரிடமும் சொல்லவில்லை.  வீட்டிற்குப் போய் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.  அது நல்ல பலனைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  யாரும் கோபப்படவில்லை.  அதனால் தான் இந்த கம்பெனிக்காரன்களும். தன் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார்கள்.  மின்னஞ்சலில் காட்டிய காட்டத்தை, நேரில் பார்க்கும் போது, வெளிக்காட்ட முடிவதில்லை.

ஊரில் இரண்டு நாட்களும் நிதானமாகப் போயின. சனிக்கிழமை, நீண்ட நாட்களுப்பின் திண்டுக்கல் காய்கறிச் சந்தைக்குப் போனேன்.  அடுத்தநாள் பிரியாணிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தேன்.  அடுத்தநாள் விழாவுக்குச் சென்று வந்தபின், பெங்களூரு கிளம்பினேன். இடையில் சேலம் வந்து ரஞ்சித்தைப் பார்த்து, இருவரும் டீக்கடைக்குப் போய்விட்டு நான் பெங்களூருக்கும் அவன் சென்னைக்கும் கிளம்பினான்.  அதிகாலை 2.30க்கு மடிவாலாவில் இறங்கினேன்.  அங்கிருந்து அறைக்கு 1கிலோமீட்டர் இருக்கும்.  அந்தநேரத்தில் நடந்து செல்ல வேண்டாமென்றெண்ணி, ஆட்டோவைக் கேட்டால், அவன் 100 ரூபாய் கேட்டான்.

நான், 'ஆரஞ்சு பேக்கரிக்கு 100 ரூ. முடியாது. நா நடந்து போய்க்கிறேன். வேணாம் விடுங்க.'.

'சரி சரி.  90 குடுக்கோ சார். நைட் டைம், நீங்க வேற பாவம் சார்'.

'அண்ணே, 1 கி.மீ. கூட இல்ல. 60 ரூ. தரலாம். லேட் நைட்டுங்கறதுனால வேணா 70 தருகிறேன்' - (என் அலுவலகம் 3 கி.மீ.  அதுக்கே 60 தான் அதிகபட்சம் தரவோம்.)

'80 ரூபா குடுங்கோ.. சார்'

'இல்லண்ணே'

'அதெல்லாம் தரலாம் சார். வாங்க வாங்க'

'எழுபது ரூபாய் தான் தருவேன்'

ஏறிவிட்டேன். இறங்கியதும், 70 ரூ. கொடுத்தேன்.

'அப்போ 70 ரூ. தான் தருவீங்களா?'

'அதத் தான சொன்னேன்'

'அப்போ இந்தா, இன்னும் 20 ரூ தரேன். அதையும் வாங்கிட்டுப் போ'.  இப்படிக் கேட்டால் இன்னும் தொகை தருவேன் என்று நினைத்துக் கேட்டான்.

'வாங்க போங்க' என்பது 'வா போ' - வுக்கு மாறியிருந்தது.  அவன் கேட்ட அடுத்த விநாடி, நான்  'அதெல்லாம் வேணாம். போங்க.   ஆனா, நான் இப்போ அந்த 20 ரூபாயையும் வாங்கிட்டா,  என்ன பண்ணுவீங்க?'.   அவன் முகம் கடுகடுவென மாறியது.  அதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் வண்ணமாக, அவனைப் பார்த்து சிரித்து வைத்து விட்டு வந்து விட்டேன்.  ஆட்டோ மிக வேகமாகப் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.

வீட்டில் வந்து, தூங்கினால் கட்டாயம் காலை விமானத்தைப் பிடிக்கமாட்டேன்.  எனவே. தூங்காமலேயே 4.30 க்கு ஓலா வண்டி வரும் வரை, ஒருவாரத்திற்குத் தேவையான துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.  பின், வண்டியில் ஏறி, விமான நிலையம் போனேன். முதல்முறையாக பயணிக்கப் போகிறேன்.  என்ன என்ன தேவை என்று எண்ணிக் கொண்டே இருந்தேன்.  போர்டிங் பாஸ் பிரிண்ட் எடுக்கவில்லை.  அதனால் உள்ளே போவதில் எதும் பிரச்சினை இருக்குமோ என்று பயந்து கொண்டேயிருந்தேன்.  இதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டும் சென்னை விமான நிலையத்திற்குப் போயிருக்கிறேன்.  முதலில் வாசலில் ஒரு ராணுவ காவல் வீரர், பயணச் சீட்டையும் அடையாள அட்டையையும் சோதித்த பின் என்னை உட்புக அனுமதித்தார்.  பின் உள்ளே சென்றபின் தான, அங்கேயே போர்டிங் பாஸ் எடுத்துக் கோள்ள முடியும் என்று.  என்னுடன் வேலை செய்பவர் வந்தார், அவர் தான் இதையெல்லாம் காட்டினார்.  பின் என் துணிப்பையை லக்கேஜ் செக்சனில் தள்ளிவிட்டு,  செக்கியூரிட் பகுதிக்குப் போனேன்.  மெட்டல் டிடெக்டர் வைத்து என்னையும், என் மடிக்கணினிப் பையை ஸ்கேனரிலும் சோதித்த பின் விமானம் ஏறும் பகுதிக்குப் போனேன்.  முழு வெள்ளைப் பகுதி, சுத்தம் சுத்தம்.  முற்றிலும் வாசனையற்ற பகுதியாகப் பட்டது.  பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பட்ட வாசனை ஒன்று உள்ளதாக எனக்குத் தோன்றும்.  திருச்சி - நீர் வாசனை(பாசி வாடை அல்ல, நீருக்கென்று குளிர்ச்சியூட்டும் வாடை ஒன்று நான் மட்டும் அறிவேன்.), திண்டுக்கல், மதுரை -  வெயிலோடு சேர்ந்த, வெங்காய வாடை, இப்படி.  பெங்களூரின் விமான நிலையத்துக்கு அப்படி எதையும் அறியமுடியவில்லை.  என்னோடு அலுவலகத்திலிருந்து மூன்று பேர் வந்திருந்தனர்.  அவர்களை முன்னுக்கு விட்டு, அவர்கள் எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதையே நானும் செய்தபடி, அவர்களுக்குப் பின்னாலேயே சென்று கொண்டிருந்தேன்.  7.10 மணிக்கு விமானம். நேரத்திற்கு வந்தது.  விமானம் வாசலிலிருந்து தொலைவாதலால், பேருந்து ஒன்று எங்களை அழைத்துப் போனது.

விமானத்தின் முன்னால் போனதும் தான் கவனித்தேன், அது அவ்வளவு ஒன்றும் பளபளப்பாகவெல்லாம் இல்லை.  சில இடங்களில் வண்ணப் பூச்சு உரிந்து காணப்பட்டது, மெல்லிய சொட்டை சொட்டையாக.  இரண்டு வாயில்கள் இருந்தன,  முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும்.  இரண்டுக்கும் தற்காலிக படிக்கட்டுகள் வந்து நின்றிருந்தன.  அப்படிக்கட்டுக்கள் டிராக்டர் அல்லது ஜீப் மூலம் இழுத்துவரப் பட்டன.  விவசாயத்திற்கு அடுத்து இங்குதான் டிராக்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன போலும்.  என் இருக்கை 27A, ஆன்லைனில் இதை புக் பண்ணியிருந்தேன்.  விமானத்தின் இடப்புறம் கொஞ்சம் போல பின்னால் அமைந்திருந்தது.  அதனால், பின் படிக்கட்டில் ஏறினேன்.  விமானப் பணிப்பெண்கள் எப்படி இருப்பர் என்று பார்க்கும் ஆர்வம் வேறு.  ஏறும் முன் என் ஃபோர்டிங் பாஸை சோதித்த பின், அதன் கடைசி நுனியில் அலுவலகப் பயன்பாட்டிற்கான பகுதியை கிழித்து வைத்துக் கொண்டபின் என்னை ஏற அனுமதித்தனர்.  இது கிட்டத்தட்ட நாம் தியேட்டர் நுழையும் முன் நடப்பதைப் போல இருந்தது.  மேலேறினேன்.  விமானப் பணிப் பெண்கள் இருவர், 'வெல்கம் சார்' என இன்முகத்தோடு வரவேற்றனர்.  பதிலுக்கு நான் பல் தெரியாமல் மட்டும் சிரித்து, தலையை அசைத்து ஆமோதித்தேன்.  பல் தெரியாமல் சிரித்தால் தான் காசுள்ளவன் எனப் பொருள் படுமாறு என் மனம் பழக்கப்பட்டிருந்தது. அவர்களின் முகங்களை சொற்ப நொடிகள் தான் பார்த்திருப்பேன்.  ஆனாலும், துல்லியமாக என்னால் நினைவு கூற முடிவது எனக்கே ஆச்சரியம் தான்.  பின்னோக்கி இழுத்து வாரப்பட்ட தலை. அழுத்தமாகவும் திடமாகவும் இடப்பட்ட உதட்டுச் சாயம் - அதன் பின், எப்போது விமானப் பணிப்பெண் என்ற சொல்லைக் கேட்க நேர்ந்தாலும் இந்த சாயம் தான் எனக்கு முதலில் ஞாபகம் வந்து தொலைக்கிறது.  இறுக்கமான கறுப்பு நிற உடை.  தலையில் குல்லாவெல்லாம் இல்லை.  நேர்த்தியாகக் கொண்டையிட்டிருந்தார்கள்.  ஆடை கழுத்து முதல் முழங்கால் வரை இருந்தது.  இதைத் தவிர பெரிய வித்தியாசமாகவெல்லாம் அவர்கள் தெரியவில்லை.  ஏனெனில் பெங்களூரில் 80-90 விழுக்காடு பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  அப்படியும் யாரேனும் இல்லை என்றால் அவர்கள் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களாக இருப்பார்கள்.  அதனால், அவர்களின் முகப்பூச்சும் உதட்டுச் சாயமும் ஆச்சரியமளிக்கவில்லை.  கால்களில் டிரான்ஸ்பரன்ட் உறை அணிந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், என் நண்பன் ஒருவன் அப்படித்தான் சொல்லியிருந்தான்.  ஆனால், இல்லை, வெறும் காலுடன் தான் இருந்தனர்.  வட்ட முகக்காரி ஒருத்தி, நீண்ட முகத்துக் காரி ஒருத்தி.  வட்ட முகத்துக் காரியின் முழங்காலில், உதட்டுச் சாயத்தின் சிறு தீற்றல் இருந்தது, முகத்திலிருக்கும் திருநீறு அளவுக்கு.  அங்கு ஏன் பார்த்தேன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  பெண்களைப் பார்த்த சில நொடிகளுக்குப் பின் நான் தலையைக் கீழே போடும் பழக்கம் உள்ளவன் நான். அப்போது சிக்கியது அது. நுழைவாயிலைக் கடந்து, உட்புகும் போது, 'என்னடா பண்ற' என்று அட்சர சுத்தமாக அந்த வட்டமுக விமானப் பணிப்பெண் பக்கத்தில் இருந்த பணிப்பையனைக் கேட்டாள். அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. முகம்  தமிழ் முகம் இல்லை.  பேச்சு மட்டும்.  திரும்பிப் பார்க்க எண்ணினேன், ஆனால் பார்க்கவில்லை.

பின், என் இடத்தை கண்டுபிடுத்து சென்று அமர்ந்தேன்.  ஜன்னல் ஓர இருக்கை.  இருக்கை ஒன்றும் சொகுசாவெல்லாம் இல்லை.  தமிழ்நாட்டில் ஓடும், தாழ்தளப் பேருந்தில் இருப்பதைப் போன்ற இருக்கைகள். நான் அமர்ந்த பின், பெல்ட்டை ஒருமுறை அணிந்து பின் அவிழ்த்தும் பார்த்துக் கொண்டேன்.  கிளம்புவதற்கு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன், எப்படி பெல்ட் அணிய வேண்டும்? அவசர நேரத்தில் என்னவெல்லலாம் செய்ய வேண்டும்? என ஒரு பெண் ஒலி பெருக்கியில் சொல்ல, அதை இந்த வட்டமுகக்காரி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.  விமானம் கிளம்பத் தயாரானது.  நான் ஜன்னலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.  ஒரு ஓட்டத்திற்குப் பின், மழையில் நனைந்த பறவை தன் சிறகைக் குலுக்குவது போல், விமானம் தன் இறக்கையின் பின் பகுதியை லேசாக, மேலும் கீழும் அசைக்க, விமானம் மேலே ஆகாயத்தின் மீதேறியது.  அப்போது என் பிருஷ்டத்தை யாரோ பின்னிருந்து தள்ளுவது போல் இருந்தது.  இன்னும் சொல்ல வேண்டுமானால், ஊஞ்சலில் ஆடும் போது முன்னுச்சத்தைத் தொடும் போது இருப்பது போலவும், ராட்டினத்தில் சுற்றும் போது முன்னுச்சத்தைத் தொடுவதும் போலவும் இருந்தது.  ஜன்னலின் வழியே, வெளி உலகம் தூரமாய்ச் சென்று கொண்டிருந்தது.   கொஞ்சம் கொஞ்சமாக மேகக் கூட்டத்தினுள் புகவும், கீழே எதுவும் தெரியவில்லை.  ஆனால் குவியல் குவியலாய் தென்பட்ட குட்டிக் குட்டி மேகக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது சோப்பு நுரை வைத்து விளையாடும், குழந்தைக்கு ஒப்பான உவகை கொண்டேன்.  அதன் பின் எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.  விமானம் மும்பையில் தரை இறங்கிய பின் தான் விழித்தேன்.

மும்பை மேக மூட்டத்துடன் இருந்தது. என் லக்கேஜை, கன்வேயர் பெல்ட்டில் அணிவகுப்பு செய்து கொண்டிருந்த மூட்டைகளில் அடையாளம் கண்டு, எடுத்து வந்தபின் வெளியேறும் வழி வழியே வந்தோம்.  அங்கே 'IGate Welcomes IR' என்ற அட்டையுடன் ஓட்டுநர் இருந்தார்.  அவரை வண்டியை எடுத்து வரச் சொல்லிவிட்டு, துரிதமாக காலை உணவை முடிக்க, விமான நிலையத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்தோம்.  மினி இட்லி மற்றும் வடை வாங்கினோம்.  மினி இட்லி சாம்பாரில் மிதந்து கொண்டு வந்தது,  பணியாரத்தை விட சின்னதாக.  மும்பை வந்துவிட்டோம் இனி இனிப்பான சாம்பார் இருக்காது என்று நினைத்த என் நினைப்பில் மண்.  பெங்களூரில் போடுவதை விட அதிக இனிப்பு சேர்க்கப்பட்டிருந்தது.  உண்டு முடித்து, காரில் ஏறி அலுவலகம் சென்றோம்.  மாலை தான் விடுதிக்குப் போவதாகத் திட்டம்.

அலுவலகத்தில் பயங்கர உபசரிப்பு.  எங்கள் அலுவலகத்தில் கிளையண்ட் வந்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோமோ அதெல்லாம் எங்களுக்குச் செய்யப்பட்டது.  ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அலுவலக உதவியாளன் 'டீ வேண்டுமா?' என்று கேட்ட வண்ணம் இருப்பான்.  அவர்கள் செய்திருக்கும் வேலையில் எங்களுக்கு இருக்கும் சந்தேகம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் இந்த ஒரு வார பயணத்தின் நோக்கம்.  'அது அதுபாட்டுக்கு' ஓடிக்கொண்டிருந்தது.  எல்லா நாட்களும் மதிய உணவு அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  சூப்பு, ரொட்டி, காய்கறிக்கூட்டு, சோறு வகை ஒன்று(வெண்ணைச் சோறு, வெஜிட்டபுள் சோறு இப்படி), பருப்பு, கோழி குருமா, இன்னும் இருவகைக் கூட்டுகள் பின் இறுதியாக இனிப்பு வகை ஒன்று(குளோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமாலய்).  எல்லா மேசைகளிலும் கொக்ககோலா டின்(சாதாரண மற்றும் டயட்)கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

மாலைகள் தான் நான் வெளியே சுற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.  முதல்நாள், மாலை விடுதிக்கு வரும்போதே உணவை முடித்துக் கொண்டோம்.  வடபம் மற்றும் கோல்கபா உண்டோம்.  கோல்கபா என்கிற பண்டத்தைத் தான் பானிபூரி என்று அழைக்கிறோம்.  அறைக்கு வந்து பையை வைத்துவிட்டு, வெளியே செல்லலாம் என்று எண்ணி, வெளியே கிளம்பினோம் நானும் இன்னொருவரும்.  பக்கத்தில் ஒரு மால் இருந்தது.  அங்கு சென்று சுற்றிப் பார்த்து விட்டு, அடுத்த நாள் வந்து, என் அண்ணன் மகனுக்கு என்று சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து அறைக்கு வந்து தூங்கினேன்.  அதன் பிறகு எங்களுக்கு சுத்தமாக நேரமே கிடைக்கவேயில்லை.  இரவு 10.30 மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து சேரவேண்டிதாய்ப் போனது. அதனால் பிந்தய நாட்கள் ஒன்றில் கூட நாங்கள் வெளியே சுற்றவேயில்லை.

விடுதியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.  அட்டகாசமான அறை.  5000 நாள் ஒன்றுக்கு.  பல்துலக்க, குளிக்க தேவையான பொருட்கள், ஷூ பாலிஷ், மைக்ரோ வேவ் அவன், சின்ன ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, என மிக சொகுசான அறை.  முக்கியமாக என்னைக் கவர்ந்த விஷயம், 'குளியலறையில் இருந்த குளிக்கும் தொட்டி'.  சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தில் அவன் ஆவிபறக்கும் தண்ணீரில் அப்படி ஒரு தொட்டியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பான்.  அது என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது.  குடிக்க முடியாவிட்டாலும், அதுபோல தொட்டியில் படுத்துக் கொண்டு குளித்தேன்.  மும்பையில் குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  அதனால் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க சுகமாகவே இருந்தது.  குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அதில் தினமும் காலை படுத்துக் கிடந்தேன்.

காலை உணவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.  நான் தங்கியிருந்த விடுதியில் காலை உணவு மட்டும் இலவசம்.  நான்கு நாட்கள் உண்டேன்.  ஒருநாள் கூட உணவின் சுவையில் சிறிது கூட மாற்றம் காணமுடியவில்லை.  இட்லி(காஞ்சிவரம் இட்லி என்று கூட ஒன்று ஒருநாள் வைக்கப்பட்டது), சாம்பார் (இது மட்டும் இனிப்பு கலக்காமல் கிடைக்கவேயில்லை.), போண்டா, உப்புமா, தண்ணிர்ப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இருவகை மில்க் ஷேக், வெஜ் நூடுல்ஸ், பேக்கன் (இதை மட்டும் நான் ஒருநாள் கூட தவற விடவேயில்லை.),  சிக்கன் உருண்டை வகை ஒன்று, பன்றிக்கறி வகை ஒன்று, இலையைப் போல தடிமன் அளவில் சிக்கன் வகைகள் இரண்டு, உலர் திராட்சை, குளிர்விக்கப் பட்ட தயிர்,  பழ வகைகள், பிரட் வகைகள் இரண்டு, மற்றும் இன்னும் சிலற்றை விட்டுவிட்டேன்.  இவை எல்லாவற்றையும் நிச்சயம் ஒரே நாளில் உண்ணவியலாது.  ஆக, நாள் ஒன்றுக்கு சில வகைகள் எனப் பிரித்து , எல்லாவற்றையும் சுவை பார்த்துவிட்டேன். அப்புறம் ஒருநாள், இரவுணவுக்காக 'village' என்றொரு உணவுவிடுதிக்குப் சென்றோம்.  அது ஒரு மாலில் இருந்தது.  அதன் மேற்கூரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.  கிறிஸ்மஸ் தாத்தாவின் குல்லாவின் உட்புறம் போல இருந்தது.  நாங்கள் தேடிய உணவு விடுதி நான்காவது மாடியில் இருந்தது.   உள்ளே நுழையப் போனபோதுதான் கவனித்தேன், அதன் தோற்றம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது.  ஒரு வட இந்திய கிராமம் போல உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.  சிவப்பும் ஆரஞ்சும் ஆதிக்கம் செலுத்தும் வண்ணப் பூச்சுக்கள் மிகுந்திருந்தன.  சேட்டுக் கடை கல்லாப் பெட்டி போல இருந்த முகப்பில் உணவுக்கான கூப்பன் வாங்குமாறு அறிவுறுத்தப் பட்டோம்.  தலை ஒன்றுக்கு 400 ரூபாய்.  நால்வரும் வாங்கிக் கொண்டு உட்புகுந்தோம்.  தாபா செட்டப் போல இருந்தன உணவு மேஜைகள்.   மூங்கில் நாற்காலிகள் ஒருபுறமும் உருண்டைத் தலையணையுடன் கூடிய படுக்கை ஒருபுறமுமாக மேஜையைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது.  உணவு வகைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.  தாறுமாறு.  ரொட்டியை ஆட்டுக்கறி மசாலாவை ஊற்றிச் சாப்பிட்டேன்.  அதிதூய சுவையுடன் இருந்தது.  ரஞ்சித்தின் அம்மா செய்திருப்பதைப் போன்ற கெட்டித் தன்மையும் கொஞ்சம் போல் காரமும் அதிகம் சேர்க்கப்பட்ட உன்னதமான கெட்டியான குழம்பு.  இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.  நன்கு சாப்பிட்டேன்.  இன்னொருநாள் வேறொரு உணவு விடுதிக்குச் சென்றோம்.  நான்கடி நீளமுள்ள தோசையும் ரொட்டிகளும் ஆர்டர் செய்தோம்.  கல்லில் போட்டுச் சுட்ட ரொட்டி அல்ல, நெருப்பில் போட்டுச் சுட்ட ரொட்டி.  கடிப்பதற்கு கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டப் பட்டேன்.  தோசைக்கான சாம்பார் மறுபடியும் இனிப்போடு வந்து சேர்ந்தது.

மும்பையின் நிலத்தையும் மனிதர்களையும் பற்றிச் சொல்ல வேண்டும். சாலைகள் அழுக்கான சாலைகளாகவே இருந்தன.  நான் இருந்தது, 'வாசி' என்ற இடம் இது மும்பையின் புறநகர்ப் பகுதி - நவி மும்பையைச் சேர்ந்தது.  நகர்புற மும்பைக்குச் செல்ல நேரம் கிடைக்காததால் அங்கெல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, அழுக்கடைந்த, பசுமை நிரம்பிய இடங்கள் தான்.  வட இந்திய மக்கள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு ஆச்சரியம் தான்.  70 விழுக்காடு கருப்பு அல்லது அதற்கு நெருக்கமாக இருந்தார்கள்.  அலுவலகத்தில் எல்லா வட இந்தியர்களையும் போல, எனக்கு இந்தி தெரியாது என்பதை அளவுக்கு மீறிய ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.  குறைந்த பட்சம் இரண்டு முறையாவது கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.  அதைப் பார்த்தால் எனக்கு அவர்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்க அப்படிச் சொல்கிறார்களோ என்று கூட நினைக்கிறேன்.  சென்னையைப் போலவே காலை நேரத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  புறநகர் ரயில் நிலையத்திலும் காலை 8 மணிக்கும் 200-250 க்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டு எடுக்க  நீண்ட வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்தனர்.  இங்கேயே இப்படி என்றால் உள்ளே எப்படி இருக்கக் கூடும் என்று கணக்கிட்டுக் கொண்டேன்.

இப்பயணம் பெரிதாக வெளியிடங்களைச் சுற்றப் பயன்படவில்லை.  கிட்டத்தட்ட சாப்பாட்டுப் பயணம் போலவே போனது.  கடைசிநாள், மீண்டும் விமானம் ஏறும் போது, சிறிய குறுகுறுப்பு இருந்தது.  ஏனெனில் வானிலை சரியில்லை என 30 நிமிடம் தாமதமாக கிளம்பியது.  இடையில் 6-7 இடங்களில் விமானி பெல்ட்டை அணிந்து கொள்ள அறிவுறுத்தினார்.  அதன்பின் விமானத்தின் உள்ளே சிறுசிறு குலுக்கல்கள் இருந்தன.  அப்போதெல்லாம் சின்னதாக பயம் எட்டப் பார்த்தது.  ஒருவழியாக வெள்ளி இரவு 11.40ஐப் போல வீடு வந்து சேர்ந்தேன்.  அடுத்தமுறை வட இந்தியா போனால்,  நிறைய சுற்றிப் பார்க்க வேண்டும்.

Wednesday, 3 August 2016

சென்னை - முன்பு புதிய இடம்

பெங்களூருக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.  என் அலுவலகத்தில் திடுதிப்பென முடிவு எடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்கு முன், 'மூன்று வாரம் மட்டும் இருந்துவிட்டு வா' என்ற உத்திரவாதத்தின் படி பெங்களூரில் உள்ள கிளையண்ட் அலுவலகத்திற்கு வந்தேன்.  முற்றிலும் புதிய அனுபவங்களின் இடமாக இந்த இடம் மாறிப்போனது.  இதுவரை தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை.  சென்றிருந்தாலும், கேரளா தான் சென்றிருக்கிறேன், நண்பர்களுடன்.  அது ஒரு பெரும் மகிழ்ச்சியான அனுபவம்.  அனுமோன் வீட்டுற்குச் சென்றிருந்தோம்.  அவன் அம்மா அவ்வளவு அன்போடும் பாசத்தோடும் எல்லோரையும் கவனித்தார்.  அறுவருக்கும் சமைத்து, கேரள விருந்தோம்பலில் எங்களை மிரட்டி வைத்தார்.  அப்படியான சொகுசான இடங்களுக்குத்தான் சென்று வந்திருக்கிறேன்.  சென்னை வந்ததும் கூட அப்படித்தான். அற்புதராஐ் வீடு மட்டும் அங்கு இல்லை என்றால், நான் ஏதாவது ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் என்ற பட்டத்துடன், பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்திருப்பேன்.




வெளியிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் என் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்கிறேன்.   
பெங்களூர் வந்த நாளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.  புதிய இடம் பாரக்கப் போகும் உற்சாகம் சிறிதும் இன்றி, பயத்துடன் தான் வந்தேன்.  கன்னடம் தெரியாது.  ஹிந்தி -  சுத்தம்.  நம் தின இதழ்களும், ஊடகங்களும் காட்டிய கர்நாடகாவால் உண்டான காழ்ப்புண்ரச்சியும் பயமும் பெரும் பீதியைத்தான் கிளப்பியிருந்தன எனக்கு.  வந்தபின்பு தான் ஒன்று தெரிந்தது, இங்கு இருப்பவர்களில், அதாவது பெங்களூரில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர்.  அதிலும் நான் இப்போது இருக்கும் மடிவாலாவையெல்லாம் கேட்கவே தேவையில்லை.  கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத தமிழ்ப்பிரதேசம்.  இந்தமாதிரி நம் ஊரில் ஆட்கள் இருக்க விடுவார்களா என்றெல்லாம் தெரியவேயில்லை.  ஆனாலும் இது தெரிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, கிட்டத்தட்ட முதல் இரண்டு மூன்று வாரங்கள்.  

கடையில் ஏதேனும் பொருள்களைக் கேட்க வேண்டும் என்றால் கூட திக்கித் திக்கிக் கேட்டுக் கொண்டு(கனடாவில் பேச முயன்று) திரிந்தேன்.  ஒருமுறை என் அண்ணி வெள்ளைப் பூண்டு வேண்டும் என்று கேட்க, அதைக் கடைக்காரனிடம் எப்படிக் கேட்பது என்று கடைக்காரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.  'யாராவது வெள்ளைப் பூண்டு வாங்க வர மாட்டார்களா? அப்படி வந்தால் தெரிந்து கொண்டு கேட்டு விடலாமே' என்று வருவோர் எல்லோரின் வாயையும் என்ன வாங்குகிறார்ளகள் என்றும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது தான் ஒரு அழகுத் தமிழ்க் கருப்பி வந்தாள்.  கருப்பின் பளபளப்புக்கென்று ஒரு போதை உண்டு, ஆப்பிரிக்கக் கருப்பைக் காட்டிலும் தமிழ், மலையாளப் பெண்களுக்கென்று தனிப்பட்ட பளபளப்பு உண்டு.    போகட்டும். வந்து அவள் என்ன வாங்கினாள் என்றெல்லாம் நான் கவனிக்கவில்லை. கவனிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை தானே?.  ஏதோ கேட்டாள், வாங்கினாள், சென்றாள்.  அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நான் வைத்த கண் வாங்காமல் பெண்களைப் பார்க்க, என் பிரக்ஞை தவறினால் தான் உண்டு.   பெண்களைப் பார்க்கும் எந்நேரமும் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருக்கும், பார்வை தப்பிவிடுமோ என்று.  அவள் சென்றபின் தான், எனக்கு உரைத்தது, அவள் தமிழில் பேசித் தான் ஏதோ வாங்கிச் சென்றாள்.  அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்வத்தில் அவள் என்ன பேசினாள் என்பதைக் கவனிக்கத் தவறியிருந்தேன்.  அதுவரை என்னைக் கண்டுகொள்ளமல் இருந்த கடைக்காரன், என்னைப் பார்த்து 'என்னப்பா வேணும்?' என்றான்.    நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை, அவன் கவனித்திருக்க வேண்டும்.   பாவிப்பயல், இத்தனை நாட்களும் என்னை உளறவிட்டு வேடிக்கை பார்த்திருந்திருக்கிறான்.  பின் வெள்ளைப் பூண்டை வெள்ளைப் பூண்டு என்றே தமிழில் அவனிடம் கேட்டுப் பெற்றேன்.  அதன்பின் நான் எங்கு சென்றாலும், முதலில் தமிழில் பேசுவேன்.  புரியவில்லை என்றால் மட்டுமே உடைந்த கன்னடத்தில் பேச முயற்சிப்பேன்.  இப்படியாக பெங்களூருக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன்.




சென்னை - புராஜெக்ட் என்ற உன்னதமான ஒன்றுக்காக, சென்னை வந்தோம்.  நானும் வினோத்தும் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை தொடரூர்தியைப் பிடித்து வந்தோம்.  இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே தொடரூர்தியில் சென்ற அனுபவம் உண்டு, அதுவும் திருச்சி-திண்டுக்கல்.   ஆகவே, இது புதிய அனுபவமாக இருக்கும் என்று போன எனக்கு, அது ஒரு தாறுமாறான அனுபவமாகிப்போனது.  உட்கார இடம் இல்லை. தரையில் கூட.  'மூங்கில் காடுகளே...' பாடலில் வரும் விக்ரமைப் போல வந்தோம்.   வந்ததும் அற்புதராஜ் எங்களை வந்து கூட்டிச் சென்றான்.  அவன் வீட்டில் நல்ல சோறோடு, நான்கு நாட்கள் ஊர் சுற்றினோம்.   தினமும் 50 ரூபாய் சீட்டோடு நாட்கள் கழிந்தன். பின்,  2011 டிசம்பர் மாத இறுதி, 27 என்று நினைக்கிறேன். முதன் முதலில் திண்டுக்கல் மற்றும் திருச்சியை விட்டு நான் தங்கப்போகும் இடம்.  ரூபன் - அண்ணன், ஆதம்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து வந்தான்.  நான் அவனுடன் சென்று தங்கினேன்.  வீட்டை விட்டு இருப்பது பிரச்சினையில்லை.  பள்ளி, கல்லூரி விடுதிகள் - என்னைப் பழக்கிவிட்டன.  இன்னும் சொல்லப் போனால் என்னால் இப்போதெல்லாம் சேர்ந்தாற்போல் வீட்டில் 2-3 நாட்கள் இருக்க முடியவில்லை.  நிலைகொள்ள மாட்டேன் என்கிறது.  சென்னையின் அறைதான் எனக்கான் இடமாகக் கூடத் தோன்றிவிட்டது. சென்னை வரும்போது தயக்கம் மிகுதியான ஒரு ஆளாக இருந்தேன்.  ஒன்றிரண்டு முறைகள் தவிர்த்து, மீதி நாட்களிலும் சென்னை வந்த தொடக்க நாட்ளகளில், இடம் தெரியாமல் அலையும் போதெல்லாம், யாரிடமும் பாதை கேட்காமல், நானே தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.  2-3 மணி நேரமாவது நடந்து திரிந்து, கால்கள் சோர்ந்து, திருப்பி செல்ல எத்தனித்து, 'சும்மா, கேட்டுப் பார்ப்போமே?' என்று கேட்டால், கிட்டத் தட்ட முதல் நபரே பாதையைச் சரியாகக் காட்டி விடுவார்.   ஆனாலும், 'நல்ல மாட்டுக்குத் தானே ஒரு சூடு' நமக்கு இல்லையல்லவா? அடுத்தமுறையும் நான் கேட்டதில்லை.  கிட்டத்தட்ட 10 முறையாவது இதே தவறைச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக, தயக்கம் குறைந்தது.  சுத்தமாகப் போனது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்.  வெகுவாகக் குறைந்திருக்கிறது. சென்னை தான் காரணம்.  அதன் ஜனசந்தடி வெகு இலகுவாக்குகிறது.  எது எப்படியோ ஆறுமாதங்களுக்கு முன் பெங்களூர் வரும் போது, எனக்கு உண்டான மனநிலையை எண்ணிப் பார்த்தால், ஏதேதோ தோன்றுகிறது.  கிட்டத்தட்ட பிரேக்கப் ஆன மனநிலைக்கு ஒத்தது.

இன்றும் என்னால் சென்னையில் தூங்குவதைப் போல் பிற இடங்களில் தூங்க முடிவதில்லை.  திருச்சி எனக்கு மிகப் பிடித்த, மனதுக்கு நெருக்கமான ஊர்.  அங்கு கூட மீண்டும் செல்ல வேண்டும் என்று பெரிதாகத் தோன்றவில்லை.  ஆனால், சென்னையின் வெப்பம், கசகசப்பு, வீச்சமும் என்னை இழுத்த வண்ணம் உள்ளன.  இன்னொரு முக்கியமான காரணம், அங்குதான் நானே சம்பாரித்த ஆட்கள் உள்ளனர்.  வீடு திருப்புதல் எப்போது? 

Monday, 14 December 2015

சம்பவங்கள் சில

புதிதாக என் அலுவலகத்தில் ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். ராஜஸ்தான்காரன்.   மனித வளத்துறையைச் சார்ந்த பெண் ஒருத்தி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவள்.  எனவே அவளுக்கு பெறுகின்ற வேலை தொடர்பான ஆட்கள் எல்லாம் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  அவனுடன் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டேன்.  அவனும் அவன் நண்பனும் ஒன்றாகத் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அவன் தமிழ்க்காரன்.  பேசிக்கொண்டிருக்கும் போது , ‘நம் அலுவலகத்தில் நிறையப் பேர் ஹிந்திக்காரர்கள்தான் ஆனாலும் ஏன் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை’ என்றான் ஆங்கிலத்தில்.  நான் சீண்டப்பட்டதாய் உணர்ந்தேன்.  சரட்டென எழுந்த ஒரு நியாமான வன்மம், அவனை ஏதாவது கேட்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது.  

‘நீ எந்த ஊர்’, என்றேன். 

‘ராஜஸ்தான்’, என்றான்.

‘உன் மொழி எது?’

‘ஹிந்தி’ என்றான் பிரகாசமாக.

‘உண்மையிலேயே ஹிந்திதானா? பிராந்திய மொழி இல்லையா? இருக்கவேண்டுமே?’.

‘ஓ… அதுவா…’, என்று ஒரு இழுவை இழுத்தபின், ‘ராஜஸ்தானி’ என்றான்.

‘பிறகு ஏன் ஹிந்தி என்றாய்?’

‘இரண்டு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.  இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.’

‘பிறகு ஏன் ராஜஸ்தானி என்று ஒரு தனி மொழி வைத்திருக்கிறீர்கள்?’

‘இல்ல… பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றும் இல்லை.’, என்றான் பீதியுடன்.  மலங்க மலங்க விழித்த அவன் கண்கள் என் வெற்றியை உறுதி செய்தது.  

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.  ஏன்னா, கிட்டத்தட்ட தமிழும் மலையாளமும் ஒன்றுதான்.  ஆனால் எந்த மலையாளியும் உன் மொழி என்ன என்று கேட்டால் தமிழ் என்று சொல்ல மாட்டான். மலையாளம் என்று தான் சொல்வான். அதுதான் சரியும் உண்மையும்.’.

இதற்கு அவன் எந்த மறுப்பும் சொல்லமாட்டான் என, அவன் விழிகள் எனக்கு முன்னமே சமிக்ஞை காட்டிவிட்டன.  மிக வேகமாக ஏற்றுக் கொண்டதாய் தலையை அசைத்தான்.  எனக்கு ஒரு மாபெரும் திருப்தி.  அதன்பின் அவனுடன் ஒரே காரில் ஒரு மீட்டிங்கிற்குச் செல்ல வேண்டியிருந்தது.  அப்போது என்னோடு பேசும் போது அவன் மிக மிக கவனமாய் பேசினான்.  அதை நான் உணர்ந்தாலும், சகஜமாகவே பேசி வந்தேன்.

எக்காரணத்துக்காகவும் எவனொருவனும் தன் தாய்மொழியை மாற்றிச் சொல்லலாகாது.  ஆனாலும், தன் தாய்மொழியைப் பற்றி உயர்வான எண்ணம் இல்லாதவனுக்கு, வேறு எந்த மொழியின் மீதும் மதிப்போ, அதன் பெருமிதங்களை அறிவது குறித்தோ எந்த பிரக்ஞையும் இருக்க வாய்ப்பு வெகு குறைவு.  ஆனால், என்னை தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுத்துத் திமிறும் ஒருவனாகவே அவன் என்னைப் பார்த்தான்.  அவனைப் போல் என் தாய்மொழி என்ன என்று கேட்டால் ஹிந்தி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தானா? அல்லது நான், அப்படி அவன் நினைத்ததாக எண்ணிக் கொண்டேனா? இரண்டிலும் உண்மை இருக்கிறது.

இன்னொரு சம்பவம்.  மதுரைக்கு என் அப்பாயியின் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தேன்.  சென்னையில் மழை வலுக்கத் தொடங்கிய நாளன்று.  டிசம்பர் ஒன்று.  சென்னை - மதுரை அரசுப் பேருந்து.  மழையாகையால் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை.  முன்னிருக்கைகளில் சில பதுவைப் பெண்களும், சில அங்கிள்களும்.  வழக்கமாக நான் பின்னிருக்கைகளில் தான் அமர்வேன்.  எந்த இருக்கையில் அமரலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன்.  கடைசியில் சென்று பார்த்தால், சற்று முன்னர் போடப்பட்டிருந்த வாந்தியில் செம்மண்ணை அள்ளிப் போட்டுக் கழுவி விட்டதன் வடு இருந்தது.  எனவே, எனக்கு அங்கே அமர ஒப்பவில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளி வந்தமர்ந்தேன்.  எனக்கு முன் 5-6 வடஇந்திய இளைஞர்கள்.  பொருள் வேண்டி இடம்பெயரும் சமுத்திரம் ஒன்றின் சில துளிகள் அவர்கள்.  அப்போது எனக்கு திடீரென்று அவர்கள் மேல் பேரிரக்கம் வந்தது.  எனக்கு இது பொன்ற பயணப் பொழுதகள் இளகிய மனம் படைத்தவனாகிப் போகிறேன்.  பேச மறுத்துப் போய், என் மனத்தின் ஈரப் பகுதிகளில் மோப்பம் பிடித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறேன்.  அப்படியான பொழுதுகளை பெரும் ஆசையுடன் எதிர் பார்க்கிறேன்.  ஆனால், அதன்பின் என்னைப் பீடிக்கப் போகும் வெறுமை குறித்தும் பயம் கொள்கிறேன்.  அதனால் தானோ என்னவோ, இதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ஒருசேர ஏக்கத்தோடும் வெறுப்போடும் எதிர்பார்க்கிறேன்.

புத்தகம் ஒன்றை எடுத்துப் போயிருந்தேன்.  ஜெயமோகனின் ‘நினைவின் நதியில் - சுந்தர ராமசாமி’.  படித்துக் கொண்டிருந்தேன்.  வடஇந்தியர்கள் தான் எப்போதும் பான்பராக் மென்று கொண்டு இருப்பார்களே.  என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவன், மழை பெய்து கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தான்.  எனக்கு நேரம் ஆக ஆக கோபம் ஏறிக் கொண்டே இருந்தது.  வழக்கமாக பயணங்களில் நான் தான் பக்கத்திலிருப்போரை வெறுப்பேற்றுவேன், தூங்கி விழுந்து.  இது புதிதாக இருந்தது.   ஒருமுறை அவன் ஜன்னலைத் திறந்து எச்சிலைத் துப்பிய போது, ஒரு துளி திரவம் என் கைகளில் வந்து பட்டது.  அது எச்சலா, தண்ணீரா என்றெல்லாம் எனக்கு அக்கறை இல்லை.    எழுந்து அவன் முதுகில் பலத்த அறை ஒன்றை வைத்தேன்.  பெரும் சத்தம்.  என்னை விட பெரிய உடலும் வலுவும் கொண்டிருந்த அவன், என்னை நோக்கி அதிர்ச்சயும் கருணையை எதிர்பார்க்கும் கண்களையும் என்னிடம் காட்டினான். ‘கியா பய்யா?’ என்றான், மெல்லிய குரலில்.  ‘எச்சி துப்பறதா இருந்தா வெளிய போய் துப்புடா’ என்று கத்தினேன்.  அக்கத்தல் வெறுப்பில் உச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன்.  திடீரென்று ஒரு பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.  அவன் திருப்பி அடித்தால்?  அதை வெளிக்காட்டாமல் இருக்க, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னேன்.  அவனுக்கு முதலில் புரியவில்லை.  பின் அவர்களோடு இருந்த தமிழ்க்காரன் ஒருவன், அவனை சைகையால் விளக்க, அவன் லேசாக நகர்ந்து அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

சில கணங்களுக்குப் பின் யோசித்துப் பார்த்தேன்.  அவன் ஏன் அவன் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு வந்தான்?  அவன் ஊரில் மிக மதிக்கத்தக்க ஒருவனாக இருப்பானோ?  அப்படி என்றால் இந்த அவமானத்தை அவன் எங்ஙனம் எடுத்துக் கொள்வான்?  சொந்த ஊரில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அவமானப்படத் தேவையில்லையே என்று நினைத்திருப்பானோ? 
இன்னும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்,  அவன் நிலையில் நானும் என் நிலையில் அவனும் இருந்தால் என்ன ஆகும் என்று.  நான் எதுவும் செய்திருக்க மாட்டேன். அவனைப் போலவே அமைதியாய் நகர்ந்து சென்றிருப்பேன்.  ஆனால், என்னால் திருப்பி என்ன என்று கூட கேட்க முடியவில்லையே என்று, என் இயலாமையை எண்ணி நொந்திருப்பேன்.  கண்கள் கட்டாயம் சில துளிகளையாவது சிந்தியிருக்கும்.
ஏன் அப்படி ஒரு கோபம் கொண்டேன் என்று எனக்கே, என் மேல் கடுப்பு.  அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் ஒன்று, நம் ஈகோவைக் கொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளித் தான் அமர்ந்திருந்தான்.  கடைசிவரை அவன் கண்களைக் கூட சந்திக்க முடியவில்லை.  குற்றவுணர்வுள்ள எனக்கே இப்படி என்றால், அடிபட்ட அவன் எப்படி இருந்திருப்பான்.



மேற்கண்ட இரு சந்தர்ப்பங்களிலும், என் பிழை மிக மிக வெளிப்படையானது.  என் தரப்பை இன்னும் என் மென்மையாகச் சொல்லியிருக்க வேண்டும்.  சொல்லப் போனால் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.  இந்நேரம் அவர்கள் இருவருக்கும் நம் சூழலைப் பற்றி என்னால் ஒரு எதிர்மறையான உண்டாகியிருக்கும்.  இது உண்மையோ இல்லையோ? ஆனால், என்னால் அவர்கள் சங்கடப் பட்டிருப்பார்கள்.  இனி நான் எப்போதும் இப்படித் தவறியேனும் செய்வதில்லை.

Friday, 11 December 2015

அட்ரிலினும் - அன்பும்

என் அலுவலகத்தில் பிராமணர்கள் அதிகம்.  இதைக் கண்டறிய தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதும் போல அவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும் விதமாக, தனித்துவமான மொழியைப் பேசுவதாகட்டும், ‘அய்யோ, நான்-வெஜ்ஜா’ என்பதாகட்டும், இப்படி வெளிப்படுத்திய வண்ணம் இருப்பர்.  எல்லோரையும் போல் எனக்கும் அது அசூயையாகவே இருக்கும்.  இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும்.  ஒருபோதும் துவேஷத்தைக் காட்டுவதில்லை.

தங்களின் உணவுப் பழக்கத்தை அதிகமும் சிலாகித்துப் பேசிய வண்ணம் இருப்பர்.  எங்களிடம் ஒரு புராஜக்ட் ஒன்று உண்டு, ஆன்லைன் கறிக்கடை.  அதன் மேலாளர் அய்யர் பெண்மணி.  கேட்கவும் வேண்டுமோ?  கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் தன் ஒவ்வாமையை, மாமிச உணவின் மீதான தன் ‘உவ்வே’யை காட்டுவார்.  எனக்காகட்டும், அதில் வேலை செய்யும் என் நண்பனாகட்டும் சடாரென வெறுப்பு ஒன்று வந்து தொலைக்கும்.  நியாயம்தானே? இப்போதெல்லாம் அது கொஞ்சம் கொஞ்சமாக சரியில்லையோ என்று தோன்றியவாறு உள்ளது.  காரணம் இருக்கிறது.  

இடையில் ஒருநாள், அலுவலகத்திலிருந்து சாப்பிட வெளியே ஒரு ஜப்பானிய கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.  கடையின் பெயர் - மொமோ யொமா.  உள்ளே நுழைந்ததும் ஒரு வாசம்.  அது உணவுப் பொருள்களின் வாசம் என்பதை சாப்பிட ஆரம்பித்தபின் தான் தெரிய வந்தது.  நான், கிடைத்த எல்லா அசைவத்தையும் ஆர்ட்ர் செய்தேன், பன்றி, மாடு, மீன்(சுசி, டூனா) மற்றும் சிக்கன்.  அங்கு எனக்கு சில ஆச்சரியங்கள் இருந்தன.  தேநீர் குளர்ந்திருந்தது. அதுவும் துளி கூட இனிப்பின்றி, வெளிர் பச்சை வண்ணத்தோடு, சுவையும் மிக மிக மென்மையான கசப்பு.  அசைவ உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் அரைவேக்காடுதான். மாட்டுக்கறி நன்றாக இருந்தது.  பன்றிக்கறி இதுவரை நான் சாப்பிட்டதில் மிக மிக மென்மையான பன்றிக்கறி.  செம்பருத்தி இதழ்களைத் தின்பதைப் போல இருந்தது.  மீனை சமைக்கக் கூடாதாம், பச்சை மீனை இரண்டு விரல் அளவு  பிரட் துண்டின் இடையில் வைத்து இருந்தனர்.  வேகவைக்காதது என்று சொல்லியிருந்தனர். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை, மாடு மற்றும் பன்றிக்கறையைப் போல, அரைகுறையாக வேகவைத்திருப்பார்கள் என்று.  பிறகுதான் தெரிந்தது, சுத்தமாக வேகவைக்கப் படவில்லை.  பச்சை மீன் அப்படி இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.  கவிச்சை அடித்தது.  ஆனாலும் அதெல்லாம் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. சாப்பிடும் போது என் நாக்கை நானே சாப்பிடுவது போல ஒரு ருசி.  உப்பின் சுவை சமைக்கப் படாத இறைச்சியில் அதிகம் இருக்கும் போல.  மொத்தம் ஆறு மீன் துண்டுகள்.  இரண்டுக்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை.  மூன்றாவது துண்டை வாயில் வைத்தபோது, குமட்டிவிட்டது.  கவிச்சையெல்லாம் ஒரு பொருட்டல்ல, ஆனால் பச்சைக் கறியின் சுவையை என்னால் ஏற்கமுடியவில்லை.  எனக்கெல்லாம் உணவுப் பொருளும் குமட்டும் என்று கண்டுகொண்டேன்.  ‘நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே கூடுகட்டி வாழ்ந்தவன்’ என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடிதான்.

இதன்பின் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தேன், என் அருகே அமர்ந்திருந்த நான்கு சைவ பக்கிங்களின் நிலையை. ரொம்பக் கஷ்டம் தான்.  பாவம்.  அன்று முதல், அவர்களுடைய மாமிச உணவின் ஒவ்வாமையை என்னால் உணர முடிகிறது.  ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்த் திரைப்படங்களில் அய்யர்களை துக்கடாக்களாக, No: 1 காமெடிப் பீஸுகளாகக் காட்டியபடி தான் இருக்கிறோம்.  அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை.  ஆனால் இப்போது அதே போல மாமிசம் உண்பவர்களை, அவர்களின் கூட்டத்தில் இருந்து என்னைச் சொல்லும் போது புரிகிறது.  அன்றுமுதல் நான் வெறுமனே அவர்களை எள்ளல் செய்வதை விட்டொழித்துவிட்டேன்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பேணும் பொருட்டு அதை விடுத்த பாடும் இல்லை, சீண்டலின் போது நானும் மடக்குவதற்கான பேச்சுக்களைப் பேசியிருக்கிறேன்.  பிழைதான்.  செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நிற்க.

மாமழை ஒன்று எம்மைச் தழுவிச் சென்றிருக்கிறது.  அது ஏற்படுத்திய விளைவுகள் பலவேறு மனக்குழப்பங்களையும் மனத்தெளிவுகளையும் எல்லோரிடத்திலும் உண்டாக்கியிருக்கிறது.  குழப்பங்களாக சொல்வதென்றால், அரசியல் நடவடிக்கைகளும், மீடியா குவிந்ததும், வட இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளும், நம்முடைய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், அதனால் நாம் அடைந்த விளைவுகளும், வெள்ளத்தின் முதல் இரண்டு நாட்களில் சில கடைக்காரர்கள் கொள்ளை விலைக்கு விற்றதும் மற்றும் இன்னபிற.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களினால் தான் நம் கீழ்மைகளும் மேன்மைகளும் ஒருசேர வெளிப்படும்.  அனைவரின் மனச்சாட்சியோடும் இம்மழை ஒரு மாபெரும் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறது.  அதை தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், களப்பணியார்களின் பேட்டிகளும் காட்டிய வண்ணம் உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா மக்களும் இருந்திருப்பார்கள் தானே?  வீட்டில் சமைக்க இயலாத பல ஏரியாக்களில் முதலில் வீதியில் அடுப்பை ஏற்றியது அய்யர்கள் தானாம்.  கேள்விப்பட்ட போது ஒருவகை நெகிழ்ச்சி ஏற்பட்டது.  பொதுவாக பொதுப் பிரச்சினைகளுக்கு தெருவிலிறங்கிச் செயல்படுவது ஒருவகை பொறுக்கித் தனம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்பது என் கணிப்பு.  

நாய் விரட்டம் போது, தாண்ட முடியாத பள்ளத்தையும் தாண்டி விடுவோம்.  அதுபோன்ற அசாதாரண சம்பவங்களின் போது நம்முடைய சுரப்பிகளில் ஒன்றான ‘அட்ரலின்’ சுரந்து அப்படி ஒரு வேகத்தையும் ஒரு  உச்சகட்ட விழிப்புத் தன்மையையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.  அப்படி ஒரு விழிப்புத் தன்மையை கடந்த சில வாரங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளேயும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதைப் பார்க்கையில் சிறு நெருப்பும் ஒளியும் தென்படுகிறது. பாரதி பிறந்தநாளான இன்று, அந்நெருப்பை அணையாமல் காத்து, சுயநலக் காட்டில் வைப்போம். வெந்து தணியட்டும் அக்காடு.  இப்பதிவை ஆரம்பித்த போது, இன்று பாரதியின் பிறந்தநாள் என்பதே என் நினைவில் இல்லை.  ஆகவே யாரும் இப்பதிவின் தொடக்கத்தைக் கொண்டு பாரதியை இணைப்பதாக எண்ண வேண்டாம்.  அவர் அமைப்புகளுக்குள்ளும் வீண் ஜம்பத்துக்குள்ளும் அடங்காதவர்.


வாழ்க பாரதி.

Sunday, 29 November 2015

தேங்கிவிட்டோமா?





நொபுரு கரோஷிமா - இந்தப் பெயரை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.  யாரென்று தெரய வந்த பின் வெட்கத்தால் வெம்முகிறேன். இம்மாதம் 26-ல் இறந்து போயிருக்கிறார்.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.  பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

ஜப்பானியர்.  24 ஏப்ரல் 1933-ல் பிறந்திருக்கிறார்.  வரலாற்றுத் துறைப் பேராசிரியராக்ப் பணியாற்றிருக்கிறார்.  இவருடைய ஆய்வுகள் தென்னிந்தியாவைச் சார்ந்து அதிலும் தமிழக வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.  நானும் அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் நம் வரலாறே.  தெற்காசிய வரலாற்றாசிரியர் என்று அவர் குறிப்பிடப்பட்டாலும், பண்டைய தமிழக வரலாறு சார்ந்தே அமைந்திருக்கிறது அவருடைய ஆய்வுகள்.  வரலாறு எப்போதும் கடந்த காலத்தின் தரவுகளின் மூலம், எதிர்காலத்தைக் கண்டடைய முயல்வதின்றி வேறில்லை. எனவே வரலாற்றினை அரசியலுக்காக படிக்காமல், சரிவரச் செய்வோர் எப்போதும் சமரசமில்லாத ஆட்களாகவே இருப்பர்.  எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் சிலர் அப்படி இருந்துள்ளனர்.  கல்லூரியில் ‘Religious Docotorine’ எடுத்த பாதிரியார் தம்புராஜ் அப்படிப் பட்டவர்களில் ஒருவர்.  திருச்சபையின் வரலாற்றைத் தெளிவுறச் சொன்னவர்.  அப்படிப் பார்க்கையில், நொபுரு கரோஷிமா இன்றைய நம் அரசியல்வாதிகள் சொல்லும் வரலாற்றைக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார் போலும், தன் தரவுகளால்.  தீவிரமான மாற்றுப் பார்வை ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.  எவரும் மறுத்தது போல் தெரியவில்லை.  ஆனால், மௌனமாக, காரணமின்றி நிராகரிக்கப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.  

நான் சொல்லப் போகின்றனவற்றை நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம்.  ஏன், மேலதிகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.  நானும் அங்கிருந்தே தெரிந்து கொண்டேன்.  ஆனாலும், என் தெளிவுக்காக பின்வருமாறு தொகுத்துக் கொள்கிறேன்.

  1. உலகத் தமிழாராய்ச்சிக் நிறுவனம்(IATR - உ.த.நி) பல தமிழ் அறிஞர் பெருமக்களின் பெருமுயற்சியால் 1964-ல் நியூ டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கிறது.  அதன் முதல் அமர்வு 1966-ல் கோலாலம்பூரில் நடந்திருக்கிறது.
  2. உ.த.நி. தொடக்கத்தில், முக்கிய ஆளாக இருந்தவர், தனிநாயகம் அடிகளார்.  இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பாதிரி.
  3. 1967-ல் தி.மு.க. தேர்தலில் வென்று அண்ணாத்துரையின் தலைமையில் ஆட்சிப் பீடம் ஏறுகின்றது.  1968-ல் சென்னை(மதராஸ்)யில் நடப்பதாக முன்னமே திட்டமிடப்பட்டிருந்த உ.த.நி.ன் அடுத்த அமர்வு, ஆட்சி மாற்றத்தால், அரசியல் சாயம் சற்றே பூசப்பட்டு விடுகிறது.  ஆனால், அதன் வீச்சு வெறுமனே அரசியலாக மட்டும் இல்லை என்பது மட்டும் தெளிவு.
  4. அதன் அடுத்தடுத்த அமர்வுகளும் அவ்வாறே.  1981-ல் மதுரை(அ.இ.அ.தி.மு.க - எம்.ஜி.ராமச்சந்திரன்), வரும் தேர்தலுக்கான விளம்பரமாக, ‘பாரு என் வெயிட்ட’ என்பது போலவே நடந்திருக்கிறது.  1985-ல் கோலாலம்பூர்(அ.இ.அ.தி.மு.க-எம்.ஜி.ராமச்சந்திரன்) - அதே வேலை.
  5. ஏழாவது அமர்வு, 1989-ல் மொரீஷியஸில் நடந்திருக்கிறது.  நொபுரு கரோஷிமா, இதில் கலந்து கொள்ளவில்லை.  இந்த அமர்வில் அவர் உ.த.நி.ன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
  6. எட்டாவது அமர்வு, 1995(அ.இ.அ.தி.மு.க - ஜெயலலிதா)-ல் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது.  உ.த.நி. ஒருங்கிணைத்திருக்கிறது, நொபுரு கரோஷிமாவின் தலைமையில்.  அரசியல் நிகழ்வுகளையும், அமைப்பின் நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க முயன்றதாகச் சொல்லியிருக்கிறார்.  நமக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று?
  7. ஒன்பதாவது அமர்வு, ஜூலை, 2010(தி.மு.க.- கருணாநிதி)-ல் கோயம்புத்தூரில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசின் சார்பில், நொபுரு கரோஷிமாவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப் படுகிறது.  அதற்கு பதிலாக, மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். அவை,
    1. நான்கு மாதங்கள் என்பது வெகு குறைவு.  இன்னும் ஒரு ஆறு மாதங்கள் சேர்த்துக் கொண்டு, 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் ஏற்பாடு செய்வது சிறந்தது.
    2. அரசியல் நிகழ்வுகளும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது.
    3. 1995-ல் நடந்த எட்டாவது அமர்வில் முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் வெளியிடத் தயாராக 2005 முதல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய, அதாவது 2010-ன் தமிழக அரசு, வெளியிடுவதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுக் கொண்டிருந்த போதும்.
நொபுரு கரோஷிமாவின் முதல் கோர்க்கையைத் தவிர மற்றவை ஏற்கப்பட்டன.  காரணம் நமக்குத் தெரியாதா என்ன? 2011-ல் தேர்தல்.  ஏற்கனவே இலங்கைப் பிரச்சினையில் மூக்கடி பட்டாயிற்று.  அந்த வலிக்கு, இவ்விழாவினைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முயன்றிருப்பார்கள் போல. 

நிற்க.

நொபுரு கரோஷிமா, தமிழுக்கான ஆராய்ச்சியில் புதுப்போக்குகளை திறந்து விட்டிருக்கிறார்.  நான் இன்னும் படித்து அவரை அறியவில்லை.  அவர் தலைமைப் பொறுப்பேற்றது முதல், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கிறது.  எம்.ஜி.ஆர். மதுரை அமர்வை, தன் அடுத்த தேர்தலுக்கான பலம் காட்டும் போட்டியாகவே எண்ணி நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதியும் அஞ்ஞனம்,  ஆட்சி முடிவதற்குள், தான் முன்னின்று, அவ்விழாவினை தன் வாழ்வில் ஒருமுறை நிகழ்த்த ஆசைப்பட்டு நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதி, விழாவுக்கு முன், தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொன்னார்.  அதையே சொல்லி லியோனி புகழ்ந்ததையும் காணும் பேறு பெற்றவர்கள், நாம்.

நொபுரு கரோஷிமா, 2010-ல் தான் பதவி விலகியிருக்கிறார்.  காரணம் என்னவென்று சொல்லத்தான் வேண்டுமோ?  மனம் வெறுத்து, இயன்றதைச் செய்வோம் என்று இருந்தவர், போதும்டா சாமி என்று போயிருக்கிறார்.  இன்னொரு மனம் வருந்தச் செய்யும் செய்தி, அவருடைய நூல்களில் ஒன்று கூட இன்று வரை மொழிபெயர்க்கப் படவில்லை.

ஒரு மொழிக்கு, அதன் நிலவியல், பண்பாடு, அரசியல், மற்றும் கருத்துத் தளம் சார்ந்து ஆய்வுகள் அமையப் பெற வேண்டும்.  ஏனெனில், ஆய்வுகள் மறுப்பாய்வுகளை உண்டாக்கும். ஆய்வுகளும் - மறுப்பாய்வுகளும், உரையாடல் மூலம் கருத்தை உண்டாக்கும்.  அது, நாம் இனி செல்ல வேண்டிய பாதையைத் தெளிவுறக் காட்டும்.  அதுசரி, பெரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரின் ஆய்வு நூல்களே இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் போது, மறுப்பாய்வு எப்போது? உரையாடல் எப்போது?

என் எளிய வினாக்கள் சில.  நொபுரு கரோஷிமாவின் மரணச் செய்தி, ஏன் என்னைப் போன்ற சாமானியனைச் சென்றடையவில்லை? நாளேடுகள் செய்திகள் வெளியிட்டிருக்கலாம்.  சாமானிய நாளேடுகளாக அறியப்படும், தினத்தந்தி போன்றவற்றில் இதன் வீச்சு அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை?  எதற்கெடுத்தாலும் கூட்டம் போடும்/நடைபயணம் மேற்கொள்ளும்/அறிக்கை விடும்/கடிதம் எழுதும், நம் நலத்தை நம்மை விட அதிகம் விரும்பும், நம் அரசியல்வாதிகள் எங்கே? அல்லது, இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதை நாம் நிறுத்திக் கொண்டுவிட்டோமா? ஆர்வமில்லையோ?

என் பயங்கள் சில.  
தமிழ், இதே வீச்சோடு எம் தமிழ் நிலத்தில் வாழுமா? இல்லை, தமிழின் எதிர்காலம், தமிழகம் அல்லாத, தமிழர் வாழும் நாடு / பகுதியா?  அரசியல் கலக்காத தமிழ் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், அரசியலால் தமிழ் அழுக்கடையாமல் / மங்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?  
தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்கப் பட்டிருக்கலாம்.  ஆனால், பாதிக்கப்படவில்லை என்று சொல்வதற்கான முகாந்திரம் இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது.  இருக்கலாம்.  தமிழ் தவிர்த்து, ஆங்கிலம் மட்டும் உரையாடல் மொழியாக இருக்கும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க துடிக்கும், எம் இனம் தேடுவது எதை?  இரண்டாம் மொழியாகக் கூட, தாய்மொழியை எடுக்காமல் பிற மொழியை தேர்வு செய்யும் கூட்டம் சொல்ல வருவது என்ன?  மொழியும் ஒரு அடையாளம் என்பதை மறந்துவிட்டோமா?

நிற்க.

பின்னகரவில்லை நாம்.  அதே நேரம், நாம் முன்னோக்கியும் நகரவில்லை.  ஓடும் வரை தான் நீரும், மொழியும் சுத்தமாக இருக்கும். தேங்கினால்?  சகதி. பின் சதுப்பு. சதுப்பிலிருந்து காலை எடுப்பது அவ்வளவு எளிதில்லை. அவ்வப்போது யோசித்துப் பார்ப்போம். தேங்கிவிட்டோமா நாம்?

நொபுரு கரோஷிமாக்கு அஞ்சலி.  ஆங்கிலத்தில் அவர் பேட்டி ஒன்று உள்ளது.  அது சொல்லட்டும் அவர் வாழ்நாள் கருத்தை. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece


உதவிய இணைப்புகள்:

  1. http://www.jeyamohan.in/81216
  2. https://en.wikipedia.org/wiki/Noboru_Karashima
  3. http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=180&Itemid=253
  4. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
  5. http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

Wednesday, 25 November 2015

தோல்வாடன்



அப்போது நான் இரண்டாம் வகுப்பு. எங்கள் பள்ளிக்கூடம் ஊரின் மந்தைக்காட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது.  கல்வியையும் கழிவு என்று எண்ணியிருப்பர் போலும்.  என் வீட்டிலிருந்து ஐந்து தெரு தூரம்.  அதைக்கூட கடக்க குறுக்கு வழி ஒன்றை வைத்திருந்தான் சுந்தரம்.  மூன்றாவது தெருவில் உப்புக் கேணி ஒன்று உண்டு. அதை யாரும் புழங்குவதில்லை.  எனவே அதை ஒட்டிய சந்தும் ஆளரவமற்று இருக்கும்.  இளவட்டக் கூட்டம் ஏதாவது ஒன்று அங்கே மதுவருந்திக் கொண்டிருக்கும்.  என் அம்மா, ‘உப்புக் கேணி வழியா, அந்தப் பய சொன்னான், இந்தப் பய சொன்னான்னு போக்கூடாதுடா’ என்று சொல்லியிருந்தாள்.  நானும் போவதில்லை.  சுந்தரம் அதைத்தான் குறுக்கு வழியாக்கியிருந்தான்.  

நான் தொத்தலாக பாவம் போல் இருப்பேன். எனவே, பள்ளியில் பலரும் என்னைச் சீண்டியவண்ணம் இருப்பர்.  வினோத் ஒருநாள் நான் அமரும் இடத்தில் சாக்பீஸால் வட்டம் போட்டு வைக்க, அதில் நான் அமர்ந்தெழ, என் டிரவுசரின் பின்பக்கம் சாக்பீஸ் அச்சு விழுந்துவிட்டது.  அது எனக்குத் தெரியாது.  நான் எழுந்து நடக்கும்போது மொத்த வகுப்பும் ‘க்ளுக்’கென்று சிரித்தது. அன்று ஜட்டி போடவில்லை. எனவே டிரவுசரின் பட்டனைப் போட்டோமா? என்று சரிபார்த்துக் கொண்டேன். சரியாகத்தான் இருந்தது.  எப்படிப்பட்ட ஜோக்குக்கும் சிரிக்காத, போதும் பொண்ணு ‘ஓட்டைக் குண்டி’ என்று சிரித்துக் கொண்டே கத்தினாள்.  அதற்காகவே காத்திருந்தது போல மொத்தப் பேரும் ‘ஓட்டைக் குண்டி’, ‘ஓட்டைக் குண்டி’ என்று கத்த ஆரம்பித்தனர்.  எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.  இது எதிலும் பங்கெடுக்காமல், தன் பொன்வண்டோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரம், என்னிடம் இரங்கி ‘அழுவாதடா’ என்றான்.  எங்கள் எல்லோருக்கும் அவன்மேல் ஒரு பயம்.  எங்களை விட அவன் மூன்று, நான்கு வயது மூத்தவன்.  பிரச்சினை என்னவென்று என்னிடம் கேட்டு, வினோத்துக்கு ஒரு அறையும், போதும் பொண்ணுக்கு ஒரு பலத்த கொட்டும் வைத்தான். அவள் அழுதுகொண்டே பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் புகார் செய்து விட்டாள்.  அவர் வந்து எதையும் விசாரிக்காமல், சுந்தரத்தை பிரம்பால் பலமாக அடித்துவிட்டார். அன்றுமுதல் அவன் என் நெருக்கமான நண்பனாகினான். குறுக்கு வழியில் நானும் அவனோடு சேர்ந்து வரத்தொடங்கியிருந்தேன்.

சுந்தரம் பீடி குடிப்பான் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.  ஆழமாக இழுத்து அநாயாசமாக வெளிவிடுவான், ஒரு தேர்ந்த சமயற்கலைஞன் கரண்டியை பயன்படுத்துவதைப் போல.  அப்படியான நாளொன்றில் என்னையும் குடித்துப் பார்க்கச் சொன்னான்.  முதலில் பயத்தில் மறுத்தாலும், எனக்கும் புகைத்துப் பார்க்க ஆசைதான்.  வாயில் பீடியை வைத்தேன்.  சுந்தரம் எனக்கான தீக்குச்சியை கொளுத்தி என் வாயருகே கொண்டு வந்தான்.  நான் பத்த வைப்பதற்காக என் தலையை முன்னகர்த்தினேன்.  அப்போது முரட்டுக் கை ஒன்று என் வாயிலிருந்த பீடியைப் படுங்கிப் போட்டது.  நிமிர்ந்து பார்த்தால் கருத்த உதடு வெளுத்துப் போன நெடிய மனிதர்.  காரைப்பற்கள் தெரிய, சிரித்தபடி நிற்கும் பயமுறுத்தும் உருவம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.  அவரை நான் பலமுறை அச்சந்துக்குள் பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட அவரை அங்கிருந்த எல்லா மதுவருந்தும் குழுவுடனும் பாரத்திருக்கிறேன்.  ‘பீடியெல்லாம் குடிக்கக் கூடாது சாமி, செத்துப்போவோம்’  என்றார்.  சுந்தரம் ‘நீ மட்டும் சாராயம் குடிக்கிற, போயல போடுற’, என்று ஒரு தோரணையோடு கேட்டான். அதற்கு அவர், ‘அதனாலெல்லா உசுரு போகதுய்யா. ஏன்னா போயல, சராயம்லா நம்மகூட பத்து ஆள் இருக்கமாதிரி  பெலங்கொடுக்குமப்பா.  ஆனா, பீடி அப்பிடி இல்ல. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  ‘போடா புடுக்கு, போடா புடுக்கு ’  என்று கத்திக் கொண்டு எல்லோரும் ஓடிவிட்டோம்.  கொஞ்ச தூரம் துரத்தி வந்தபின், சிரித்துக் கொண்டே, வேட்டி மடிப்பிலிருந்து நழுவிய புகையிலையை வாயில் அதக்கிய வண்ணம் திரும்பிச் சென்றார். 

அடுத்தநாள் சுந்தரத்திடம் அவர் சொன்னதைப் பற்றிக் கேட்டேன். அவன், ‘பொய் சொலரான்டா’ என்றான். ‘பெயர் என்ன?’ என்றேன். ‘தோல்வாடன், ஆனா நம்ம புடுக்குன்னு வச்சுக்குவோம்’ என்றான். அதைக் கேட்டு கெக்கபிக்கே கெக்கபிக்கேவென்று சிரித்தோம். அந்த வார்த்தைக்குள் தாளலயம் இருப்பதாய்ப்பட்டது அப்போது. ‘தோல்வாடன்’. அது காரணப் பெயரா இல்லை இடுகுறிப்பெயரா என்று யாருக்கும் அக்கறை இல்லை. தோல்வாடன் என்றே அவன் அழைக்கப்பட்டான்.  உரமேறிய கை கால்களுடன் சராசரிக்கும் சற்றும் அதிகமான உயரத்துடன் இருப்பான்.  கொத்தன் அவன். புகையிலையால் காரையேரிய பற்களுடன், கிராமத்து எளிய மனிதனின் சிரிப்போடு இருப்பான். அப்போது அவனுக்கு நாற்பதை ஒட்டிய வயது.  யாரும் மரியாதயையாய் அழைத்துப் பார்த்தில்லை என்பதாலோ என்னவோ இப்போது வரை ‘அர்’ விகுதி வரமாட்டேன் என்கிறது.  ஜாதியின் காரணமாக அவன் எள்ளளோடு பார்க்கப் பட்டாலும், வேலைத் திறமையில் அவன் ஓர் சக்கரவர்த்தியாகவே அனுகப்பட்டான், சம்பளத்தைத் தவிர.  

அவன் திறமையைக் கேள்விப்பட்ட பின் அவன் போக்குகளை கவனிக்கத் தொடங்கினேன்.  அடிக்கடி டீக்கடையில் அமர்ந்து, வாய் பார்த்துக் கொண்டோ அல்லது உரத்துப் பேசிக்கொண்டோ இருப்பான்.  சின்னப்பன் சித்தப்பாவும் நடராசு மாமாவும் தான் அவனோடு கொஞ்சம் சகஜமாகப் பேசும் ஆட்கள்.  இன்னொன்றையும் அப்போது தான் கவனித்தேன்.  ஒருபோதும் அவன் சம்மனங்காலிட்டோ, காலைத் தொங்கப் போட்டு அமர்ந்ததில்லை.  குத்துக் காலிட்டே அமர்ந்திருப்பான், சாப்பிடும்போது கூட. அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். எப்படி இவன் வெளிக்கிருப்பது போல் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிறான் என்று.  பின்னாட்டகளில் தான் தெரிய வந்தது அவனும் அவன் தெருவைச்சேர்ந்தவர்களும் அப்படியே அமரப் பழக்கபட்டிருந்தனர்.  ஆனால், என்னுடன் படித்த பாண்டி அப்படி அமர்வதில்லை.  யாரையும் சாமி என்றும் அழைப்பதில்லை.  நான் வெளியூர் சென்று படிக்க ஆரம்பித்தபின், ஒருநாள் டீக்கடைக்கு டீ வாங்கச் சென்றேன்.  ‘குஞ்சு, வெளியூரில் படிக்குதா?’ என்றென்னை விசாரித்தார். குஞ்சு என்பது என் வீட்டுப் பெயர்.  ஆமென்றேன்.  அப்போதும் குத்துக்காலிட்டு, புகையிலையை வாயில் அதக்குவதற்கு ஏதுவாக கையில் கசக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண், தன் இரண்டு பிள்ளைகளோடு டீக்காக காத்திருந்தாள்.  கோமதி. எனக்கு அத்தை முறை.  தோல்வாடன் கசக்கிக் கொண்டிருந்த புகையிலையைக் கீழே போட்டுவிட்டு கையிலிருந்த பிளாஸ்டிக் காகிதத்தில் இருந்த ஆசைச் சாக்லைட்டை அப்பிள்ளைகளிடம் நீட்டினார்.  குழந்தைகள் ஆவலாய் கையை நீட்டின.  அதைத் தட்டிவிட்ட அதன் தாய், ஏசத்தயங்கும் வாரத்தை ஒன்றை அவனை நோக்கி வீசிவிட்டு, வெடுக்கென தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.  எந்த ஏச்சுக்கும் சிரித்தபடி இருக்கும் தோல்வாடன், சரட்டென அவ்விடத்தை காலி செய்துவிட்டான்.  இறுகிய வாயை அவன் வைத்திருந்தான் அப்போது. 

சில நாட்களுக்குப் பின் தெரிய வந்தது, அப்பெண் அவனை இளமைக்காலத்தில் அவனைச் சுற்றி வந்தவள் என்று.  திரட்சியான கை கால்களைக் கண்டால் எவர் பார்வையையும் கவரத்தானே செய்யும்.  தோல்வாடனை கோமதி கண்டது அப்படித்தான்.  வன்னியர்களும் சக்கிலியர்களும் அவ்வப்போது இழுத்துக் கொண்டு ஓடுவது அங்கே வழக்கம் தான் என்றாலும், சென்றவர்கள் திரும்பி வருவதில்லை.  வந்தவர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் காரணம்.  அவள் வன்னியச்சி.  அதெல்லாம் பிரச்சினையாய் இல்லை.  அவள் வீட்டில் கட்டிடம் கட்டும் வேலை ஒன்று வந்தபோது, அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு வந்திருக்கிறது.  அவள் தான் சீண்டியிருக்கிறாள்.  சாரத்தில் அவன் நிற்கும் போது, அடிக்கட்டையை ஆட்டி கிலியூட்டுவது, தண்ணீர் சொம்பை கொடுப்பது போல் கொடுத்து தண்ணீரை மேலே கொட்டுவது இப்படி.  அவனுக்கும் அவள் மேல் இஷ்டம் தான்.  காப்பு காய்த்த கைகள் மலரின் ஸ்பரிசத்தை நாடுவது இயல்புதானே.  அவனை அவள் அண்ணியும் நோக்கியது அவளுக்குத் தெரியாது.  இருவரும் ஒருநாள் படுக்கையில் கிடப்பதைக் கண்ட கோமதி, கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள்.  அண்ணி தற்கொலை செய்து கொண்டாள்.  ஊர்க்கூட்டத்தில் தோல்வாடனுக்கு கால்களுக்கிடையில் தான் அடி அதிகம் விழுந்தது.  அன்றோடு அவனுக்கி ஆண்மை போய் விட்டதாகவும் பேச்சு.  கோமதி வெளியூர்க்காரனைக் கட்டிக் கொண்டு போனாள்.

தோல்வாடனுக்கு உள்ளூரில் வேலை அதிகமும் வரவில்லை.  வெளியூர்க் கூட்டாளிகளும் மதிக்கவில்லை.  கூப்பிட்டவர்களும் பிச்சை போடுவது போலவே அவனை நடத்தினார்கள்.  அவனும் அதனால் வேலைக்கு ஆர்வம் காட்டவில்லை.  வயிறுதான் எப்பேர்ப்பட்ட வைராக்கியத்தையும் அசைத்துப் பார்த்துவிடுமே. உள்ளூரில் ஏவிய வேலையெல்லாம் செய்து வந்தான்.  நாங்கள் இப்போது இருக்கும் வீட்டைக் கட்டலாமென்று என் அப்பா சொன்னபோது, கொத்தனாக தோல்வாடனை முடிவு செய்திருந்தார்.  புண்ணியமாய் போகட்டும் என்று சொல்லிக் கொண்டார்.  பெரும் உற்சாகத்துடன் வேலை செய்தான்.  இடையிடையே, ‘குஞ்சுக்கு எப்புடிப் பட்ட வீட்டக் கட்டுறேன்னு பாத்துக்க’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டான்.  செம்மண் குழைத்துக் கட்டும் வீடு.  கூரையிலிருந்து ஓட்டுக்கு மாற இந்த வீடு.  அப்போதுதான் பார்த்தேன், வேலையில் அவன் உண்மையில் அரசன் அவன்.  சித்தாள்களை அவன் விரட்டும் தொணி சொல்லிவிடும் அவன் யாரென்று.  செம்மண்ணோடு மணலோடு நான்குக்கொன்றாய் கலக்கச் சொல்வான்.  வாயாடிச் சித்தாள் ஒருத்தி, பேச்சு சுவாரசியத்தில் அதிக மணலைக் கலந்துவிட, கலவைச் சட்டியை எட்டி உதைத்தான்.  ‘என்டி, ஐஸ்வரியம் பெருகனும்ன்னு சாமியக் கும்பிட்டுட்டு வீடு கட்டுறேன்.  சனியனாட்டம் கலவயக் கொண்டுவாற’ என்று கத்தினான்.  ஊரில் எல்லோரும் வாயைக் கொடுக்க பயப்படும் அவள், தோல்வாடனின் ஏச்சுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாதது எல்லோருக்கும் ஆச்சரியம்.  என் அம்மா ஒருவாரம் இதை சுவாரசியமாக சொல்லிக் கொண்டு திரித்தாள்.  கூலி கொடுக்கும் நாளொன்றில், என் அப்பா ’80 தான்டா தர முடியும்’ என்றார்.  தோல்வாடன், ‘சாமி, கொத்தனுக்கான கூலி உனக்குத் தெரியாததில்ல’ என்றான். அப்பா, ‘போனப் போவுதுன்னு, அஞ்சு ரூவா சேத்துத் தர்ரேன்’, என்றார் கறாராக.  அவன் மேற்கொண்டு பேசவில்லை.  கொத்தனுக்குக் கூலி 140 ரூபாய் அப்போது.  என் அப்பாவின் மேல் எப்போதும் இல்லாத அளவு வெறுப்பைக் கொண்டேன்.  எச்சிலைக் காறி அவர் முகத்தில் துப்ப வேண்டும் போல் இருந்தது.

மேற்கொண்டு, என் படிப்புக்காய் வெளியூர் போய் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஊருக்கு வந்தேன்.  திருச்சியில் மின்வாரியத்தில் வேலை.  அசிஸ்டன்ட் ஜூனியர் இன்ஜினியர்.  கையில் பணப்புழக்கம்.  ஓட்டு வீட்டை மச்சு வீடாகக் கட்ட வேண்டுமென என் மனைவி ஆசைப்பட்டாள்.  அதுவுமில்லாமல், அம்மா, அப்பா, மனைவி மற்றும் பையன் என ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அந்த முடிவு.  போதிய இடம் காலியாக இல்லாததால், பழைய வீட்டை இடித்தாக வேண்டிய நிலை.  வீட்டை இடிக்கும் நாள் அன்று, தோல்வாடன் அதிகாலையிலேயே வீட்டுக்கு, எதிர்ப்பக்கம் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தான்.  கிழட்டுத் தோல்வாடன்.  தொங்கிய தாடையும், ஆர்வமற்ற விழிகளும் கொண்டு ஒரு பரதேசி போல அமர்ந்திருந்தான்.  நான் சிரித்தபடி, ‘புது வீடு கட்டப் போறேன்.’ என்றேன்.  அவன் என்னைப் பார்க்கவுமில்லை.  நான் சொன்னதைக் கவனித்ததாகவும் தெரியவில்லை.  எரிச்சல் வந்தது.  ‘டேய் புடுக்கு’ என்று கூப்பிட வேண்டும் போல் இருந்தது.  ஆனால், செய்யவில்லை.  பார்ப்பதற்கு யாரோ போல் தான் இருந்தான்.  இதைப் பார்த்த என் அப்பா, ‘இப்பல்லாம் இப்புடித்தான்.  பேசுறது எதுக்கும் பதிலக் கணாம்.  சாப்பிட எதும் குடுத்தா வாங்குறதும் இல்ல.  குப்பய தான் பொறுக்கித் தங்கிறது. நெனவு தப்பிப் போச்சு.  அவே கட்டுன வீடு இடிக்கறதா இருந்தா மட்டும் எப்புடி தான் தெரியுமோ, போயிடுறான் இப்பல்லாம். அதான் நம்ம வீட்ட பாக்க வந்திருப்பான்.’, என்றார். 

வீட்டை இடிக்க ஆரம்பித்தோம்.  என் மகன் அவர் அருகில் அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான்.  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். செம்மண் வீதி எங்களுடையது.  தண்ணீர் ஊற்றிக் குழப்பி மேல் காலெல்லாம் அழுக்காக்கியிருந்தான்.  ஏனோ நான் அவனை அதட்டவில்லை.  ‘குஞ்சு வீடுகட்டுதா?’ என்றார் தோல்வாடன் என் மகனிடம்.  அவன் பதிலேதும் சொல்லாமல் அவரைப் பார்த்து  பல்லைக் காட்டினான்.  தரையிலிருந்த வேப்பங்குச்சியை பீடி குடிப்பது போல் வாயில் வைத்தான்.  பிடுங்கிக் கீழே போட்ட தோல்வாடன், ‘குஞ்சு, பீடிலாம் குடிக்கக் கூடாது. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’. நான் எனக்குத் தெரிந்த தோல்வாடனைக் கண்டு கொண்டேன்.  வீட்டை இடிக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.  இடிக்க முடியாமல், சைக்கிள் செயினைக் கொண்டு இரண்டு பேர் சுவரை அறுத்துக் கொண்டிருந்தனர்.  ‘ஒக்காளி, சிமுண்ட விடக் கஷ்டமா இருக்கேடா’ என்ற உரையாடலுடன். வீடு முழுமையாக இடிக்கப் படும் வரை பார்த்து விட்டு, தன் புகையிலைப் பையைக் கையில் பிடித்தபடி போய் விட்டார்.


பின் என் மகனிடம், ‘அந்த தாத்தாட்ட பேசுனியாடா?’ என்றேன். அவன், ‘ஆமாப்பா, அவருக்கு ஒரு பேர் எழுதச் சொல்லிக் குடுக்கச் சொன்னார்ப்பா’ என்றான். ‘என்ன பேர்டா’ என்றேன். ‘கோமதி’ என்றான்.  நான் என் மனைவிக்குத் தெரியாமல் புகைபிடிக்க, வீட்டை ஒட்டிய சந்துக்குள் புகுந்தேன்.